கலப்பு திருமணத்தால் ஜாதிகளுக்கு இடையே விரோதம் குறையும்; படிப்படியாக ஜாதிகள் ஒழிந்துவிடும் என்று பெரியவர்கள் நம்பினார்கள். அதனால்தான் அரசே கலப்பு திருமணத்தை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் சமீபமாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எக்காரணம் கொண்டும் கலப்பு மணத்தை அனுமதிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவர் பகிரங்கமாக எச்சரித்தார். கொங்கு வேளாள கவுண்டர் பேரவையும் கலப்பு மணத்துக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. இவை ஜாதி கட்டமைப்பை பாதிப்பு ஏற்படாமல் கட்டிக் காக்கவும், முடிந்தால் பலப்படுத்தவும் எடுக்கும் முயற்சிகளாகவே தெரிகிறது. அவை பலனளிக்க தொடங்கியிருப்பதையும் பார்க்கிறோம். தர்மபுரியில் வன்னியர் பெண்ணும் தலித் வாலிபரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் தந்தை அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அவரது இனத்தவர்கள் சுமார் 2500 பேர் திரண்டு சென்று அருகிலுள்ள தலித் கிராமங்களை சூறையாடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுரண்டுபவன் , சுரண்டப்படுபவன் என்ற இருவர் தவிர இந்த நாட்டில் வேறு ஜாதிகள் இல்லை என்ற நக்சலைட் சித்தாந்தம் ஊறித் திளைத்த தர்மபுரி மாவட்டம் கால் நூற்றாண்டு காலத்தில் தலைகீழ் மாற்றத்தை சந்தித்துள்ளது. புகாரும் முன்தகவலும் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மெத்தனமாக இருந்தது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பல கேள்விகளுக்கும் இடமளிக்கிறது. மதம், ஜாதி, கட்சி சார்பு இல்லாமல் பணியாற்ற வேண்டிய அதிகாரிகள் வட்டாரம் இன்று எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்க்கும்போது சந்தேகம் வலுக்கிறது. சமூக சீர்திருத்தத்தில் நாட்டுக்கே முன்னோடியான தமிழகத்தில் ஜாதிக்கலவரம் மீண்டும் பெரிய அளவில் தலைதூக்கி இருப்பது துரதிர்ஷ்டமானது. வயதில் மேஜரான மகனோ மகளோ தன் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அது அவர்களின் அடிப்படை உரிமை. பெற்றோரின் விருப்பு வெறுப்புக்கு அங்கே இடமில்லை. பெற்று வளர்த்த பிள்ளைகள் கட்டுப்பட மறுப்பதை பெரிய அவமானமாக கருதி எல்லா பெற்றோரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தால் நாட்டில் அனாதைகள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment