Monday, 5 November 2012

நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் - தீர்வுக்கான தொடக்கம்

நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குவாலியர் நகரிலிருந்து புதுதில்லிக்கு சுமார் 20,000 விவசாயிகளுடன் புறப்பட்ட ஜன சத்யாகிரக இயக்கத்தின் பேரணியை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு ஒப்பந்தம் போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்.

இந்தப் பேரணியை அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது பேரணி தில்லிக்கு வந்து தலைநகரத்தின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்யும்போது தலையிட்டு இந்த ஒப்பந்தத்துக்கு உடன்பட்டிருக்கலாம். இருப்பினும், ஆக்ரா நகரத்திலேயே இந்தப் பிரச்னைக்கு ஒருவாறாகத் தீர்வு கண்டுள்ளார். இதைத் தீர்வு என்பதைக் காட்டிலும், ஒரு தீர்வுக்கான தொடக்கம் என்றே சொல்லலாம்.

பத்து அம்சங்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் முதன்மையான நோக்கம், நிலச் சீர்திருத்த தேசியக் கொள்கை வரைவு மசோதாவை 6 மாதங்களுக்குள் உருவாக்கி, மக்கள் மன்றத்தின் கருத்துக்கேட்பு நடத்துவது என்பதுதான். அடுத்ததாக, நிலமற்ற அனைவருக்கும் 10 சென்ட் நிலத்தை உறுதிப்படுத்துவது. இந்திரா ஆவாஸ் யோஜனா -வில் வழங்கப்படும் வீடுகட்டும் நிதியை இரட்டிப்பாக்குவது, நிலத்தகராறுகளைத் தீர்க்கத் தனித் தீர்ப்பாயம் என்று பல கோரிக்கைகள் இந்த 10 அம்சங்களில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் ஜன சத்யாகிரக அமைப்பும் மத்திய அமைச்சரும் கையெழுத்திட்டாலும், இந்த காகிதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இதனால் எங்களுக்கு என்ன லாபம்? இது நடைமுறைக்கு வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்று பலவாறாகக் கேள்விகள் எழுப்புகின்றனர் பேரணியில் பங்கு கொண்ட நிலமற்ற விவசாயிகள்.

இதற்கு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறிய பதில்: நிலம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரம். மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு அழுத்தம் தருகிறீர்களோ அதே அளவுக்கு மாநில அரசுக்கும் அழுத்தம் கொடுங்கள். இது உடனடியாகத் தீர்க்கப்படும் பிரச்னை அல்ல. அனைவருக்கும் கல்வி, தகவல் அறியும் உரிமைச் சட்டம்போல இதுவும் தொடர்ச்சியான போராட்டத்துக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும் என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அவர் சொல்வதுதான் நடைமுறை உண்மை. இருப்பினும் இந்த ஒப்பந்தம், மத்திய அரசுக்கு ஒருவகையான நெருக்குதலைத் தந்து, இதற்கான வரைவு மசோதாவை உருவாக்கும் அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காக அமைச்சர் ரமேஷ் பாராட்டுக்கு உரியவராகிறார்.

ஊரக வளரச்சித் துறையின் 1992-கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 43% மக்கள் நிலமற்ற ஏழைகளாக இருக்கிறார்கள். தற்போதும் இதே நிலைமைதான் நீடிக்கும் என்று நம்பலாம். மாற்றம் பெரிய அளவில் நிகழ்ந்ததற்கான அடையாளங்கள் எந்த மாநிலத்திலும் தென்படவில்லை.

நிலஉச்சரவரம்புச் சட்டம், பூமிதான இயக்கம் ஆகியவற்றை லட்சியக் கனவு நிறைவேறியதாகக் கொள்ளலாமே தவிர, வெகுஜனக் கனவு நிறைவேறியதாகக் கொள்ள முடியாது. இவ்வாறாக நிலம்பெற்ற விவசாயிகளும்கூட, இந்த நிலத்தைத் தொடர்ந்து தங்கள் வசம் வைத்துள்ளார்களா என்பதேகூடச் சந்தேகம்தான். பஞ்சமர் நிலங்கள் எவ்வாறு மற்றவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பத்திரங்கள் மாற்றப்பட்டனவோ அதேபோன்று பல சம்பவங்களில் நிலமற்ற ஏழைகள், கொஞ்ச காலத்துக்கு நிலத்தைப் பயன்படுத்தியதோடு சரி. மீண்டும் அவர்கள் நிலமற்ற விவசாயிகளாக மாறும் சரித்திரம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

காணி நிலம் வேண்டும் என்றான் மகாகவி பாரதி. ஒரு காணி என்பது 100 குழி நிலம். ஏறக்குறைய 1.37 ஏக்கர். ஆனால், ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருப்பதோ 10 சென்ட். 10 சென்ட் நிலத்தை வாங்கி என்ன செய்வது என்று விவசாயி கேட்கும் கேள்வி நியாயமானது. இதில் ஒரு குடிசை போடலாம். சிறிய அளவில் காய்கறித்தோட்டம் வைக்கலாம். அதற்கு மேலாக, இதில் வேளாண்மை செய்துவிட முடியாது.

தமிழ்நாட்டில் ஒரு முன்னோடித் திட்டமாக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் முந்தைய அரசில் ஏற்படுத்தப்பட்டது. பல விவசாயிகள் நிலம் கிடைக்கப்பெற்றார்கள். ஆனால், இந்த நிலம் மானாவாரிப் பயிருக்கு மட்டுமே உகந்தது, விளைச்சலுக்குத் தகுதியாக இல்லை, கட்சிக்காரருக்கு நல்ல நிலம் கிடைத்தது என்பதுபோன்ற குறைபாடுகள்தான் மேலதிகமாக இருந்தன. மத்திய அரசு அனைத்து நிலமற்ற ஏழைகளுக்கும் நிலம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் இதே குறைகள் மீண்டும் சொல்லப்படும். இத்தகைய நிலத்தை விற்பனைசெய்ய முடியாது என்றாலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்துவிடும் முறைமைகளைத் தடுத்துவிடவும் முடியாது.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிலமற்ற ஏழைகளைக் கணக்கெடுத்து, அந்தக் கிராமத்தின் அருகிலேயே வேளாண்மைக்குத் தகுந்த அரசு நிலத்தைத் தேர்வுசெய்து கூட்டுப்பண்ணை அமைப்பதுதான் இதற்கான தீர்வாக இருக்க முடியும். இந்தக் கூட்டுப் பண்ணையில், மாநில வேளாண்மைத் துறையை லாபத்தில் பங்கு கேட்காத பங்குதாரராகச் சேர்க்க வேண்டும். அப்போதுதான், இந்த நிலத்தை எந்தவகையிலும் மற்றவர்கள் ஆக்கிரமிப்பு செய்யமுடியாத நிலைமைஏற்படும். அதே நேரத்தில் கூட்டுப்பண்ணையில் கிடைக்கும் விளைச்சலை அரசு நேரடிக் கொள்முதல் செய்வதோடு, விவசாயிகளுக்கு உரிய லாபத்தைச் சமமாகப் பங்கிட்டு அளிக்கவும் முடியும்.

நிலம் இல்லாத விவசாயிக்கு நிலம் என்பதை புதிய கண்ணோட்டத்தில், சிந்தித்துச் செயல்படுத்தாவிட்டால், நிலம் வழங்கப்பட்டாலும், பயனின்றிப்போகும்.

சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்தும், இன்னும் நாம் தீர்க்காமல், தீர்க்க எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருக்கும் பிரச்னைகளில் ஒன்று இது. விவசாயமே வேண்டாம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற விபரீத யோசனையைச் செயல்படுத்தாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த நேரத்தில் விவசாயிகள் ஓரணியில் திரண்டிருப்பதும், அவர்களது குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருப்பதும் நல்லதொரு தொடக்கத்தின் அறிகுறி!





நன்றி: Dinamani

No comments:

Post a Comment