தமிழகம் அனுபவித்துவரும் வரலாறு காணாத மின்சார பற்றாக்குறை இன்றே தீர்க்கப்பட்டால்கூட, மின்வெட்டு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் சரியாக பல ஆண்டுகள் ஆகும் என்று தோன்றுகிறது. சில இழப்புகளை ஈடுகட்டவே முடியாது. பெரிய தொழில்கள் முடங்கி கிடக்கும் நிலையில் சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள் கதி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆலைகள் இயங்காத போதிலும் அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் டிபன் கேரியரையும் நம்பிக்கையையும் சுமந்து கொண்டு ஆலைக்கு வந்த வண்ணம் இருந்தார்கள். மின்வெட்டின் தீவிரமும் தொடர்ச்சியும் அந்த இரண்டையும் படிப்படியாக குறைத்து வறட்சியில் தள்ளியது. நூற்பாலைகளை 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் குஜராத், மகாராஷ்டிராவுக்கு இடம் பெயர்க்க முதலாளிகள் முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். மாவட்டங்களில் 14 மணி நேரம், 16 மணி நேரம் என மின்வெட்டு சுழன்றடிப்பதால் எல்லா தரப்பு மக்களுமே அவரவர் வேலைகளை கவனிக்க முடியாமல் திணறுகின்றனர். வருமான இழப்பு, தூக்கமின்மை, எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற இயலாமை எல்லாமாக சேர்ந்து சராசரி பொதுமக்களை விரக்தியை நோக்கி விரட்டுகிறது. இத்தனைக்கும் நடுவில் அவர்கள் மனதில் தகித்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி: சென்னைக்கு மட்டும் ஏன் சிறப்பு கவனிப்பு? 'நாமெல்லாம் அடிப்படை தேவைக்கு மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும்போது சென்னையில் எங்கு பார்த்தாலும் ஏசி மெஷின்கள் இடைவிடாமல் இயங்குகின்றன.
கடைகளும் கட்டடங்களும் அலங்கார விளக்கொளியில் சொர்க்கபுரியாக ஜொலிக்கின்றன. பகலில்கூட தெருவிளக்குகள் எரிகின்றன' என்று தலைநகருக்கு வந்தவர்களும் அவர்கள் சொல்ல கேட்டவர்களும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அது வயிற்றெரிச்சல் அல்ல. ஏக்கம். 'மின் உபயோகத்தில் இவர்கள் கொஞ்சம் சிக்கனமாக இருந்தால் இருளில் மூழ்கியுள்ள நமது வாழ்வில் சற்று வெளிச்சம் பிறக்குமே' என்ற ஆதங்கம். உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வழியில்லை. உபயோகத்தை சிக்கனமாக்க ஆயிரம் வழிகள் உண்டு. அரசு மட்டுமல்ல; சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். சென்னைக்கு வெளியே வாழ்பவர்களும் தமிழக குடிமக்கள். அவர்கள் நமது சொந்தங்கள்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment