Sunday, 4 November 2012

ஊழலுக்கு அதிவிரைவுச் சாலை!

ஊழல் புரிபவர்களின் வழக்கை இழுத்தடிக்க நீதிமன்றங்கள் இடமளிக்கிறதோ என்கிற ஐயப்பாடு எழும் வேளையில், அத்தகைய அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது கர்நாடக லோக் ஆயுக்தா. பெங்களூர்-மைசூர் அதிவிரைவுச் சாலை அமைத்ததில் ஊழல் புகார் தொடர்பாக, கர்நாடகத்தின் மூன்று முன்னாள் முதல்வர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அதிவிரைவுச் சாலைகள், நாற்கரச் சாலைகளை "கட்டு-பராமரி-ஒப்படை' திட்டத்தின் கீழ் தனியார் அமைப்புகள் அமைத்து வருகின்றன. இவை அரசு தரும் அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொள்வதுடன், அரசியல்வாதிகளுக்கு ரகசியப் பங்கு, சுங்கக் கட்டண வசூல் மையங்களை விட்டுக்கொடுப்பது என பல்வேறு ஊழலுக்கும் வழிகோலுகின்றன. அத்தகைய புகார்களில் சிக்கியிருக்கும் சாலைதான் இந்த பெங்களூர் - மைசூர் அதிவிரைவுச் சாலையும்!

"நந்தி இன்ப்ராஸ்ட்ரக்சர் காரிடார் என்டர்பிரைஸ்' (நைஸ்) நிறுவனத்துக்கும் அதைச் சார்ந்த துணை நிறுவனங்களுக்கும் இந்த நெடுஞ்சாலைப் பணி வழங்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று லோக் ஆயுக்தா உறுதியாக நம்புவதால்தான் இத்தகைய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் சிறப்பம்சம் என்னவெனில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலம் முதல் யாரெல்லாம் முதல்வர்களாக இருந்தார்களோ அவர்களையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தக் கூறியுள்ளதுதான். அந்த வகையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.தேவ கௌடா, தற்போது பதவிவிலகல் கடிதம் கொடுத்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பாஜக-வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

சுமார் 110 கிலோமீட்டர் தொலைவுள்ள இந்தச் சாலை பல முறை கைவிடப்பட்டு, இதன் திட்டச்செலவு ரூ.4,000 கோடியானது. "கட்டு-பராமரி-ஒப்படை' திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இவர்கள் சம்பாதிக்கக் கூடும் என்ற அறிவியல்பூர்வமான கணிப்புகள் இல்லாமல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பதுதான் இந்த திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் ஒப்பந்தக் காலம் முடிவுற்றதும், இந்த அதிவிரைவுச் சாலையை அரசுக்குத் திரும்ப ஒப்படைக்கும்போது இந்த தனியார் நிறுவனம் (நைஸ்) தனது பயன்பாட்டில் வைத்திருந்த அனைத்தையும் ஒப்படைக்கத் தேவையில்லை. அதற்கு ஏற்ப ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு. இந்த ஒப்பந்தத்தில், அரசுக்குத் திரும்ப அளிக்க வேண்டிய நிலப்பரப்பு குறைவாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்பு பல ஆயிரம் கோடி.

திரும்ப ஒப்படைக்க வேண்டிய நிலப்பரப்பின் அளவைக் குறைக்கக் காரணம் என்ன? தனியார் நிறுவனம் பெரும்பயன் பெறும் வகையில் இதைச் செய்தவர் யார்? அதிவிரைவு நெடுஞ்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலம், தனியாருக்கு குறைந்தவிலையில் விற்கப்பட்டதன் பின்னணி என்ன? இந்த ஒப்பந்தத்தில் இன்னும் அறியப்படாத ஓட்டைகள் என்னென்ன? எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்பது நிச்சயம்.

மூன்று முன்னாள் முதல்வர்களை லோக்ஆயுக்தா விசாரணைக்கு உட்படுத்தும் என்றால், பாரபட்சம் இல்லாமல், கட்சிப் பாகுபாடு இல்லாமல், அமைச்சர் என்றும் பாராமல் விசாரிக்கும் என்றால், இதுபோல், லோக்பால் சட்டம் அமலுக்கு வந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக பிரதமருக்குக் கடிதம் கொடுத்திருக்கும், எஸ்.எம். கிருஷ்ணா. இந்த வழக்கை எதிர்கொள்வதற்காக பதவி விலகுவதாக யாரும் பேசவில்லை. மாநிலத் தேர்தலில் முழுமையாக ஈடுபடவே பதவி விலகுவதாகச் சொல்லப்படுகிறது.

பெங்களூர்-மைசூர் அதிவிரைவு சாலை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா அதிவிரைவு நெடுஞ்சாலைகளிலும் எந்தவித அறிவியல்பூர்வமான கணக்கீடும் இல்லாமல் ஒப்பந்தக் காலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுங்கக் கட்டணத்தை விருப்பம்போல நிர்ணயித்துக்கொள்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது எல்லாரும் அறிந்ததுதான்.

நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், செல்ல வேண்டிய ஊர்களுக்கு வேகமாகச் சென்றடையவும் இந்த அதிவிரைவு நெடுஞ்சாலைகள் பேருதவி செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இத்தகைய சாலைகளின் மொத்தச் செலவு என்ன? இந்த சாலையைப் பயன்படுத்தப்போகும் வாகனங்கள் எண்ணிக்கை என்ன? செலவு செய்த தொகை மற்றும் நியாயமான லாபத்தைப்பெற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று திட்டமிட்டு, கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், அதைத்தான் நமது அரசியல்வாதிகள் செய்வதில்லை.

ஒவ்வொரு நாற்கரச்சாலைத் திட்டத்திலும் கட்டணம் செலுத்துவோர் மக்கள்தான். இந்தச் சாலை அமைக்க அந்தத் தனியார் நிறுவனம் செய்த செலவு என்ன, இன்றைய தேதி வரை- அதாவது தான் அப்போது செலுத்திய கட்டணம் வரை - இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ள பணம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் முழு உரிமை உள்ளது.

"கட்டு-பராமரி-ஒப்படை' திட்டத்தில், ஒப்படைக்கும்போது தொடக்க காலத்தில் இருந்த அதே மெருகுடன் சாலைகள் விட்டுச்செல்லப்பட வேண்டும். ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்கள் பார்க்கும் வகையில் இணைய தளத்திலும், சுங்கக் கட்டண வசூல் மையத்திலும் வைக்கப்பட வேண்டும்.

நியாயமான லாபம் பெறுவதை அனுமதிக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமான சலுகைகளையும், பெரும் லாபத்தையும், 20 ஆண்டுகளுக்கு மேல் சுங்கம் வசூலிக்கும் உரிமையையும் அளிக்கும் நமது ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்கைத் தட்டிக் கேட்க யாருமில்லையே என்று வேதனைப்படும் வேளையில், கர்நாடக லோக் ஆயுக்தா தருமத்தின் குரலாக எழுந்திருக்கிறது.

நாற்கரச் சாலைச் சுங்க மையங்கள் பற்றிய மறுபரிசீலனை தேவை. அதைவிட அவசரத் தேவை வலிமையான லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள்!





நன்றி: Dinamani

No comments:

Post a Comment