ஏழைகளுக்குதான் எல்லா கட்டுப்பாடும், எதுவும் பணக்காரர்களை பாதிப்பதில்லை என பலர் சொல்லி வருவதை உச்ச நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது. சட்ட விரோதமாக ஏழைகள் குடிசை கட்டினால் இடித்துத் தள்ளும் அதிகாரிகள், பணக்காரர்கள் கட்டும் வானுயர்ந்த கட்டிடங்களை கண்டு கொள்வதில்லை என இடித்துக் காட்டியிருக்கிறது உ.நீ.ம.கொல்கத்தாவில் மாநகராட்சி அனுமதியை மீறி கட்டப்பட்டிருந்த பல மாடிக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பில்டருக்கு 25 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர். அதோடு அந்த கட்டிடத்தில் வீடுகளை வாங்கியிருந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த விலையை திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். "சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஏழைகளின் குடிசை வீடுகளும் ஓட்டு வீடுகளும் இடிக்கப்பட்டதாக தினமும் பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. ஆனால் பணக்காரர்களின் பல மாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டதாக இதுவரை எந்த செய்தியும் வந்ததில்லை. இதைப் பார்க்கும் போது, கடுமையான விதிமுறைகள் எல்லாம் ஏழைகளுக்குத்தான், பணக்காரர்களுக்கு கிடையாதோ என பலரும் நினைப்பதற்கு ஏதுவாகிறது. பணம் இருந்தால், உயர்ந்த இடத்தில் செல்வாக்கு இருந்தால் யாரும் எதுவும் செய்யலாம், தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் சட்டத்தை எளிதாக வளைத்து விடலாம் என நினைக்கும் சட்டவிரோத கட்டிடம் கட்டும் பணக்காரர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டாது" என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள். பெரிய நகரங்களில் கடந்த 40 ஆண்டுகளாகவே சட்ட விரோத கட்டிடங்கள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளன. நகரங்களின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு சாதகமாகவே உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்புகள் வழங்கி வருவதாகக் கூறியுள்ளனர்.சட்டவிரோத கட்டிடங்களை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள், குடிசைகள் என்றால் உடனே இடித்துத்தள்ளி விடுவார்கள். பல மாடிக் கட்டிடங்கள் என்றால் வாங்குவதை வாங்கிக் கொண்டு கண்டு கொள்ள மாட்டார்கள். அரசும் அதிகாரிகளும் செய்யத் தவறியதை, நீதிமன்றங்கள் செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஊருக்கு ஒரு பெரிய கட்டிடம் இருந்த இடம் தெரியாமல் இடிக்கப்பட்டால், எதிர்காலத்தில் சட்ட விரோத கட்டிடங்கள் உருவாவது குறையும் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment