Saturday, 3 November 2012

சட்டம் யாருக்கு


எப்போதோ போட்ட சட்டம். எந்த நோக்கத்துக்காக போடப்பட்டதோ அது நிறைவேறிய பிறகும் அமலில் இருக்கிறது. இதனால் குடும்பக் கட்டுப்பாடு செய்ய முடியாமல் வறுமையில் தவித்துப் போயிருக்கிறார்கள் பழங்குடி மக்கள்.சட்டீஸ்கர் மாநிலத்தில் பெகார், பகாரி கொறவாஸ், அபுஜ்மாடியாஸ், கமார், பைகா என பல பிரிவுகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். இந்த இனங்களில் பிரசவத்தின்போதே, குழந்தைகள் இறப்பது அதிகமாக இருந்தது. இவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டால், குழந¢தை பிறப்பு மேலும் குறைந்து விடும் என்பதால் 1979ல் ஒரு சட்டம் வருகிறது. அதன்படி, இந்த இனங்களை சேர்ந்த பெண்கள் யாரும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முடியாது. குழந்தைகள் அதிகமாகி பிரச்னை வரும்போது, அதிகாரிகளை அணுகலாம். அப்போது அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு தவிர, வேறு வகையான குழந்தை பிறப்பு தடுப்பு வசதிகளை பற்றி ஆலோசனை சொல்வார்கள். அதையும் மீறி குடும்ப கட்டுப்பாடுதான் செய்ய வேண்டும் என அடம் பிடித்தால், அதற்கு பிடிஓ அனுமதியை பெற வேண்டும். இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதற்குத்தான் இப்போது எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

குழந்தை பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை அந்த குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும்.  அந்த உரிமையை பறிப்பது தவறு. குழந்தை பெறுவது பெண்ணின் உரிமை. அதை எப்படி பறிக்கலாம் என கேள்வி எழுந்துள்ளது. பிழைப்புக்கு வழியில்லை. சரியான மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை. வறுமை தாண்டவமாடுகிறது. ஆனால் ஏகப்பட்ட குழந்தைகள். இந்த நிலைமையில் பழங்குடியினர் எப்படி பிழைப்பு நடத்த முடியும் என பழங்குடியினருக்கு ஆதரவான தொண்டு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து திட்டக் கமிஷனும் பழங்குடியினர் யாருக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் உரிமையை மறுக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மக்கள் தொகை அதிகமாகும்போது, அதைக் குறைக்க குடும்பக் கட்டுப்பாடு அவசியமாகிறது. அதனால் குடும்பத்துக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. ஆனால் மக்கள் தொகையை அதிகரிக்க குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் உரிமை ஒரு பிரிவினருக்கு மறுக்கப்படும்போது, அதனால் முதலில் பாதிக்கப்படுவது அந்தக் குடும்பம்தான். அதை அரசு உணர வேண்டும்.



நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment