வாகனங்கள் கணக்கு வழக்கில்லாமல் பெருகிவிட்ட சூழ்நிலையில், தெருவில் நடக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அப்படியே நடக்க முடிந்தாலும் பாதுகாப்பாக ஒருவர் விரும்பிய இடத்தைச் சென்றடைய முடியுமா என்பது அதைவிடச் சந்தேகம். நகரத்துத் தெருக்கள்தான் நடமாடுவதற்கு ஏற்றதாக இல்லை என்றால், கிராமத்துத் தெருக்களும், நெடுஞ்சாலைகளும் அதைவிட ஆபத்தானவையாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் எடுத்துக் கூறுகின்றன.
தேசிய அளவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் சற்று குறைந்திருக்கிறது என்றாலும்கூட, வாகன விபத்துகளால் 1,42,485 பேர் 2011-இல் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். 5,11,394 பேர் படுகாயம் அடைந்து உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். அதாவது ஒரு நிமிடத்துக்கு ஒரு சாலை விபத்து இந்தியாவில் நிகழ்கிறது. நான்கு நிமிடங்களுக்கு ஒரு சாலை விபத்தால் மரணம் நிகழ்கிறது. இதில் வேதனையளிப்பது எது என்றால், சாலை விபத்துகளில் மரணமடைவோரில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்பதுதான்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்களில்தான் மிக அதிகமான சாலை விபத்துகள் காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்த சாலை விபத்துகளில் 13%, சாலை விபத்து மரணங்களில் 12% தமிழகத்தின் பங்காக 2011 புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் சாலை மரணங்கள் இரட்டிப்பாகி உள்ளன. 2000-த்தில் 8,269 ஆக இருந்த சாலை மரணங்களின் எண்ணிக்கை 2011-இல் 14,359 ஆக உயர்ந்திருக்கிறது.
சாலை விபத்துகள் அதிகரித்திருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் பெருகிவிட்ட வாகன எண்ணிக்கையும், முறையாகத் திட்டமிட்டு நிறைவேற்றப்படாத சாலை வசதிகளும்தான். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், 1951 கணக்குப்படி இந்தியாவில் இருந்த கார்களின் மொத்த எண்ணிக்கையே மூன்று லட்சம் மட்டுமே. 1991-இல் 2.14 கோடியாக இருந்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 14.1 கோடியாகக் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது.
போதாக்குறைக்கு, பதிவு செய்யப்படும் மோட்டார் வாகனங்களில் 72% இரண்டு சக்கர வாகனங்கள். மொத்த விபத்துகளில் 23.7% இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள்தான். இரு சக்கர வாகன ஓட்டிகள் தாங்கள் விபத்தில் சிக்குவது போதாது என்று பாதசாரிகளையும், சைக்கிள் ஓட்டிகளையும் வேறு தங்களது இலக்காக்கிப் பாடாய்ப்படுத்துகிறார்கள்.
மோட்டார் வாகனச் சட்டங்களில் பல மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டாலும், விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கான இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டாலும், முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றால் சந்தேகமே. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2009-இல் நடத்திய ஓர் ஆய்வு, நீதிமன்றங்களின் படியேறி பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது என்று கூறுகிறது. பாதிக்கப்படுவது சாமானியர்களாக இருந்து, காரோட்டியோ இருசக்கர வாகன ஓட்டியோ போக்குவரத்துக் காவலர்களை "முறையாகக் கவனித்துவிட்டால்', பாவம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதேகூடச் சந்தேகம் என்பதுதான் நடைமுறை உண்மை.
வரைமுறையே இல்லாமல் வாகனங்களுக்கு அனுமதியும், பல்வேறு கவர்ச்சிகரமான தவணை முறைக் கடன் திட்டங்கள் மூலம் மோட்டார் வாகன விற்பனையை ஊக்குவிப்பதும் ஒருபுறம் இருக்க, சாலை வசதிகள் மேம்படுத்தப்படாமலே இருக்கின்றன. சுங்கம் வசூலிக்கும் தங்க நாற்கரச் சாலைகளில் காட்டப்படும் கவனம், நகர்ப்புற, கிராமப்புறச் சாலைகளுக்குத் தரப்படுவதில்லை. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில அரசின் சாலை மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு சாலைகள் போடுவது என்பதே ஏதோ வருடாந்திர போனஸ் என்பதுபோலாகி விட்டதே தவிர, அக்கறையுடன் செய்யப்பட வேண்டிய பணியாகத் தோன்றுவதில்லை.
சாலை விபத்துகளுக்கு மிகவும் முக்கியமான காரணம், பாதசாரிகள் நடமாடுவதற்குப் போதிய அகலமுள்ள நடைபாதைகள் இல்லாமல் இருப்பதும், சாலையைக் கடப்பதற்கு அதிகபட்சம் 500 மீட்டர் இடைவெளியில் வழிவகை செய்யப்படாமல் இருப்பதும்தான். ஏதோ சாலைகள் போடப்படுவதே மோட்டார் வாகனப் போக்குவரத்துக்குத்தானே தவிர, பொதுமக்கள் நடமாடுவதற்காக அல்ல என்கிற மனோநிலை அரசுக்கு ஏற்பட்டு விட்டதோ என்றுகூடத் தோன்றுகிறது.
தங்க நாற்கரச் சாலைகளிலேயே கூட ஆங்காங்கே சாலையைக் கடக்கச் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படாததால்தான், சாலையைக் கடக்கும் கிராமப்புற மக்களும், ஆடு, மாடு போன்ற விலங்கினங்களும் அதிவிரைவு வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது.
வளர்ச்சி, வளர்ச்சி என்று நமது ஆட்சியாளர்கள் அடிக்கடி பேசுகிறார்கள். பாதசாரிகள் பாதுகாப்பாக நடக்க நடைமேடைகளும், சாலையைக் கடக்க வழிவகையும்கூடச் செய்ய முடியாமல், வளர்ச்சி என்ன வளர்ச்சி வேண்டிக் கிடக்கிறது? பாதசாரிகளுக்காகக் குரல் எழுப்ப இந்த நாட்டில் ஓர் அரசியல்வாதிகூட இல்லாத நிலையில் சாலை விபத்துகளும், விபத்தால் ஏற்படும் மரணங்களும் தொடராமல் என்ன செய்யும்?
No comments:
Post a Comment