Wednesday, 7 November 2012

இந்தியாவாகும் அமெரிக்கா!

உலக சரித்திரத்தில் மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் இந்த வாரத்தில் நிகழ இருக்கின்றன. மேற்கே அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வாரா அதிபர் பராக் ஒபாமா என்பது தீர்மானிக்கப்படும். அதேபோல, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூடி ஓய்வுபெறும் அதிபர் ஹு ஜின்டாவுக்கும், பிரதமர் வென் ஜியாபாவுக்கும் மாற்றாக, ஜி ஜின்பிங்கையும், லீ கெகியாங்கையும் தேர்வு செய்ய இருக்கிறது.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா, மாட்டாரா என்பதில் கருத்துக் கணிப்புகளில் தெளிவான முடிவுகள் இல்லை. அதற்குக் காரணம், 2008-இல் அதிபர் பராக் ஒபாமாவுக்கு இருந்த அளவுக்கு இந்த முறை வெள்ளையர்களின் வாக்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

  குடியரசுக் கட்சியும் அதன் வேட்பாளருமான ரோம்னியும் மறைமுகமாக நிறவெறியைத் தூண்டும் பிரசாரத்தில் இறங்கி இருப்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. அதிக அளவில் கொள்கை வேறுபாடும், குறிப்பிடத்தக்க திட்டங்களை முன்வைக்கும் தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் போகும்போது, இங்கே இந்தியாவில் ஜாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பதுபோல, அமெரிக்காவில் குடியரசுக் கட்சி நிறவெறியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது.

 வெள்ளையர்கள் எல்லோருமே ஒபாமாவுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படி இருந்திருந்தால், கடந்த 2008 தேர்தலிலேயே அவர் தோல்வி அடைந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெருவாரி இனத்தவரான தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக வெள்ளையர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டிருப்பதும், பதவியும், அதிகாரமும் தங்கள் கையைவிட்டு நிரந்தரமாகப் போய்விடுமோ என்ற பயம் அதிகரித்திருப்பதும் கடந்தமுறை அவருக்கு வாக்களித்த வெள்ளையர்களில் ஒரு பகுதியினரை இந்தத் தடவை அதிபர் ஒபாமாவுக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 கறுப்பர்களைப் பொருத்தவரை, அவர்களில் பெரும்பாலோர் எப்போதுமே ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களாக இருப்பவர்கள்தான். கறுப்பர்களில் மிகக் குறைவான சிலர் மட்டுமே குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாகவே, தங்களது இனத்தைச் சேர்ந்த அதிபர் ஒபாமா தங்களுக்கு எந்தச் சிறப்பு சலுகையும் காட்டவில்லை என்பதும், வெள்ளையர்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறார் என்பதும் கறுப்பு இன மக்கள் மத்தியில் அவர்மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த முறைபோல, ஒட்டுமொத்தமாக அவர்கள் அதிபர் ஒபாமாவுக்கு வாக்களிப்பார்களா என்று  உறுதியாகக் கூற முடியவில்லை. ஒருவேளை அவர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டால் என்ன ஆகும் என்று ஜனநாயகக் கட்சி பயப்படுவதில் நியாயம் இருக்கிறது.

 கடந்த 2008 தேர்தலின்போது, ஆரம்பக் கட்டத்தில் அதிபர் பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெயின் கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருந்தார். அமெரிக்கா சந்தித்த பொருளாதார வீழ்ச்சியும், வால்ஸ்ட்ரீட் சரிவும்தான், கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாவுக்குச் சாதகமாகத் திருப்பின.

 இந்தத் தேர்தலில், அதிபர் ஒபாமாவுக்கு ஓரளவுக்குக் கைகொடுக்கப் போகும் சம்பவம் சாண்டி புயலாக இருக்கக் கூடும். மிக அதிகமான தாக்கத்தையும், சேதத்தையும், துயரத்தையும் அளித்த சாண்டி புயலின் பின் விளைவுகளை அதிபர் ஒபாமாவும் அவரது நிர்வாகமும் எதிர்கொண்ட விதம், அவரது வெற்றி வாய்ப்பைப் பிரகாசமாக்கி இருக்கிறது. தோல்வியைத் தழுவினால், மிட் ரோம்னிக்கு சாண்டி புயல் ஒரு சமாதானமாக அமையக்கூடும்!

 அமெரிக்கத் தேர்தல் பற்றி அலசும்போது நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். பொதுமக்களின் வாக்குகள் மட்டுமே அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில்லை. ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும்கூட அங்கே வாக்குகள் உண்டு. இரண்டும் சேர்ந்துதான் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வெற்றி அப்படித்தான் தீர்மானிக்கப்பட்டது. அதெல்லாம் ஏன், கடந்த 2008 தேர்தலையே எடுத்துக்கொண்டால், மக்களின் நேரடி வாக்குகளைவிட, மாநிலங்களில் உள்ள அவைகளின் உறுப்பினர்களுடைய வாக்குகள்தான் அதிபர் ஒபாமாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்.

 அமெரிக்கத் தேர்தல்களிலும் பணம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பணம் மட்டுமல்ல, தொழிலதிபர்களும், வர்த்தக நிறுவனங்களும்கூடத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் வலிமை பெற்றவை. புளோரிடா, ஒஹியோ, வர்ஜினியா ஆகிய மூன்று முக்கியமான மாநிலங்களில் அதிபர் ஒபாமாவும், மிட் ரோம்னியும் சேர்ந்து செலவழித்திருக்கும் பணம் ஏறத்தாழ 5,000 லட்சம் ரூபாயாம்! மிக அதிகமாகப் பணம் செலவழிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் இதுதான் என்கிறார்கள்.

 கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான தொலைக்காட்சி விளம்பரங்கள் இரு தரப்பாலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கடந்த 2008 தேர்தலில் இப்போதைய அளவில் 40% தான் செலவிடப்பட்டது. இப்படி விளம்பரத்திற்குத் தண்ணீராகப் பணம் செலவழிக்கும் கலாசாரத்தை ஏற்படுத்தியதே பராக் ஒபாமாதான். கடந்த தேர்தலில், அதிபர் ஒபாமா செலவழித்ததில் கால் பங்குகூட அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கெயின் செலவழிக்கவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் சரிக்குச் சரியாகப் பணத்தை வாரி இறைத்து அதிபர் ஒபாமாவுக்குத் தண்ணீர் காட்டி இருக்கிறார் மிட் ரோம்னி.

 விளம்பரம் என்ற பெயரில் பணம் களமிறங்கி இருக்கிறது. கறுப்பர், வெள்ளையர் என்ற பெயரில் இனப் பிரச்னை தேர்தலில் மையப்படுத்தப்பட்டிருக்கிறது. தடுமாறும் அமெரிக்கப் பொருளாதாரத்தை எப்படி சீரமைப்பது, வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு என்ன தீர்வு என்பதை எல்லாம் மையப்படுத்தாமல் வரி விலக்கு, ஆரோக்கியக் காப்பீடு போன்றவை தேர்தல் பிரசாரமாகிறது. நல்லவேளை இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதிகள் தரப்படாத குறைதான்.

 ஒரு விஷயத்தில் நமக்கு சற்று ஆறுதல். உலகமயமாக்கலின் தாக்கமோ என்னவோ, அமெரிக்க அரசியலும் நம்மைப்போல மாறிக்கொண்டு வருகிறது!




நன்றி: Dinamani

No comments:

Post a Comment