Saturday, 3 November 2012

ஆன்மிக தொழிலுக்கு மணி கட்டுங்கள்

கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து ஒரே நாளில் உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட சாமியாரை பாரம்பரியம் மிகுந்த மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்ததில் எந்த விதமான விதிகளும் மரபுகளும் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளதை மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் வரவேற்று பாராட்டுவார்கள். நல்லவர்கள், நாணயமானவர்கள்,நாகரிகமானவர்கள் எதிர்பாராததும் ஜீரணிக்க முடியாததுமான இந்த நியமனத்தை மதுரை ஆதீனகர்த்தர் அறிவித்ததன் பின்னணியில் சொத்து அபகரிப்பு நோக்கம் இருப்பதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இளைய ஆதீனகர்த்தராக அறிவிக்கப்பட்டுள்ள ஆசாமி மதுரை ஆதீனத்துக்கு மட்டுமல்ல, எந்த மடத்துக்கும் எந்த அமைப்புக்கும் தலைமை தாங்க தகுதியில்லாத நடத்தை கெட்டவர் என்று அவர் ஆணித்தரமாக தமிழக அரசின் கருத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். இத்தனை மாதங்களாக தமிழக அரசு ஏன் இந்த கருத்தை வெளியிடாமலும், சர்ச்சையை கிளப்பிய விவகாரத்தில் தலையிடாமலும் மவுனம் காத்தது என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்வி தமிழக மக்கள் மனதில் படிந்திருக்கும் குழப்பத்தை அப்படியே எதிரொலிக்கிறது. முற்றும் துறந்த முனிவர்களும், மெய்மறக்க வைக்கும் தெய்வீக ஒளி பொருந்திய மகான்களும், மாமன்னர்களையும் மண்டியிடச் செய்து கண்டிக்கும் அப்பழுக்கில்லாத ரிஷிகளும் நடமாடிய பழம்பெரும் மடங்களில் மாசு படிந்த போலிகளின் பாதங்கள் படுவதை உண்மையான பக்தர்களால் ஒருபோதும் ஏற்க இயலாது என்பதை வரலாற்று சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
கல்வி, மருத்துவம் போன்ற புனிதமான சேவைகள் லாப நோக்கம் கொண்ட வியாபாரமாக மாறியது போன்றே ஆன்மிகமும் இங்கு சிலரால் செல்வம் கொழிக்கும் தொழிலாக நடத்தப்படுகிறது. பிரமாண்டமான தலைமை நிலையம், உலகெங்கும் கிளைகள், பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி, அன்னிய செலாவணி, ஆள்படை, விழாக்கள், விளம்பரங்கள், விஐபி பக்தர்கள், சிறப்பு தரிசனம், சீடர்கள் நன்கொடை என பெருநிறுவனங்களே பொறாமைப்படும் வகையிலான உத்திகளுடன் ஆன்மிக தொழில் அமோகமாக நடக்கிறது.
ஏனைய தொழில்களை போலவே இதையும் சட்டங்களின் கண்காணிப்பில் கொண்டுவருவது இன்றைய சூழலில் இன்றியமையாதது.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment