பால் தாக்கரே மாதிரி தினமும் எத்தனையோ பேர் பிறக்கிறார்கள், மரிக்கிறார்கள். அதற்கெல்லாம் பந்த் நடத்தினால் மக்கள் என்னாவது? ஃபேஸ்புக்கில் இந்த காமென்ட் போட்ட 21 வயது பெண்ணை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. ஷாஹீன் தத்தா போட்ட காமென்டை ஆமோதித்து 'லைக்' போட்ட இன்னொரு இளம்பெண்ணுக்கும் அதே கதி.'கருத்து சுதந்திரத்தில் கைவைப்பதா, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடு' என்று பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கோபத்துடன் அறிக்கை விடுத்திருக்கிறார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான கட்ஜுவுக்கு இருக்கும் சுதந்திரம் மற்றவர்களுக்கு கிடையாது. ஷாஹீன் தன் காமென்டை அழித்துவிட்டு, அதனால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்ன பிறகும் ஒரு கூட்டம் அந்த பெண்ணின் கிளினிக்கை சூறையாடி இருக்கிறது. பல லட்சம் பேர் திரண்ட ஊர்வலத்தின் இறுதியில் கலவரம் நடக்கலாம் என எதிர்பார்த்ததற்கு மாறாக அசம்பாவிதம் ஏதுமின்றி முடிந்ததை பலரும் பாராட்டும் வேளையில் இந்த சம்பவம். மும்பை போலீஸ் கூறும் காரணம் வினோதமாக இருக்கிறது. 'இரண்டு பெண்களையும் நாங்கள் கைது செய்யாமல் இருந்தால் கும்பல் அவர்களை தாக்கி பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்' என்கிறது. குற்றவாளிகளுக்கு பயந்து நிரபராதிகளை கைது செய்வதை நியாயப்படுத்தும் முயற்சிக்கு கைதட்டலாம். ஒரு பிரிவு மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்தியன் பீனல் கோட் 295 ஏ ஷரத்தின்கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பலர் கேலி செய்கிறார்கள். 'இந்த சட்டப்பிரிவின்கீழ் மிகவும் அதிக முறை குற்றம் இழைத்தவர் பால் தாக்கரே அல்லவா?' என்று கேட்கிறார்கள்.
பேச்சுரிமைக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் பேர்பெற்ற இங்கிலாந்தில்கூட இன்டர்நெட் கருத்துக்கள் தொடர்பாக புகார்களும் கைதுகளும் பெருகி வருகின்றன. ஆபாசமாக, அவதூறாக கருத்து வெளியிட்டதாக சென்ற ஆண்டு அங்கு 1,843 புகார்கள் பதிவாகின. 1,286 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அந்த அளவுக்கு கடுமையாக இந்த சட்டத்தை அமல்படுத்தினால் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கக்கூடும். இப்போதைக்கு காமென்ட் போடும்போது உஷாராக இருப்பதை தவிர வேறு வழியில்லை.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment