இலங்கையின் தலைமை நீதிபதியை நீக்க நாடாளுமன்றம் தொடங்கியுள்ள நடவடிக்கை தெற்காசிய நாடுகள் அனைத்திலும் ஆர்வமாக கவனிக்கப்படுகிறது. பிரிட்டனின் காலனியாக இருந்து விடுதலை பெற்ற இந்த நாடுகள் பிரிட்டிஷ் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நீதித்துறையை நிர்வகிக்கின்றன. அந்த வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான வழிமுறை இந்த நாடுகளில் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. ஷிராணி பண்டாரநாயக மீது 14 குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. 54 வயதாகும் இந்த பெண்மணி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெரும் பணம் சேர்த்து அந்நிய வங்கிகளிலும் வெளிநாடுகளிலும் பதுக்கியுள்ளார் என்ற புகார்கள் பிரதானம். அரசியல் காரணங்களால் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக பலர் நம்புகின்றனர். இருக்கலாம். 'நல திட்டங்களுக்கான நிதியை எவ்வாறு செலவிடுவது என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம்' என்ற நடைமுறையை ராஜபக்ச அரசு மாற்றியதை எதிர்த்த வழக்கில் அரசை ஷிராணி விமர்சித்து இருந்தார். மாநில அரசுகளின் அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. அந்த அதிகாரத்தை கையாளும் அமைச்சர் ராஜபக்சவின் தம்பி. இது தவறான நடவடிக்கை என்றார் ஷிராணி. அடுத்த நாளே அவரை நீக்க ஆளும் கூட்டணியின் 120 எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டுவந்தனர். வேடிக்கை என்னவென்றால், ஷிராணி மீதான புகார்கள் என்ன என்பது அப்போது யாருக்கும் தெரியாது. நீக்குவது என முடிவு எடுத்துவிட்டு புகார்களை தேடுவதாக எதிர்க்கட்சிகள் கூறின. சட்டம் படித்துவிட்டு கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஷிராணியை திடீரென உச்ச நீதிமன்ற நீதிபதியாக , முதல் பெண் , நியமித்தவர் அப்போதைய அதிபர் சந்திரிகா. ஒருநாள்கூட வக்கீலாக நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் நீதிபதியாவதா என்று எதிர்ப்பு கிளம்பியது. அரசு கண்டுகொள்ளவில்லை. 14 ஆண்டுகளில் 11 முறை தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். நிரந்தர நீதிபதியாக அவருக்கு பிரமாணம் செய்வித்தவர் அதிபர் ராஜபக்ச. இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலம் அப்புறப்படுத்த முனைவதும் அவரே. நீக்கத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் விசாரிக்கப்படும் வரையில் நாடாளுமன்றம் இந்த நடவடிக்கையை நிறுத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சம்பந்தப்பட்ட யாரும் பொருட்படுத்தவில்லை. முடிவு என்னாகும் என்பதை இதிலிருந்தே ஊகிக்க முடியும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment