Saturday, 17 November 2012

படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்ந்தால்...

ஓருபுறம் மத்திய செய்தித் துறை அமைச்சர் மணீஷ் திவாரி. மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங். இந்த இருவருக்கும் வெறுப்பையும், கோபத்தையும், ஏளனத்தையும் வெளிக்காட்டக் கிடைத்த வடிகால், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய். அலைக்கற்றை ஏலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் வரவில்லை என்பதும், ஜி.எஸ்.எம். பிரிவில் அரசு எதிர்பார்த்த ரூ. 28,000 கோடிக்குப் பதில் கிடைத்திருக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் ரூ. 9,400 கோடிதான் என்பதும் அவரைக் குற்றம் சாட்ட இவர்களுக்குக் கிடைத்திருக்கும் நொண்டிச் சாக்கு!

முதலில் நாம் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பு. நாடாளுமன்றத்தைப்போல, தேர்தல் ஆணையத்தைப்போல, இந்திய அரசின் இன்றியமையாத, பிரித்துப் பார்க்க முடியாத அமைப்பு அது. இந்திய அரசியல் சட்டத்தின் பேரில் பதவி உறுதிமொழி எடுத்த ஓர் அமைச்சர், அந்த அமைப்பையோ, அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவரைப் பற்றியோ குற்றம் குறை கூறுவது தவறு. அப்படிச் சொன்னால் அது அரசைக் குறை கூறுவதாகத்தான் கருத வேண்டும்.

இந்த ஏலத்தின் பின்னால் கூட்டு சதி காணப்படுகிறது என்கிற ஐயப்பாடு ஒருபுறம் இருக்கட்டும். தனியார் நிறுவனங்களுக்கு, சட்டத்தின் வரம்புகளுக்கு உள்பட்டு, நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாத வகையில், குறைந்த விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை "முறைப்படி' செய்வதுதான் அரசின் உள்நோக்கம் என்பதையும் தள்ளி வைத்து விடுவோம். குறைந்த அளவிலான ஏலத்தொகைக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன.

பல எதார்த்தப் பொருளாதார உண்மைகளை, அரசுத் தரப்பு சிந்தித்துப் பார்க்காமல் எடுத்த முடிவுகள்தான் இன்று ஏலத்தில் எடுக்க ஒப்பந்தப்புள்ளிகள் வராமல் இருப்பதற்குக் காரணம் என்பதை வெளியில் தெரியாமல் மறைப்பதற்குத்தான், தேவையில்லாமல் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரிமீது பாயத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார நிலைமையும், முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கையின்மையும்தான் இப்படியொரு சந்தி சிரிக்கும் நிலைமைக்கு அலைக்கற்றை ஏலத்தைக் கொண்டு நிறுத்தியிருக்கின்றன என்பதை ஏன் அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட உத்தேச இழப்பு என்பது 2008-இல் இருந்த நிலைமையைக் கருத்தில்கொண்டு தரப்பட்ட கணக்கு. அன்றைய நிலையில் இந்தியாவில் இருந்த அலைபேசி சந்தாதாரர்கள் வெறும் 2.34 கோடி மட்டுமே. மொத்த அலைக்கற்றை அளவில் வெறும் 24%. அன்றைய நிலையில் 8 கோடி சந்தாதாரர்களுக்கு 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்று விரிவுபடுத்தும் வாய்ப்பு காணப்பட்ட நிலைமை.

அன்றைய நிலைமையை யோசித்துப் பார்த்தால் பிரமிப்பு மேலிடும். மாதத்துக்கு எண்பது லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் புதிதாக அலைபேசி இணைப்புகள் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. 2008-09-இன் ஒரு மாதத்தில் 2 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்ததாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. அந்த நிலைமையைக் கருத்தில்கொள்ளும்போது, இந்த அளவுக்குக் குறைவான விலைக்கு அலைக்கற்றையை ஏலமில்லாமல் அளித்ததால் அரசுக்கு இந்த அளவு உத்தேச இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டி இருந்தார். அதில் என்ன தவறு?

இன்றைய நிலைமை அதுவல்ல. ஏறத்தாழ 9 கோடி அலைபேசி சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். 70% அலைக்கற்றை பயன்பாடு காணப்படுகிறது. சொல்லப்போனால், புதிய இணைப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்ட தேக்க நிலைமை.

இன்னொன்றையும் அரசு கருத்தில்கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். சராசரி அலைபேசி உபயோகக் கட்டணம் 2008-இல் மாதத்துக்கு ரூ. 316 ஆக இருந்தது. இப்போது வெறும் ரூ. 97 ஆகக் குறைந்திருக்கிறது. பயன்பாட்டையும் குறைத்து, பயனாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பில்லாத நிலையில், அலைக்கற்றை ஏலத்திற்கான வரவேற்பும் குறையக்கூடும் என்று அரசு எதிர்பார்க்காதது ஏன்?

2008-இல் சர்வதேச அளவில் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவில் வந்து கொட்டிக் கொண்டிருந்தது. 2010-இல் கூட 3ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏல வருவாய் கிடைத்ததன் காரணம், பொருளாதாரத் தேக்கம் இல்லாமல் இருந்ததுதான். இன்று, தொடர்ந்து வெளிவரும் ஊழல்களும், முறைகேடுகளும், அரசின் நிலையற்ற தன்மையும், சர்வதேசப் பொருளாதாரத் தேக்கமும், முதலீட்டாளர்களுக்கு இந்தியாமீது நம்பிக்கை இல்லாத நிலைமை. இதுவும்கூட எதிர்பார்த்த ஏல வருவாய் கிடைக்காததற்குக் காரணமாக இருக்கக்கூடும். இந்தச் சூழலில் பெரிய தொகைக்கு ஒப்பந்தப்புள்ளிகளை வழங்கி ஏலம் கேட்கத் தனியார் நிறுவனங்கள் தயங்கும் என்பதை அரசு ஏன் முன்கூட்டியே உணர்ந்து காப்புத்தொகையை நிர்ணயிக்கவில்லை?

அதையெல்லாம் சிந்தித்துப் பார்ப்பதற்குப் பதிலாக, மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர்களும் ஏதோ தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி தவறாகக் கணித்துவிட்டதாக அவர்மீது பாய்ந்து குதற நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு விரல் அவரைக் குற்றம் சாட்டும்போது நான்கு விரல்கள் அரசை நோக்கித் திரும்பி இருப்பதை உணர்ந்தால் நல்லது. வம்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் களங்கத்தைத் துடைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

படுத்துக் கொண்டு எச்சில் உமிழ்ந்தால் அது அவரவர் முகத்தில்தான் திரும்பிவந்து விழும் என்பதுகூட அமைச்சர் மணீஷ் திவாரிக்குத் தெரியாமல் போனது வேதனைக்குரிய ஒன்று. அவர் தன்னை இன்னும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வப் பத்திரிகைத் தொடர்பாளராக நினைத்துக்கொண்டு செயல்படுவதால் ஏற்படும் கோளாறு இது. இப்படியெல்லாம் பேசுவது அமைச்சருக்கும் அழகல்ல. அரசுக்கும் அழகல்ல!





நன்றி: Dinamani

No comments:

Post a Comment