மத்திய அமைச்சரவை மாற்றம் முடிந்திருக்கிறது. இந்த அரசின் கடைசி மாற்றம் என சென்ற வாரம் இங்கு குறிப்பிட்டு இருந்ததை பிரதமர் மன்மோகன் சிங் ஊர்ஜிதம் செய்துள்ளார். அதிரடி என பழக்கதோஷத்தில் ஊடகங்கள் கூறுகின்றனவே தவிர மாற்றத்தில் அப்படியொன்றும் திடுக்கிடும்படி இல்லை. கேஜ்ரிவாலால் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு மாற்றமும் பதவி உயர்வும் அளித்திருப்பது அதிர்ச்சி தருவதாக ஒருவர் விமர்சித்துள்ளார். அப்படி பார்த்தால் இந்த அமைச்சரவையே இருக்க முடியாது. கேஜ்ரிவால் பிரதமரைக்கூட விட்டுவைக்கவில்லை. குறைந்தது 2 நம்பிக்கைகளுக்கு மாற்றம் இடமளிக்கிறது: சட்டத்தில் இருந்து வெளிநாட்டுக்கு மாறிவிட்டதால் இனிமேல் குர்ஷித் பேனாவில் மைக்கு பதில் ரத்தம் ஊற்ற அவசியம் நேராது. நாட்டில் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்த எல்லோருக்கும் அந்த மொழி உலகம் முழுவதும் எப்படியெல்லாம் பேசப்படுகிறது என்பதும் தெரியும் என்ற எண்ணத்தில் இனிமேல் சசி தரூர் வார்த்தைகளை விடமாட்டார். ராகுல் காந்தி இந்த முறையும் அமைச்சரவையில் சேரவில்லை. எனினும் அவரது தோழர்கள் இணை அமைச்சர்களாக துடிப்புடன் செயல்பட்டதற்கு பலனாக தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் அமைச்சக பணித்திறன் குறித்து போதுமான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் பெரியவர்கள்கூட பந்தா பண்ணி சவால் விட்டு மரியாதையை குறைத்துக் கொண்ட சூழலில் இந்த இளம்படை இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக செயல்பட்ட புத்திசாலித்தனத்தை பாராட்ட வேண்டும்.நீண்ட காலத்துக்கு பிறகு காங்கிரஸ் கைக்கு திரும்பியுள்ளது ரயில்வே. அந்த பொறுப்பை வகித்த ஒருவர் பிரதமர் ஆனார். ஒருவர் 2 முறை தற்காலிக பிரதமர் ஆனார். மற்றொருவர் துணை பிரதமரானார். 8 பேர் முதல்வர் ஆனார்கள். வேறெந்த துறையை விடவும் இதன் செயல்பாடு வெட்ட வெளிச்சமானது. சிறப்பாக செயல்பட்டால் புகழின் உச்சத்தை தொடலாம். அல்லது தலைகீழ். கட்டணத்தை உயர்த்துவேன் என்று பதவி ஏற்ற உடனே பேட்டி அளித்த அமைச்சரை பன்சாலுக்கு முன் நாம் பார்த்ததில்லை. இந்த நேர்மையும் துணிவும் அமைச்சரவையின் எஞ்சிய காலத்துக்கு துணை வருமானால் அரசு நிர்வாகத்தில் ஊறிப்போன ஏராளமான குறைகளை சீர்படுத்த முடியும்.
No comments:
Post a Comment