ப ட்டணத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. தீராத நோயெல்லாம் தீர்க்கும் தாயத்து என்று தியேட்டர் வாசலில் அறிவிப்பவனை ஈக்களாக மொய்க்கிறது கூட்டம். பாம்பையும் கீரியையும் மோத விடுவான் என்ற எதிர்பார்ப்பில் இன்னமும் மகுடிக்கு மயங்கி திரள்கிறது கூட்டம். மயிலாப்பூர் தெப்பக்குளத்தை ஒருவன் எட்டிப் பார்த்தால் அவன் நிமிர்வதற்குள் ஆயிரம் பேர் அதே போல கழுத்தை நீட்டிக் கொண்டிருப்பார்கள், என்ன ஏது என்று தெரியாமலே. ஒரு தலைமுறை சலித்து ஒதுங்கினால் வெற்றிடத்தை அடுத்த தலைமுறை நிரப்புகிறது. அதனால்தான் காலம் மாறியும் காட்சிகள் மாறவில்லை. அதே ஆர்வம். அதே ஆவல். நீலம் புயல் நகருக்கு வராமல் ஏமாற்றினாலும் அதன் தாக்கத்தால் பட்டினப்பாக்கத்தில் தரை தட்டிய பிரதிபா காவேரி 12 நாட்கள் சென்னை மக்களின் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்துக்கு நன்றாக தீனி போட்டது. பேருந்து வழித்தடங்களில் பெரும்பாலானவை கடற்கரை சாலையை தொட்டுச் செல்பவை. எங்கே இறங்கினாலும் ஐந்தாவது நிமிடத்தில் கப்பலின் அருகே மணலில் நிற்கலாம். குடும்பத்துடன் படம் எடுத்து சுடச்சுட பிரின்ட் பெறலாம். சிறு வியாபாரிகளுக்கு நிறையவே பயனளித்தது பிரதிபா காவேரி. அதை கடலுக்குள் இழுக்கும் முயற்சிகளை பார்க்க இன்னும் கூட்டம் வந்தது. நைலான் கயிறு கட்டி அத்தனை பெரிய கப்பலை இழுக்க முயன்ற நகைச்சுவை காட்சியை கைதட்டி ரசித்தது. கடல் மட்டம் உயர்ந்ததால் நினைத்ததைவிட சீக்கிரத்தில் வேலை முடிந்து கப்பல் கடலுக்குள் சென்றபோது கண்கலங்கி கையசைத்தனர் பலர். தினமும் கடல் பார்த்தவர்கள்கூட கப்பலை அருகில் பார்த்தது இந்த 12 நாளில்தான். அவர்களுக்கும் கப்பலின் உள்ளே எப்படி இருக்கும் என்பது தெரியாது. துறைமுகம் ஒரு தனி உலகம் என்பதையும் பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. விமானமும் விமான நிலையமும்கூட அந்த ரகமே. பிரமாண்டமான ஐ.டி பார்க்குகள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், ஷாப்பிங் மால்கள், கல்லூரிகள். எல்லாமே சம்பந்தப்பட்டவர்களை தவிர மற்றவர்களுக்கு அந்நியமாகத்தான் இருக்கின்றன. விரும்பினாலும் நுழைந்துவிட முடியாத கோட்டை மாதிரி. தொட்டுப் பார்க்க முடிந்தாலும் எட்டிப் பார்க்க முடியாத தொலைவில் நிற்கின்றன. தலைநகருக்கு வெளியே வசிக்கும் உறவுகளுக்கு இந்த இயலாமையை அவர்கள் புரியவைப்பது கடினம்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment