2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) கூறிய ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு வெறும் யூகம்தான் என்றும், உண்மையில் அரசுக்கு ஏற்பட்டது பூஜ்ஜியம் இழப்புதான் என்றும் சொன்ன அதே அரசு இப்போது ரூ.31,000 கோடி "லெவி' விதிக்க முடிவு செய்திருப்பது ஊழல் நடந்தது உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதிலும்கூட, ஜிஎஸ்எம் பிரிவில், 4.4 மெகாஹெர்ட்ஸýக்கும் கூடுதலாக அலைக்கற்றையைப் பயன்படுத்தி வரும் நிறுவனங்கள், கூடுதலாகப் பயன்படுத்திவரும் அலைக்கற்றைக்கு, தற்போது ஏலத்தில் கேட்கப்படும் விலைக்கு ஏற்ப பணத்தைச் செலுத்த வேண்டும். இந்த ஒரு தடவைக் கட்டணத்தை (லெவி) செலுத்த விரும்பவில்லை என்றால், கூடுதலாகப் பயன்படுத்திவரும் அலைக்கற்றைத் தொகுப்பை இனி பயன்படுத்தக்கூடாது.
அப்படியென்றால் 4.4 மெகாஹெர்ட்ஸýக்கு உட்பட்ட அலைக்கற்றையை இத்தனை ஆண்டுகளாக- 2008 ஜூலை முதலாக - குறைந்தக் கட்டணத்தில் அனுபவித்து வருவதையும் அதனால் அந்நிறுவனங்கள் அடைந்த லாபத்தையும் அரசு கருத்தில் கொள்ளாதது ஏன்? அதிலும் ஊழல் நடந்திருக்கிறதோ என்னவோ, யார் கண்டது?
இவர்கள் நியாயமாகப் பெற்றிருக்க வேண்டிய மெகாஹெர்ட்ஸ் அளவு எவ்வளவு? இத்தனைக் காலம் கூடுதலான அலைக்கற்றையைப் பயன்படுத்தி அடைந்த லாபம் எவ்வளவு? இதுபற்றியெல்லாம் விவாதிக்காமல், தற்போது புதிய ஏலத்தில் என்ன கட்டணமோ அதையே செலுத்தினால் போதும் என்கின்றது அமைச்சரவை.
ஏற்கெனவே, சி.டி.எம்.ஏ. பிரிவு அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்திலிருந்து டாடா டெலிகாம் உள்பட இரு நிறுவனங்கள் விலகிக்கொண்டுவிட்டன. காரணம், அடிப்படை ஏலத் தொகை மிகவும் அதிகம் என்று கூறியுள்ளன. ஜிஎஸ்எம் பிரிவுக்கு ஏலம் இனிதான் நடைபெறவுள்ளது. ஏலத்தின் அடிப்படையில் "லெவி' அமையும் என்று இப்போதே அமைச்சரவை கூறிவிட்டதால், பழைய மற்றும் புதிய தொலைபேசி நிறுவனங்கள் அனைத்தும் கூட்டணி அமைத்துக்கொண்டு, ஏலத்தொகை உயராமல் பார்த்துக்கொள்ளத்தான் இந்த "லெவி' அறிவிப்பு உதவி புரியும்.
இந்த ரூ.31,000 கோடியும்கூட சிஏஜி குறிப்பிட்ட இழப்பு மதிப்பீட்டில் ஆறில் ஒரு பங்குதான். குறைந்தபட்சம் இதைப் பெறுவதற்கே இத்தனை ஆண்டுகள் நீதிமன்ற நடவடிக்கை மற்றும் ஊடகங்களின் நெருக்கடி தேவைப்பட்டது.
2ஜி வழக்கில் ஊழலை நிரூபிக்க வேண்டுமானால் வெளிநாடு மூலமாக, குறிப்பாக மோரீஷஸ் போன்ற நாடுகளின் மூலமாக இந்தியா வந்த கறுப்புப் பணத்தின் வழியைத் தேடிச்செல்ல வேண்டும். அதற்கு, வெளிநாட்டு அரசுகள் மற்றும் பெரும்பணக்காரர்களை விசாரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் வெட்கமில்லாமல் இத்தனை ஆண்டுகள் கழித்துச் சொல்கிறது சிபிஐ.
ஆனால் சிபிஐ, நீதிமன்றத்தில் இப்போது ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வோடாபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களுக்கு 8 மெகாஹெர்ட்ஸ் வரை அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாக வழங்கியவர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொலைத்தொடர்பு அமைச்சர் பிரமோத் மகாஜன் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு இது குறித்த உண்மையை அவர் மறைத்துவிட்டார் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏன் 4.4 மெகாஹெர்ட்ஸýக்கு அதிகமாக அலைக்கற்றை ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டது என்று யாரேனும் கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது என்பதற்காக இப்போதே களமமைத்துக் கொள்கிறது.
இவ்வாறு, பின்வாசல் வழியாக குறைகளைக் களைந்து, ஆனால் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் காப்பாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மட்டுமல்ல. ரூ.1.86 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டிலும் இதே வழிமுறையைத்தான் அமைச்சரவை கையாளத் தொடங்கியுள்ளது.
ஒதுக்கீடு பெற்றும் பணிகளைத் தொடங்கத் தவறிய, குறைகள் காணப்பட்ட 8 நிறுவனங்களின் நிலக்கரி வயல்கள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக நேற்றைய முன்தினம் மத்திய அமைச்சரவை அறிவித்தது.
குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் இத்தனைக் காலம் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு? இதற்காக இந்த நிறுவனங்கள் மீது தண்டம் விதிப்பதுதானே முறை. வெறுமனே ஒதுக்கீட்டை ரத்து செய்வது மட்டும் போதுமா?
தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டதும் நேர் செய்யப்பட்டுவிட்டன என்று காட்டிக்கொள்ளும் தீவிர அரசியல் கூத்துகளை நிகழ்த்தத் தொடங்கியுள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
அரசிடம் இருந்து குறைந்த கட்டணத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற நிறுவனங்களிடமே, கொஞ்சம் "லெவி' என்ற பெயரில் பணத்தைப் பெற்று, இழப்பை ஈடுசெய்யப் பார்க்கிறார்கள். நிலக்கரி வயல் ஒதுக்கீடுகளை ரத்து செய்கிறார்கள். அதையும்கூட முழுமையாகச் செய்யாமல், தொழிலதிபர்கள் பாதிக்கப்படாமல், அவர்களுக்கு வலி இல்லாமல் தண்டிக்கிறார்கள்.
அமைச்சர்கள் தவறு செய்ய அனுமதித்துவிட்டு, இப்போது தவறுகளும் ஊழலும் அம்பலப்பட்ட பின்னர், அதைச் சமாளிக்கும் நடவடிக்கைகளைச் செய்கிறது அமைச்சரவை.
மூன்று நாட்கள் முன்பு தில்லியில் நடந்த காங்கிரஸ் பேரணியில் பிரதமரும், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் ஊழலை ஒழிப்பதற்கு சூளுரைத்திருக்கிறார்கள். "சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போதுதான் அதை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றிருக்கிறோம்!
No comments:
Post a Comment