Saturday, 17 November 2012

அலைக்கற்றை மறுஏலம் - திருடன் கையில் சாவி

அலைக்கற்றை ஏலத்தில் எதிர்பார்த்த தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் கிடைத்துள்ளது. ஜிஎஸ்எம் பிரிவில் அரசுக்கு ரூ.28,000 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைத்துள்ள ஒப்பந்தப்புள்ளிகள் ரூ.9,400 கோடி வரைதான்.

இதையும் கூட வரவு என்று சொல்லிவிட முடியாது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்படாத நிறுவனங்கள், தாங்கள் ஏற்கெனவே உரிமம் பெற்றபோது செலுத்திய முன்பணத்தை இப்போது கழித்துக்கொள்ள முடியும். ஆகவே, இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.5,000 கோடிதான்.

ஏலத்தில் பங்குகொள்வோருக்கு காப்புத்தொகை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால்தான் ஏலத்தில் பலர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டாலும், அந்த வாதம் ஏற்கக்கூடியதாக இல்லை. காப்புத்தொகை என்பது, ஏலம் எடுக்காத நிலையில் திருப்பி அளிக்கப்படும் தொகை. பல கோடிகளில் புரளும், பல கோடிகள் லாபமடைய விழையும் இந்த நிறுவனங்களுக்கு அது ஒன்றும் பெரிய தொகை அல்ல.

கடந்த 3 நாள் ஏலத்தில் மும்பை, தில்லி, கர்நாடகம் ஆகியவற்றுக்கான ஏல ஒப்பந்தப்புள்ளிகளை யாருமே கொடுக்கவில்லை என்பதுதான் இந்த விவகாரத்தில் நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

ஜிஎஸ்எம் பிரிவில் ஏலத்தின் மூலம் ரூ.28,000 கோடி கிடைக்கும் என்று அரசு தீர்மானித்தபோது, அந்தத் தொகையில் 65% பெங்களூர், தில்லி போன்ற பெருநகரின் செல்போன் பயன்பாட்டு அளவைக் கருதித் தீர்மானிக்கப்பட்டது என்பது அரசுக்கும், இந்த ஏலத்தில் பங்கேற்கும் மற்ற நிறுவனங்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் அந்தப் பகுதிகளுக்கு ஏன் யாருமே ஒப்பந்தப்புள்ளி தரவில்லை?

மதுக்கடை ஏலத்தில், ஏலம் கேட்பவர்களே தங்களுக்குள் கூட்டணி (சிண்டிகேட்) அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு கடைக்கும் அரசு நிர்ணயிக்கும் விலையைவிட சில ஆயிரங்கள் மட்டுமே கூடுதலாகக் கேட்க வேண்டும் என்று முன்னதாகவே தீர்மானித்துக்கொண்டு வந்து ஏலம் கேட்பார்கள். அத்தகைய "சிண்டிகேட்' தற்போது அலைக்கற்றை ஏலத்திலும் ஏற்பட்டு இருக்கிறது என்கின்ற சந்தேகத்தை இந்த ஜிஎஸ்எம் அலைக்கற்றை ஏலம் உண்டாக்குகிறது.

இந்த அலைக்கற்றை நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் மத்திய தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபலின் பேச்சும் அமைந்திருக்கிறது. அலைக்கற்றை ஏலத்துக்கான விலையைத் தீர்மானிப்பதில் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நாம் விலையைத் தீர்மானித்ததால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது என்று அமைச்சரே கருத்துத் தெரிவிக்கிறார். இந்த நிதியாண்டுக்குள் ஏலம் போகாத இடங்களுக்கும், சிஎம்டிஏ பிரிவில் 800 மெகாஹெர்ட்ஸýக்கும் ஏலம் நடத்தப்படும் என்றும் கூறுகிறார்.

ஏற்கெனவே சிஎம்டிஏ பிரிவில் ஏலக்கேட்புக்கு விண்ணப்பித்த நிறுவனங்களில் சில, அடிப்படைத் தொகை மிக அதிகம் என்று கூறி விலகிக்கொண்டன. ஆகவே, தற்போது இந்தப் பிரிவுக்குப் புதிய தொகையைத் தீர்மானிக்கும் கட்டாயத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளாகியிருக்கிறது. இந்நிலையில், ஜிஎஸ்எம் பிரிவிலும், எதிர்பார்த்த ஏலத்தொகை கிடைக்கவில்லை என்பதும், ஏலம் போகாத பகுதிகளுக்கு மீண்டும் ஏலம் என்பதும், மத்திய அரசு விலையைக் குறைத்துக் காப்புத்தொகையைத் தீர்மானிக்கப் போகிறது என்பதையே காட்டுகிறது.

மத்திய அரசு செய்ய வேண்டியது, மறுஏலம் நடத்துவோம் என்கிற அறிவிப்பு அல்ல. மாறாக, ஏலம் போகாத அலைக்கற்றைத் தொகுப்பு, அரசு நிறுவனமாகிய பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் என்கிற அறிவிப்புதான். ஆனால், அதைச் செய்ய அரசு ஏன் தயங்குகிறது? ஏன் ஏலத்தின் அடிப்படைத் தொகையைக் குறைத்துக்கொள்ள முற்படுகிறது? அதில்தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது.

செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் அதிக லாபம் அடைந்தவர்கள் தனியார் நிறுவனங்கள் மட்டுமே. பிஎஸ்என்எல், மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை செல்போன் சேவையில் இருந்தாலும் அவற்றால் லாபகரமாகச் செயல்பட முடியவில்லை. அல்லது செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. திறமையின்மையும், அரசு நிறுவனம் என்பதால் மெத்தனமும் இருக்கிறது என்றாலும், அவை மட்டுமே இழப்புக்குக் காரணமல்ல.

இந்நிலையில், இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, யாரும் ஏலம் கேட்காத தில்லி, மும்பை போன்ற பகுதிகளை பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு ஒதுக்கினால், இந்நிறுவனங்களுக்கு தானாகவே அதிக லாபம் கிடைக்குமே! குறைந்தபட்சம், தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு ஏலம் கேட்க முன்வரக்கூடுமே!

சிஏஜி அறிக்கை கூறியபடி, தற்போது ஏலத் தொகை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், சிஏஜி அறிக்கையைப் பொய்யாக்க வேண்டும் என்று அலைக்கற்றை நிறுவனங்கள் திட்டம்போட்டுச் செயல்படுகின்றன. அதற்கு அரசும் மறைமுகமாகத் துணை போகிறது.

ஜிஎஸ்எம் ஏலத்தின் முடிவில் தீர்மானிக்கப்படும் விலையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கெனவே 4.4 மெகாஹெர்ட்ஸýக்கு அதிகமாக அலைக்கற்றையைப் பயன்படுத்திய நிறுவனங்கள் ஒருதடவைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பும், இவ்வாறான சிண்டிகேட் அமையக் காரணமாக அமைந்துவிட்டது.

யாரும் விலை கேட்காத தில்லி, மும்பை, கர்நாடகம் ஆகிய மூன்றையும் அரசு நிறுவனங்களுக்கே ஒதுக்கினால்தான், தனியார் செல்போன் நிறுவனங்களின் கூட்டணி உடையும். அவர்கள் அச்சத்துடன் நியாயமான ஏலக்கேட்பில் ஈடுபடுவார்கள்.

இதெல்லாம் அரசுக்குத் தெரியாதா என்ன? "சிஏஜி அறிக்கையின் கணிப்புத் தவறு. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. ஏலத்தில் பங்குகொள்ளக்கூடிய நிறுவனங்கள் தயாராக இல்லாத நிலையில், ஊடகங்கள் ஒன்றுமில்லாத பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகின்றன', என்று நிரூபிக்க எத்தனிக்கிறது அரசு. தனியார் நிறுவனங்களுக்குக் குறைந்த விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஒதுக்கித் தங்களது தனியார்மய விசுவாசத்தைக் காட்ட விரும்புகிறது.

திருடன் கையில் சாவியைக் கொடுத்தால் என்னவெல்லாம் நடக்குமோ அவையெல்லாம் நடக்கிறது!




நன்றி: Dinamani

No comments:

Post a Comment