ஆனாலும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அயர்லாந்து நாட்டில் ஏற்பட்ட கொடுமை கண்டு, ஒட்டுமொத்த தமிழகமே துடித்துவிட்டது. பெல்காமில் கர்நாடக மின்சார பகிர்மான கழக செயற்பொறியாளராக பணியாற்றி, ஓய்வுபெற்ற அண்டனப்பாவின் ஒரே மகள் சவிதா. பல் மருத்துவரான சவிதாவுக்கு வடகர்நாடகத்தில் உள்ள ஹவேரி என்ற ஊரில் உள்ள பிரவீண் என்ற பொறியாளருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மணமக்கள் இன்பத்தின் உச்சியிலேயே சிறகடித்து பறந்தனர். பிரவீண், அயர்லாந்து நாட்டில் உள்ள கால்வே என்ற நகரில் பணிபுரிந்ததால், சவிதா தன் இல்வாழ்க்கையைத் தொடங்க அங்கு சென்றார். மணவாழ்க்கையின் அடையாளமாக சவிதா கருவுற்றதும், மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார். தங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்கவேண்டும் என்று இருவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
ஆனால், கருவுற்ற 17-வது வாரத்தில் சவிதாவுக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. கரு சிதைவுக்கான அறிகுறியும் அவருக்கு தென்பட்டது. மருத்துவம் படித்த பெண்ணாயிற்றே, உயிரைக்காப்பாற்ற கருச்சிதைவு செய்துவிடுங்கள் என்று சவிதாவும், பிரவீணும், டாக்டரிடம் கெஞ்சினார்கள், கதறினார்கள். ஆனால், மருத்துவமனை டாக்டர்கள் இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு. எங்கள் மதத்தில் அபார்ஷன் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்று கூறி, மறுத்துவிட்டனர். சவிதா கேட்கிறார், உங்கள் நாட்டில் உள்ள இந்த சட்டம், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்குத்தானே பொருநதும். நான் இந்து பெண்ணல்லவா? எனக்கு எப்படி பொருந்தும்? என் உயிரை காப்பாற்றவிடாமல் இந்த சட்டத்தை ஏன் குறுக்கே போடுகிறீர்கள்? அபார்ஷன் செய்துவிடுங்கள் என்று கதறி அழுதார். அவரது கணவர் பிரவீணும், டாக்டர்களிடம் கெஞ்சினார். ஆனால், மத சட்டத்தில் இடமில்லாததால், சவிதா என்ற பிஞ்சுமலர் கருகிவிட்டது. அயர்லாந்து நாட்டில் இந்த சம்பவம், பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.
உடனடியாக இத்தகைய சட்டத்தில், மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர். ஏற்கனவே, தாயின் உயிருக்கு ஆபத்து என்றால், அபார்ஷன் செய்யலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும், அதை அந்த நாட்டு அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. மத நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால், இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மதங்களில் வைத்திருந்த கோட்பாடுகள், இந்த காலத்திற்கு பொருந்தாது. காலம் மாறும்போது, கோட்பாடுகளும் மாறவேண்டும். அன்றைய காலக்கட்டங்களில், தவறான உறவுகளைத்தடுக்க அபார்ஷன் தடை செய்யப்பட்டது சரிதான். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் தாயின் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது, அதே சட்டத்தை காரணம் காட்டுவது சரியல்ல. மத்திய அரசாங்கம் உடனடியாக இந்த பிரச்சினையை அயர்லாந்து நாட்டு அரசாங்கத்திற்கும், போப் ஆண்டவரின் கவனத்திற்கும் எடுத்துச்செல்ல வேண்டும். சவிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் வேறொரு சவிதாவுக்கு ஏற்படாமல் இருக்க, சர்வதேச நாடுகளும், கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையும் நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே, தமிழக மக்களின் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment