Tuesday, 13 November 2012

சிவகாசி: வெடிக்கு மருந்தாகும் மக்கள்

சிவகாசிக்கு அருகில் இருக்கும் முதலிப்பட்டியில் சமீபத்தில் நடந்த வெடி விபத்து அந்தப் பகுதியில் மிக சாதாரணமான ஒன்று. இந்த வெடி விபத்து நாடகத்தில் அனைவருக்கும் வெவ்வேறு கதா-பாத்திரங்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்த-வரை அது மலர் அஞ்சலி செலுத்தி, ஓட்டுகளை மனதில் வைத்து ஆறுதல் கூற வேண்டிய சந்தர்ப்-பம். அரசைப்  பொறுத்தவரை உடன் நிவாரணம் அறிவித்து அத்துடன் சில வெத்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய சந்தர்ப்பம்.

பத்திரிகைகளைப் பொறுத்தவரை ஒரு துரித செய்தியைச் சில தினங்கள் பரபரப்பாக வெளியிடும் ஒரு சந்தர்ப்பம். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு ஒவ்வொரு வெடி விபத்தும் ஒரு வாழ்வா சாவா போராட்டம். விவசாயம் பொய்த்துப் போய், நிலம் எல்லாம் வறண்டு பாலம் பாலமாக வெடித்துக் கிடக்க, தூக்குச் சட்டியில் பழைய சோற்றுடன் தினமும் 2.5 லட்சம் பேர் சிவகாசியின் பட்டாசு ஆலைகளில் வேலைக்குக் கிளம்புவார்கள். இவர்கள் தினமும் நல்லபடியாக வீடு திரும்பிவிடுவார்களா என்பதே கிராமத்தில் முடங்கிக் கிடக்கும் கிழடுகட்டைகளுக்குப் பொழுதெல்லாம் கவலைதரும் விசயம். திரும்பினால்தான் உத்தரவாதம் என்கிற அளவில் தினமும் சொற்பக் கூலிக்காக சட்டைப்பையில் வாய்க்கு அரிசியை சுமந்து திரிபவர்களாக மாறிப்போனார்கள் கரிசல் காட்டு மனிதர்கள்.

முதலிப்பட்டி விபத்தைத் தொடர்ந்த தினங்களில் திரும்பும் திசை எல்லாம் பிணங்கள். ஆம்புலன்சின் ஓலம் என சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை என எங்கும் அழுகையும் கண்ணீருமாக கூட்டம் கூட்டமாக உறவினர்கள் காத்துக் கிடந்தார்கள். சம்பவம் நடந்தது முதல் சாவு எண்ணிக்கை ஊடகங்களில் ஏறுமுகத்தில் தான் இருந்தது. இத்தனை பெரும் விபத்து என்றால் ஏறுமுகத்தில்தானே இருக்கும்? ஆனால் முதலிப்பட்டியில்தான் சாவு எண்ணிக்கை குறையத் தொடங்கிய அதிசயம் நிகழ்ந்தது. உலகில் முதல் முறையாக செத்தவர்கள் எல்லாம் உயிர் பிழைத்து தங்களின் கிராமங்கள் நோக்கி நடந்தார்கள். உறுதியாக இது உலக வரலாற்றில் பதிவு பெறத்தக்க நிகழ்வுதான். சாவு எண்ணிக்கை 70-80 வரை சில ஊடகங்களில் சென்றது, அதே எண்ணிக்-கையைத்தான் பல தொலைக்காட்சிகளும் தெரிவித்தன. இந்த விபத்தின் கோரத்தை அறிந்து தமிழக முதல்வர் அடுத்த நாள் காலை சிவகாசி வருவதாக அறிவித்தார். ஐந்து அமைச்சர்கள் விபத்து நடந்த அன்றே சிவகாசி விரைந்தனர்.

மருத்துவமனை இல்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என இந்தத் தொழில் சார்ந்த அனைத்தும் ஊடகங்களில் வெளிவந்தது. அடுத்த நாள் காலை முதல்வர் வருகிறார் என ஹெலிகாப்டர் இறங்கும் தளம் சுத்தம் செய்யப்பட்டது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சிவகாசிக்கு விரைந்தனர். திடீரென முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டது. அந்த நிமிடம் முதலே சாவு எண்ணிக்கையும் குறைந்து போனது. இந்தப் பட்டாசு கம்பெனி அதிமுகவைச் சேர்ந்த முருகேசனுக்குச் சொந்தமானது. அத்துடன் அவர் முக்கிய ஒரு பிரமுகருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் எனப் பலவித தகவல்கள் வெளியாயின. லட்சங்கள் அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் ஏராளமான பிணங்கள் புதைக்கப்பட்டன. சில்லையநாயக்கன்பட்டி, முதலிப்பட்டி, சல்வார்பட்டி, சங்கர்லிங்காபுரம் என இந்தக் கிராமங்களில் எங்கு நின்று பார்த்தாலும் பல பிணங்கள் கண்ணில் பட்டன.

முதலில் அரசு முதலிப்பட்டி ஓம்சக்தி ஃபயர் ஒர்க்ஸ் வளாகத்தைக் கைப்பற்றியது. அதனைச் சுற்றி பல வாரங்களுக்குக் கடும் வளையம் அமைத்து காவல்துறை பாதுகாத்தது. பாதுகாப்பு காரணங்கள் காட்டி யாரையும் உள்ளே அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் பின்  கனரக இயந்திரங்களை வைத்து மெல்ல மெல்ல தரை மட்டமாக, குவியல்களாகக் காட்சியளித்த 45 ஷெட்டுகளைத் தோண்டி எடுத்தார்கள். அதிலிருந்து பல பிணங்கள் வெளியேறியன. அதனை எல்லாம் அப்படியே மூடி மறைத்தார்கள். இந்த எண்ணிக்கையை அப்படியே சேர்த்தே புதைத்தார்கள். அருகாமை கிராமங்களில் வசிக்கும் விபரம் அறிந்தவர்கள் சாவு எண்ணிக்கை எப்படியும் 200க்கு மேல் இருக்கும் என்றார்கள். விபத்து நடந்த அன்று 314 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இப்படியான வெடி ஆபீஸ்களில் வருகைப் பதிவேடுகள் கிடையாது. செத்தவர்கள் யார் என்று கூட நீங்கள் அறிந்துகொள்ள இயலாது. நாடு முழுவதிலும் உள்ள முறைசாரா தொழில் இப்படித்தான் இயங்குகிறது. பல இடங்களில் நடக்கும் அடுக்குமாடிக் கட்டுமானப் பணியிடங்களில் ஒரே நேரம் 100 பேர் முதல் 500 பேர் வரை வேலை செய்வார்கள். ஆனால் அங்கே ஆவணங்கள், கோப்புகள், பாதுகாப்பு பயிற்சிகள் என ஏதும் இருக்காது. முதலிப்பட்டியில் வேலை செய்த 314 பேரில் எத்தனை பேர் வீடு திரும்பினார்கள் என்கிற கணக்கை இன்று வரை எடுக்க இயலவில்லை.

இதனை எல்லாம் விட புதிரானது, எந்த வெடி விபத்தால் இத்தனை பெரும் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டது என்பதே. கல்குவாரி வைத்திருந்த முருகேசன் அதன் பின்னர்தான் பட்டாசு கம்பெனியை வாங்குகிறார். இவை இரண்டும் அருகருகே உள்ளன. பட்டாசுக் கம்பெனியில் வெடிப்பு ஏற்பட்டவுடன் பெரும் கூட்டமாக சுற்றுவட்டாரப் பொதுமக்கள் அந்தப் பகுதி நோக்கி விரைந்தார்கள். அந்த சமயம் அருகில்  குவாரியில் இருந்த வெடிமருந்து அறையும் சேர்ந்து வெடித்ததாகவும் அதுதான் அந்த வெண்புகை கிளம்ப காரணம் என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இறந்தவர்களில் பலரது உடலில் மிகக் கூர்மையான காயங்கள் இருந்தது இதனை உறுதிப்படுத்தியது. இருப்பினும் இந்தக் கல்குவாரி விஷயம் அப்படியே வெளியாகாமல் அமிழ்த்தப்பட்டது. இந்தப் பட்டாசு தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தப்படும் வெடி மருந்து நம் ராணுவத்தில் உபயோகப்படுத்தப்படும் வெடிமருந்தை விட 20,000 மடங்கு வேகம் குறைக்கப்பட்டதாம். இன்றும் சீனாவில் இருந்துதான் புதுவித கலவைகளைக் கற்றுவருகிறார்கள். முதலில் இங்குள்ள பெரும் நிறுவனங்கள் இதனை அறிமுகம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் இந்தக் கலவையின் ரகசியம் மெல்ல கசிந்து வெளியாகும்.

இந்தச் சூழலில் நாம் அந்தப் பகுதியில் இருக்கும் பலருடன் உரையாடியபோது. பலரும் தங்கள் அருகாமையில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது அவர்களுக்குத் தெரிந்தே 4-5 பேர் இறப்பதாகத் தெரிவித்தார்கள். அதே வேளையில் நமக்கு ஜீ.பால்ராஜின்  தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாகப் பெற்ற ஒரு ஆவணம் நண்பர் செல்வம் அவர்கள் மூலம் கிடைத்தது. அதில் கடந்த பத்தாண்டுகளில் சிவகாசியில் வெடி-பட்டாசுத் தொழிற்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகள், தேதி, பெயர், மரணங்கள், காரணங்கள் என முழுத் தகவல்களும் கிடைத்தன. அதில் சாவு எண்ணிக்கை 400 என குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களின் கூற்றுப்படி பார்த்தால் அங்கே நடக்கும் விபத்துகளில் பத்தில் ஒன்றுகூட பதிவு செய்யப்படுவதில்லை. அதை முதலாளிமார் பணம் கொடுத்து மறைத்துவிடுவார்கள். அப்படியென்றால் சாவு எண்ணிக்கையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அதில் விபத்தின் காரணங்களாக அதிக அளவு எடை மருந்துக் கலவையை நிரப்புதல், அதிக வெப்பம், அலுமினியம் பேசின்களைத் தள்ளியதால், மருந்து கலக்கும்போது ஏற்பட்டது, இரசாயனக் கலவை மருந்து அதிக அளவு, முரக்காடியின் அடியிலும் பக்கவாட்டிலும் ஒட்டிக்கொண்டிருந்த நன்றாக உலர்ந்த கருப்புப் பவுடர் உராய்வினால் தீ பிடித்தது. இரும்புக் கத்தியை வைத்து தரையில் செங்கல் மேல் வைத்து திரியை வெட்டிய போது, திரி செய்வதற்குரிய கருமருந்து அலசும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட உராய்வு, இராசயனக் கலவையில் ரெட் பாஸ்பரஸ் உராய்வு, கலர்மணி கலவையின் ஈரத்தன்மை நீங்க உலரவைத்த போது, தொழிற்சாலையில் உற்பத்திப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பேன்சி வெடிகளை வெடிக்கச் செய்தபோது வெடித்துச் சிதறிய தீப்பொறிகள் தொழிற்சாலையின் தரையில் காயவைத்திருந்த மணிமருந்தின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது என அனைத்தும் அலட்சியத்தின் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இங்கு இல்லை என்பதையே நமக்கு உணர்த்துகிறது. இங்கே வருடா வருடம் இத்தனை உயிர்களை பலி கொடுக்கும் அரசும் அதன் நிர்வாகமும், நாங்கள் அணு உலையை மிகப் பாதுகாப்பாக நடத்தி விடுவோம் என மார்தட்டுகிறார்கள்.

வடக்கம்பட்டியில் இருக்கும் வி.பி.எம். வெடி ஆபீசில் 19 பேர் இறந்தனர். அதில் மூவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள். பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் வெடி ஆபீஸ்களில் வேலைக்குச் செல்வது மிகவும் சகஜமானது. நமஸ்கரித்தான்பட்டியில் கிருஷ்ணா ஃபயர் ஒர்க்ஸ், கீழதிருத்தங்கலில் அனில் ஃபயர் ஒர்க்ஸ், மீனம்பட்டியில் க்ளாசிக் ஃபயர் ஒர்க்ஸ் என விபத்துகள் தொடர்கதையாக நடந்து வருகின்றன.  சன்னார்பட்டி, சுக்குவார்பட்டி, ஆனைக்கோட்டம், காரிசேரி, விஜய கரிசல்குளம், தாயில்பட்டி, மீனாட்சிபுரம், ராமலிங்காபுரம், சல்வார்பட்டி, வெம்பக்கோட்டை என இந்தப் பகுதி முழுவதும் பல சட்டவிரோதமான வெடி ஆபீஸ்கள் உள்ளன.

செப்.2001ல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி பல நிபந்தனைகள் மற்றும் சட்டதிட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. வெடி வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு உள்ளாக 125 டெசிபெல்லுக்கு உள்ளாகவே ஒலி எழுப்ப அனுமதி உண்டு. மருத்துவமனைகள், பாட சாலைகள்,  நீதிமன்றம், வழிபாட்டுத் தளங்கள் அருகில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் வன இலாகாவில் 125 டெசிபெல்லுக்கு மேல் ஒலி எழுப்பும் வெடி மருந்துப் பொருட்கள் விற்பதோ பயன்படுத்துவதோ தடை செய்யப்பட்டது.20 வகை கனரகப் பட்டாசுகள் வெடிக்க தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வெடி வெடிக்க வேண்டும். இயற்கைக்கும் மனிதனுக்கும் மாசுவிளைவிக்கும் ஒரு சில பொருட்களான  காட்மியம், லெட், மாங்கனீஸ், சிங், சோடியம், நைட்ரேட், சல்பேட், கார்பன் மோனோக் சைட் போன்றவை பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. இந்தத் தடைகளுக்குப் பின் அதிக ஒலி எழுப்பும் வெடிகளின் தயாரிப்பு குறைந்து, அதிக வண்ணங்களுடனான பேன்சி ரக வெடிகள் தயாரிப்பு நோக்கி சிவகாசி திசைமாறியது. வியாபார லாபத்தை மனதில் கொண்டு பல நிறங்களிலான ஒளி, மிரட்டும் ஒலி என தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்களை அளவுக்கு அதிகமாக சேர்த்தே தயாரிக்கின்றார்கள். இதில்தான் மணி மருந்து, முனை மருந்து என பலவித மருந்துகள் நுழைந்தன. இவை எல்லாம் மிகவும் பாதுகாக்கப்பட்ட சூழலில் கையாளப்பட வேண்டியவை. ஆனால் யார் இதனை எல்லாம் முறைப்படுத்துவது? போதாக்குறைக்கு சிவகாசியில்தான் இந்தியாவின் மிகப்பெரும் வெடி ஆய்வு நிறுவனம் உள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகளின் தாரக மந்திரம் ஒன்றே. லஞ்சம், லஞ்சம். . . வண்ணமயமான லஞ்சம். சிவகாசியில் வருடத்திற்கு ஆயிரம் கோடிகள் வணிகம் ஈட்டித் தருகிறது இந்தப் பட்டாசுத் தொழில். ஆயிரம் கோடியில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? ஆனால் லாபத்தை சம்பளமாகவோ, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவோ பகிர முதலாளிகளுக்கு மனம் இல்லை.

இங்கு பணியாற்றுபவர்களுக்கு மூச்சுத் திணறல், டி.பி., வயிற்றுவலி, செரிமானக் கோளாறுகள், கண் எரிச்சல், தோல் நோய்கள் என அவர்களைச் சூழ்ந்துள்ள இந்தப் பிணிகள் எல்லாம் தொழில்சார் நோய்கள் என்கிற அறிதலே எவருக்கும் இல்லை. இதனை எல்லாம் கவனிக்க, ஆய்வு செய்ய என அரசாங்கத்தில் பல துறைகள் உள்ளன. ஆனால் அரசாங்கத்தின் பல பாகங்கள் புற்றுநோயால் சிதைந்து வருகின்றன என்பதை இது மாதிரியான வெடி விபத்துகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இந்த எல்லா பாகங்களுக்கும் சிவகாசியில் இருந்து மாமூலாக மாநிலம் முழுவதும் ஓசிப் பட்டாசு லாரிகளில் எல்லா திசைகளிலும் செல்லும்.

சிவகாசியில் உள்ள பாதி பட்டாசு கம்பெனிகள் எந்தவித உரிமங்களும் இல்லாமல் இயங்குபவையே. உரிமங்கள் உள்ள இடங்களிலேயே எந்தப் பாதுகாப்பு நடைமுறையும் இல்லை என்கிறபோது, இந்த இடங்களில் எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகிக்கலாம். இவர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். முதல் பணியிட வசதிகள் வரை எதுவும் கிடையாது. கழிப்பறைகள் கூட கிடை-யாது. பல இடங்களில் கழிப்பறைக் கட்டிடங்கள் இருக்கும். ஆனால் அதில் கூட சில ஆயிரம் கிலோ வெடி மருந்தை வைத்து ஒரு கிட்டங்கியாகவே பாவிப்பார்கள். சமீபத்தில் மதுரை கிரானைட் குவாரிகளில் நடந்த ரெய்டில் ஒரு கழிவறையில் ஒரு டன் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தீபாவளி என்றாலே வியாபாரம்தான். இந்த வியாபாரப் பண்டிகை வட இந்தியாவில் இருந்து மெல்ல மெல்ல பெரும் நகரங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இன்று எல்லா தொழில் குழுமங்களுக்கும் ஆண்டின் முக்கிய வணிகச் சந்தர்ப்பமாக மாற்றப்பட்டுவிட்டது. உலகமயத்திற்குப் பின்னர் உருவாகிய திடீர் பணக்காரர்களும் அவர்களுடன் ஆறாவது சம்பள கமிஷனின் ஊதிய உயர்வுகள் உருவாக்கிய மப்பும் மந்தாரமும் சமூகத்தின் பெரும் பகட்டான ஒரு வர்க்கத்தை உருவாக்கியது. இவர்கள்தான் இந்த வெடி-பட்டாசின் பெரும் நுகர்வோர்கள். தீபாவளிக்கு மட்டுமே விற்ற வெடிகளுக்கு இப்பொழுது வருடம் முழுவதும் பெரும் சந்தை உருவாகிவிட்டது. வீட்டு விசேஷங்கள், காது குத்து, பால்காய்ச்சுதல், அலுவலகத் திறப்பு, விருந்தினர் வருகை முதல் பிணத்தை தூக்கி சுடுகாடு செல்லும் வரை வெடிகளின் நுகர்வு பெருகிவிட்டது. இதில் பிற மதங்களும் மதப் பண்டிகைகளும் விதிவிலக்கு அல்ல. கவன ஈர்ப்பின் உத்தியாக மாறிவிட்டது வெடிகள். வெடிகள் - வாணவேடிக்கைகள் என்பது பகட்டின் சின்னம். அதனை நீங்கள் உங்கள் அண்டை வீட்டார், உறவினர், எதிரிகள் என அனைவரும் வெடித்த அளவைவிட ஒரு படி அதிகமாக வெடிக்க வேண்டும். இந்தப் பகட்டின் விளைவு, சிவகாசியில் பல உயிர்கள், சதைகள் பொசுங்கிப் போனது மட்டுமே.

இந்த விபத்துகளில் இறந்தவர்கள் எல்லாம் பெரும் நன்மை செய்தவர்களாகவே விளங்குகிறார்கள். அவர்களின் காதுகளில் இந்தப் பெரும் ஓசை முழுவதுமாகக் கேட்பதற்கு முன்பே அவர்களின் உயிர் பிரிந்திருக்கலாம் அல்லது மருத்துவமனைகளில் சில தினங்கள் இருந்து விட்டு அவர்கள் இந்த உலகை விட்டு விடை பெற்றிருக்கலாம். எப்படியானாலும் இந்த ஒவ்வொரு விபத்திலும் தப்பிப் பிழைத்து கை-கால் என பலவித ஊனங்களுடன் நிர்க்கதியாய் வாழும் ஆயிரக்கணக்கானவர்களின்  கதிதான் மிகவும் அவலமானது. வெடி விபத்துகளுக்குப் பயந்து பலர் தொடர்ந்து வெளி ஊர்களுக்குக் கிளம்பிய வண்ணம் இருக்கிறார்கள். கட்டிடத் தொழிலாளர்களாகவும் திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் பணிபுரிய தினசரி இரவு ஒரு கூட்டம் மெல்ல விசும்பிக் கிளம்பும் காட்சியை சிவகாசி பேருந்து நிலையத்தில் நீங்கள் தினமும் காணலாம். ஆனால், சிவகாசியில் நம்மவர்கள் சாவது போதாது என்று சமீபகாலமாக வட இந்தியர்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். கூட்டம் கூட்டமாக இவர்கள் கொத்தடிமைகளாக கந்தக பூமியின் சுட்டெரிக்கும் வெயிலில் தகரக் கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதலாளிகள் கொடுக்கும் 50 ரூபாய் சம்பளமும் ரேஷன் அரிசியையும் வைத்துக் குடும்பமம் குடும்பமாக பட்டாசு தொழிற்சாலைகளில் இவர்கள் வேலை செய்கிறார்கள். நான் சென்றிருந்த நாளில் ஒரு பெண்மணி பிராய்லர் கடையில் காத்திருந்து கழிவுகளை வாங்குவதை நான் பார்த்தேன். அவரிடம் பேச்சு கொடுத்ததில் இந்த சம்பளத்தில் இந்த கழிவுகளை தான் வாங்கி உண்ணுவதாகத் தெரிவித்தார்.

ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் முதலாளிகளுக்கு சிவகாசியில் சங்கம் இருக்கிறது. இந்த முதலாளிகளிடம் நன்கொடையை முறையாகப் பெறும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இந்த சதை பொசுங்கி சாகும் ஜென்மங்களுக்குதான் வாதாட ஒரு சங்கம் இல்லை. Explosives Act- 1884, Explosives Rules- 2008, Labour Act, Factories Act என சட்டங்களின் பக்கங்கள் எல்லாம் சிவகாசியைச் சுற்றியுள்ள சீமைக்கருவேல மரங்களில் தலையாட்டிச் சிரிக்கிறது. மறுபுறம் சிவகாசி பகுதியில் பணி செய்ய 25-&30 லட்சம் வரை முறையாக லஞ்சம் கொடுத்து முன்பதிவு செய்து பலதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வரிசையில் நாட்டுக்காக உழைக்க காத்திருக்கிறார்கள்.

அ. முத்துக்கிருஷ்ணன்

நன்றி: உயிர்மை  





No comments:

Post a Comment