Sunday, 25 November 2012

விதவைகள் பென்சன் பெறுவதற்கான வயது வரம்பு

இந்தியா எல்லா துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆணுக்கு, பெண் இளைத்தவள் இல்லை என்று ராக்கெட் ஏவும் பணியில் இருந்து, எந்த இடத்திலும் எங்களால் ஒளிவிட முடியும் என்று- அது அரசியலாகட்டும், ஆட்சி பொறுப்பாகட்டும், எந்த பணியை கொடுத்தாலும் நாங்கள் ஆணுக்கு இணையாக முத்திரை பதிப்போம் என்று நமது தாய்க்குலம் சூளுரைத்து வேகமாக முன்னேறி வருகிறது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், ஆண்-பெண் சரிசமமாக வாழ்ந்தாலும், வாழ்க்கை துணையை இருவரில் ஒருவர் இழக்கும்போது, பெண்ணுக்கு மட்டும் பெரும் துயர் ஏற்படுகிறது. குடுகுடு கிழவன் என்றாலும், அவன் மனைவி இறந்தவுடன் அடுத்த கல்யாணத்துக்கு தயாராக புது மாப்பிள்ளையாகிவிடுகிறான். ஆனால், இளம் வயதில் கணவனை இழக்கவேண்டிய துர்பாக்கியமான நிலைமை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டாலும், தள்ளாத முதுமையின்போது தன் கணவனை இழக்க நேரிட்டாலும், அந்த பெண்ணுக்கு கைம்பெண், விதவை, தாலி அறுத்தவள் என்று சொல்லக்கூடாத வார்த்தைகளால் சொல்லி, அந்த பெண்ணின் மனதைப் புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமுதாயமும் அவளை சற்று தள்ளியே வைத்து பார்க்கிறது.

வாழ்க்கை துணை இழந்த பெண்ணின் துயரத்தை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 1942-ம் ஆண்டு எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில், விதவைகள் நிலைமை என்ற பொருளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய நாட்டின் ஆட்சி உரிமை இந¢திய மக்களுக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்த்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்பு பிரிவினையும், சாதி வேற்றுமையும் ஒழிய வேண்டுமென்று சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி, மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியராகிய பெண்கள் ஒருபக்கம் அழுத்தப்பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலைகொள்வதாக காணோம்.
மனிதப்பிறவி கொண்ட ஆணும், பெண்ணும் இயற்கை தத்துவத்திலும், சமுதாய வாழ்க்கை தன்மையிலும் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர்களல்ல என்பதை அறிவுடைய உலகம் மறுத்தற்கியலாது. உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப்போயிருக்கும் பழுத்த கிழவனாயினும், தம் மனைவியார் இறந்த பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் தக்க பருவமும், எழிலும் பொருந்திய இளங்கன்னியர்களைத் தன் துணைவியாக தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். ஆனால், ஓர் பெண் மகள் கொழுநன் இழந்துவிட்டால், இயற்கை கட்புலனை வலிய அடக்கிக்கொண்டு, மனம் நைந்து, வருந்தி மடியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வருவது என்னே அநியாயம் இது.

இந்த பரிதாபகரமான நிலைமை 1942-ல் மட்டுமல்ல, இப்போதும் இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருந்த இந்த காலத்திலும், விதவைகளை சமுதாயம் உரிய முறையில் அங்கீகரிப்பதில்லை. இளம் வயதில் கணவனை இழந்தவர்களில், படித்து வேலைபார்க்கும் பெண் என்றால் ஓரளவு சமாளித்துக்கொள்வார்கள். மறுமணம் செய்துகொள்பவர்களும் பழைய வாழ்க்கையை மறந்துவிட முடியும். ஆனால், படிப்பறிவும் இல்லாமல், மறுமணமும் செய்துகொள்ளாமல், ஏழ்மையில் வாழும் பெண்களின் நிலைமையோ அந்தோ பரிதாபம். தாலி கட்டிய கணவனை மனதிலே தெய்வமாக வைத்துக்கொண்டு வாழும் அவளுக்கு வயிற்றுபசிக்கு சோறிட மட்டும் வசதியில்லாத நிலைமை. நல்லவேளையாக மத்திய-மாநில அரசுகள் விதவைகள் பென்சன் என்று கூறப்படும் உதவிகளை அவர்களுக்கு வழங்குகிறது. ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மத்திய அரசாங்கத்தால் 40 வயதுக்கு மேல் இந்த பென்சன் வழங்கப்படுகிறது. 40 வயதுக்கு மேல் ஒரு பெண் விதவையானால், ஒருவேளை அவளை காப்பாற்ற அவளது பிள்ளைகள் தலையெடுத்துவிடுவார்கள். ஆனால், 18 வயதில் விதவையாகும் பெண்ணின நிலைமை பரிதாபத்துக்குரியது.

இப்போது மத்திய அரசாங்கம் விதவைகள் பென்சன் பெறுவதற்கான வயது வரம்பை 40  வயதிலிருந்து 18 வயதாக குறைக்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது. இதேபோல, திருமணமே செய்துகொள்ளாமல், முதிர் கன்னிகளாக வாழ்பவர்களுக்கும், விவாகரத்தானவர்களுக்கும் இதுபோல பென்சன் வழங்க மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது மிகவும் நல்ல திட்டம். இதை ஏற்கனவே தமிழக அரசு செயல்படுத்தி, பாரத திருநாட்டுக்கே முன்னோடியாக விளங்குகிறது. இதற்கு பரிசீலனையே தேவையில்லை. உடனடியாக மத்திய அரசு ஆதரவற்ற இதுபோன்ற பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் வயது வரம்பை 40 வயதிலிருந்து 18 வயதாக குறைக்கவேண்டும், எண்ணிக்கை வரம்பை இந்நேர்வில் ஒருபோதும் வலியுறுத்தக்கூடாது, மாநில அரசுக்கு முழுமையாக நிதி உதவி செய்யவேண்டும் என்பதுதான், சமூக நலனில் அக்கறைகொண்டுள்ள எல்லோருடைய கோரிக்கையாகும்.






நன்றி: Daily Thanthi

No comments:

Post a Comment