சில விஷயங்களை சிலர் சொல்லும்போது எரிச்சல் கூட வரும். ஆனால் ஆழ்ந்து பார்த் தால் உண்மை இருக்கும். மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அடிக்கடி அப்படிப்பட்ட விஷயங் களை சொல்லி வருகிறார். சமீபத்தில் சொன்னது கழிப்பறை இல்லாத வீட்டை சேர்ந்த மணமகனுக்கு பெண்கள் கழுத்தை நீட்டக்கூடாது என்பது.இந்தியாவில் 58 சதவீதம் பேர் திறந¢த வெளியில்தான் இயற்கை உபாதைகளை கழிக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பும் யுனிசெப் அமைப்பும் கூறியுள்ளன. நம்மை விட மிகவும் சிறிய பாகிஸ்தானிலும் எதியோப்பியாவிலும் கூட 4.5 சதவீதம் பேர்தான் திறந்த வெளிக்கு போகிறார்களாம். திறந்தவெளியை பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயமல்ல. பல வழிகளிலும் நோய் பரப்பும் கிருமிகள் உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே இதை தவிர்க்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில்தான் அமைச்சர் ஜெய்ராம் கழிப்பறை இல்லாத வீட்டு மணமகனை திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என கூறியிருக்கிறார். பெண்கள் இரவு நேரத்தில் தனியாக வாய்க்கால், வரப்பு என வெட்ட வெளியில் செல்வதால் அவர்கள் சுய மரியாதை பாதிக்கப்படும். மேலும் அது பாதுகாப்பும் அல்ல எனக் கூறியிருக்கிறார். கழிப்பறை இல்லாத வீடுகளில் பெண்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பகலில் வயிற்றைக் கலக்கினாலும் பொறுத்துக் கொண்டு இரவு வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். இருட்டில் கண்டதையும் காலில் மிதிக்க வேண்டியிருக்கும். இதனால் சுத்தம், சுகாதாரம் பாதிக்கப்படும். நோய்கள் பரவும். உடல் நலம் பாதிக்கும். ரயிலில் ஒரு நாளைக்கு ஒரு கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். அதனால் உலகின் மிகப் பெரிய ஓப்பன் டாய்லெட் இந்திய ரயில்வேதான் என சொன்ன அமைச்சர், அதை தடுக்க ரயில்களில் பயோ டாய்லெட் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறார்.மத்திய பிரதேசத்தில் ஒரு பெண், மணமகனின் வீட்டில் டாய்லெட் இல்லாததால் மணமான நாலே நாளில் தாய் வீட்டுக்கு போய் விட்டார். டாய்லெட் கட்டிய பிறகே கணவன் வீட்டுக்கு திரும்பினார். இதை மனதில் வைத்துத்தான் பெண்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் அமைச்சர். அப்படியாவது நாட்டில் கழிப்பறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், சுகாதாரம் பெருகும் என்பது அவர் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment