முன்னாள் தரைப்படை தளபதி வி.கே.சிங் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் சேர்ந்து நாடாளுமன்றத்தை முற்றுகை இடவும் தயாராக இருக்கிறார். 13 லட்சம் வீரர்களையும் அதிகாரிகளையும் கொண்ட மிகப்பெரிய ராணுவத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் தளபதி இவ்வாறு கடைநிலை அரசியல்வாதியின் பாணியில் ஜனநாயகத்தின் சின்னமான நாடாளுமன்றத்துக்கும் அதன் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் எதிராக செயல்படலாமா என்று நாட்டுப்பற்று மிகுந்தவர்கள் அதிர்ச்சியுடன் கேட்கின்றனர். வி.கே.சிங்கை அறிந்தவர்களும் அவரது நடத்தையை கவனித்து வருபவர்களும் வியப்படையவில்லை. இந்த ஆள் அப்படிப்பட்டவர்தான் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். தன்னை தளபதியாக நியமித்த அரசின் மீது வழக்கு தொடர்ந்த தலைமை தளபதி உலகிலேயே இவர் ஒருவர்தான். பிறந்த தேதியை தவறாக பதிவு செய்து, அதன் மூலம் ஓராண்டு முன்னதாக தளபதி பதவிக்கு வந்துவிட்டு, அது முடியும் நேரத்தில் ஓராண்டு நீடிப்பு கிடைப்பதற்காக தொடர்ந்த வழக்கு. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் தெரிவித்த கருத்துக்களும் சில கருத்துக்களை வெளியிடாமல் தவிர்த்த அசாதாரணமான அணுகுமுறையும் சிங்கின் நிஜ முகத்தை வெளிச்சமிட்டு காட்டியது. ஜனநாயகத்தில் எவரும் அரசியலுக்கு வரலாம், அரசுக்கு எதிராக பேசலாம், எழுதலாம். ஆனால் அரசியல் சாசனத்தை கட்டிக் காப்பதாக உறுதிமொழி எடுத்து உயர்ந்த பதவியை அலங்கரித்தவர்கள் அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசுவதும் செயல்படுவதும் கண்ணியக்குறைவான & கண்டிக்கத்தக்க & நடவடிக்கை. இன்னும் அவர் அரசாங்கம் அளித்த பங்களாவில்தான் குடியிருக்கிறார். மூன்று மாத அவகாசத்தை ஓராண்டாக நீட்டித்து வாங்கியுள்ளார்.
ஜெனரல் என்ற பட்டத்தை இன்னும் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்கிறார். அரசின் ஓய்வூதியம் பெறுகிறார். இதெல்லாம் அவரது உரிமைகள் என்ற போதிலும் ஏனைய உரிமைகளை போல சில கடமைகள், மரபுகள், நிபந்தனைகளுக்கு அவை கட்டுப்பட்டவை. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்திய ராணுவம் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பதும் அதில் அடங்கும். வி.கே.சிங்குகளை ஊக்குவிக்கும் கட்சிகள் விபரீதத்துக்கு விதை தூவுகின்றன.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment