Tuesday, 13 November 2012

ஊழல் எதிர்ப்பு - எய்தவனை நோக்கி பாயும் அம்பு

உலகமே இந்திய மக்களின் அறிவாற்றலையும், உழைப்பையும் பார்த்து இவ்வளவு வேகமாக முன்னேறுகிறார்களே, இதே வேகத்தில் சென்றால் அப்துல்கலாம் காணும் கனவுப்படி, 2020ம் ஆண்டு வல்லரசாகிவிடுமோ! என்று வியப்புடன் பார்க்கிறது. ஆனால், அப்படி எளிதில் எங்கள் நாட்டை வல்லரசாக விட்டுவிடுவோமா? என்று, ஊழல் என்ற பெரிய இரும்பு சங்கிலியை முன்னேற்றத்தின் காலில் போட்டு, ஊழல்வாதிகள் இழுத்துக்கட்டிவிட்டார்கள்.இந்த நேரத்தில்தான் கிழக்கே உதித்த பகலவன் போல, அன்னாஹசாரே ஊழலை எதிர்த்து, தன் போராட்டத்தை தொடங்கினார். நல்லவேளையாக ஊழலை எதிர்த்து போராட ஒருவர் வந்துவிட்டாரே என்று மக்கள் பெரிதும் மகிழ்ந்து, அவர் பின்னால் அணிவகுத்து செல்லத்தொடங்கினார்கள். அவருடைய நோக்கம் எல்லாம் வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றி, ஊழல்வாதிகளை தண்டித்து, மேலும் ஊழல் ஏற்படாமல் தடுப்பதுதான்.ஆம் ஆத்மி என சொல்லப்படும் சாதாரண மனிதனுக்கு இதன்பொருள் புரியவில்லை. இந்த நேரத்தில் அவரிடம் இருந்து பிரிந்து வந்த கெஜ்ரிவால், அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துவிட்டு, ஒவ்வொரு ஊழலாக குண்டுதூக்கிப்போடுவது போல போட்டார். முதல் அடியே பயங்கரமாக இருந்தது. சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதே முதல் புகார் கூறினார். அதையடுத்து 5 நாட்களில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மீது புகார் கூறினார்.

இவர் காங்கிரசுக்கு எதிர்ப்பானவரோ, மற்ற கட்சிகளில் ஊழல் இல்லை என்று நினைக்கிறாரா? என்று பொதுமக்கள் சந்தேகப்பட்ட நேரத்தில், ஒரு பெரிய அணுகுண்டாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி மீது ஊழல் புகாரை சொல்லி பொதுமக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆளுங்கட்சி மீதும் ஊழல் சொல்லிவிட்டார். எதிர்கட்சியான பா.ஜ.க. மீதும் ஊழல் புகார் சொன்னது, பா.ஜ.க.வில் பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்திவிட்டது.இரண்டு பெரிய கட்சிகள் மீது கணையைத் தொடுத்துவிட்டார், இனி யார்மீது அவரது அம்பு பாயப் போகிறதோ? என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்த ஊழல் புகார் அம்பு, வேறு யார் மீதும் பாயவில்லை, அவர்மீதே பாய்ந்துவிட்டது.முன்னாள் வருமான வரித்துறை அதிகாரியான கெஜ்ரிவால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற நினைத்த நேரத்தில், பெரிய கம்பெனிகளிடம் அவர் நடத்திவந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக பெருமளவில் பணம்பெற்றது இப்போது வெளிவந்துள்ளது. உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று.

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் கூற்று இது. 2008ம் ஆண்டு கெஜ்ரிவால் என்னை அணுகினார். தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நன்கொடை வேண்டும் என்று கேட்டார். சிறப்பாக பணியாற்றிய மக்கள் தொடர்பு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்போவதாகவும் கூறினார். நான், அவரிடம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு தருவதாக ஒத்துக்கொண்டேன். டாடா சமூக நல அறக்கட்டளையும் அதேதொகையை தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள, அவர்களும் சம்மதித்தனர். 2009ம் ஆண்டுகளில் தலா ரூ.25 லட்சம் அனுப்பினேன். 3வது ஆண்டு ரூ.37 லட்சம் அதாவது கூடுதலாக விருதுகள் வழங்கவும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் சிலர் கொல்லப்பட்டுவிட்டனர், அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய பணம் வேண்டும் என்றும் கேட்டார். அதற்காக அந்த ரூ.37 லட்சத்தையும், 2011ம் ஆண்டு ரூ.25 லட்சமும் அனுப்பினேன். இந்த ஆண்டு அதுவும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் நிதிஉதவி கேட்டார். ஆனால், கெஜ்ரிவாலின் அரசியல் நடவடிக்கைகளுக்கு நான் நிதி உதவி செய்யவில்லை. மறுத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஒரு டாடாவும், நாராயணமூர்த்தியும் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் கொடுத்தார்கள் என்றால், இப்படி எத்தனை நிறுவனங்களிடம், எவ்வளவு தொகை வாங்கி இருப்பாரோ? என்று மக்கள் கேட்கிறார்கள். என்றாலும் 31.03.2011 முடிய ஒரு ஆண்டில் 56 பேர்களிடம் 96 லட்சத்து 52 ஆயிரத்து 851 ரூபாய் நன்கொடை வாங்கிய பட்டியலை கெஜ்ரிவால் இணையதளத்தில் துணிச்சலாக வெளியிட்டுள்ளார். ஆம் ஆத்மிக்கு யாரும் இவ்வளவு நன்கொடை தருவதில்லை.உங்களுக்கு மட்டும் கண்மூடிக்கொண்டு இவ்வளவு நன்கொடை தரும் இந்த 56 பேர்களும் ஆதரவற்றோர் விடுதிக்கு, முதியோர் இல்லம் இன்னும் பல சமூக சேவைகளுக்கு இப்படி அள்ளித்தருவார்களா? உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி தாராளமாக தருகிறார்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள்.





நன்றி: Daily Thanthi,

No comments:

Post a Comment