முதலில் மத்திய அரசாங்கம் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கிறோம். ஆனால், தங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா? என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளட்டும் என்று கூறினர். மாநில அரசுகளை பொறுத்தமட்டில், எல்லா மாநிலங்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மராட்டியம், அசாம், ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்கள் மட்டுமே சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரித்தது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இதை இதுவரையில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சில்லறை வணிகத்தில் முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரே பெருவாரியாக ஈடுபட்டு வந்தனர். வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள்தான் பெரும்பாலும் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லா சாதியிலும் உள்ள இளைஞர்களும் சில்லறை கடைகள் வைக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஒரு பெரிய கோரிக்கை கிளம்பியது. திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி, மத்திய அரசாங்கம் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தார். ஆனால், குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை அவரிடம் இல்லாததால், அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில், மத்திய அரசாங்கத்துக்கு பெரிய லாபம் என்னவென்றால், அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசாங்கம் மீது யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதித்து, ஓட்டு எடுப்பு நடத்தவேண்டும் என்று பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் நோட்டீசு கொடுத்திருக்கிறது. மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், நிர்வாக ரீதியான முடிவுகள் மீது விவாதம் நடத்தமுடியாது என்று கூறுகிறது. இப்போது இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டு, ஓட்டு எடுப்புக்கு வந்தால், மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? எதிர்ப்பாக எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? என்பதில் ஒரு நிச்சயமற்ற நிலைமை இருக்கிறது. ஏனெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இப்போதுள்ள கணக்குபடி 235 உறுப்பினர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கிறது. இதுதவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உறுப்பினர்களின் 18 ஓட்டுகள் நிச்சயமாக சில்லறை வணிகத்துக்கு ஆதரவாக இருக்காது என்ற நிலையிலும், 22 உறுப்பினர்களைக்கொண்ட முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், 21 உறுப்பினர்களைக்கொண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் சில்லறை வணிகத்துக்கு எதிர்ப்பு கருத்தை கொண்டிருப்பதால், இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள்? என்று தெரியவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளின் பலம் இப்போதுள்ள நிலையில் 226 ஆகும்.
ஒரு நிச்சயமற்ற நிலையில் பிரதமர், திங்கட்கிழமை அன்று அனைத்து கட்சி தலைவர்களையும் இதுதொடர்பாக சந்தித்துப்பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில், ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டு, பாராளுமன்றம் தொடர்ந்து நடக்கவும், மக்களுக்கான பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடத்தவும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், எதிர்கட்சிகளும் உதவவேண்டும். சில்லறை வணிகர்களை பொறுத்தமட்டில், யார்-யார்? தங்களுக்கு ஆதரவு, யார்-யார்? தங்களுக்கு எதிர்ப்பு என்பதை கண்டுபிடித்துவிட முடியும். எங்கள் பதிலை தேர்தல் நேரத்தில் காட்டிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் சொன்னாலும், கதவை திறந்து உள்ளே வாருங்கள் என்று சொல்லிவிட்டு, அதன்பிறகு என்ன செய்யமுடியும்? என்பதைதான் மக்களின் குழப்பமான கேள்விக்குறி.
No comments:
Post a Comment