சைவ உணவு சாப்பிடுங்கள்; அசைவம் தவிருங்கள் என்ற பிரசாரம் நீண்டகாலமாக நடந்து வருகிறது. இங்கிலாந்தில் இரண்டரை நூற்றாண்டுக்கு முன்பே சைவ கழகம் தொடங்கப்பட்டது. அதன் நோக்கம், அசைவ உணவு சாப்பிடாமலே மனிதன் ஆரோக்யமாக வாழ முடியும் என்று நிரூபிப்பது. அதுவரையில் ஆடு மாடு கோழி மீன் சாப்பிடாவிட்டால் மனிதன் சீக்கிரம் செத்து விடுவான் என்று மக்கள் நம்பினர். இன்னமும் பல நாடுகளில் இந்த நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் நேர்மாறான நிலைமை. இங்கே சைவ உணவுக்குதான் ஆதிகாலத்தில் இருந்தே முன்னுரிமை. அசைவ உணவாக வயிற்றுக்குள் அனுப்பப்படும் ஜீவராசிகள் மீதான அக்கறையும், பல விலங்குகள் நமது மக்களால் கடவுளின் வாகனமாகவோ துணைவனாகவோ பார்க்கப்பட்டதும் சைவம் பரவலானதற்கு காரணங்களாக சொல்லலாம். இன்றும் உலகிலுள்ள மொத்த சைவர்களில் முக்கால்வாசி பேர் இந்தியர்கள். உயிர்களை கொல்லக்கூடாது என்று வள்ளுவர் காலத்தில் தொடங்கிய பிரசாரம் பல ரூபங்களில் தொடர்கிறது. பீட்டா போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் வெஜிடேரியனிசத்துக்கு ஆதரவு திரட்டுகின்றன. அசைவம் சாப்பிடுபவர்களை காட்டிலும் மற்றவர்கள் நல்ல உடல் நலத்துடனும் புத்திக் கூர்மையுடனும் அதிக நாள் வாழ்கின்றனர் என்ற கருத்தை அது வலியுறுத்துகிறது. இதுபோல் அசைவ உணவுகளை பிரபலப்படுத்தவோ அசைவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ யாரும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அதை சாதகமாக்கி 'அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், நேர்மையற்றவர்கள்,
ஏமாற்றுக்காரர்கள், சண்டை போடுபவர்கள், வன்முறையாளர்கள், பாலியல் குற்றம் புரிபவர்கள்' என்று ஒட்டுமொத்த முத்திரை குத்தி பாடமாக எழுதி குழந்தைகள் மனதில் விஷத்தை விதைப்பது மன்னிக்க முடியாத குற்றம். மத்திய கல்வித் திட்ட பள்ளிகளில் 6ம் வகுப்பு புத்தகத்தில் ஆரோக்யமான வாழ்க்கைக்கு வழி என்ற தலைப்பில் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது. பாட புத்தகங்கள் மக்களை ஒன்றுபடுத்த உதவ வேண்டும். பிளவுகளை உண்டாக்கி சச்சரவுகளை தூண்டுவதாக இருக்கக்கூடாது. மத்திய அரசு தாமதமின்றி தலையிட்டு இந்த பாடத்தை நீக்குவதுடன் அதை எழுதியவருக்கும் சரியான பாடம் புகட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment