Saturday, 3 November 2012

கல்விக் கடன் - கருணை காட்டுங்கள்


படிக்க யார் வங்கியில் கடன் கேட்பார்கள்? இல்லாதவர்கள்தான். அதனாலேயே அவர்களிடம் கடனை திரும்ப வசூலிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் கடன் தர மறுக்கின்றன வங்கிகள். அதற்கு பல காரணங்களையும் சாக்கு போக்குகளையும் சொல்கின்றன. கிடைக்காது என்பதாலேயே பலர் கல்விக் கடனுக்காக வங்கிகள் பக்கமே போவதில்லை.திறமை இருந்தும் பணம் இல்லாததால் படிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்துபவர்கள் பலர். படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் வங்கிகள் கல்விக் கடன்களை தாராளமாக வழங்க வேண்டும், அதற்கு பிணை கேட்கக் கூடாது என்கிறது மத்திய அரசு. யார் உத்தரவிட்டால் என்ன, நாங்கள் நினைத்தால்தான் கடன் தருவோம் என்ற பாணியில் சில வங்கிகள் செயல்படுகின்றன. வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஏழை மாணவி நர்சிங் கோர்ஸ் படிக்க பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் கடன் கேட்டுள்ளார். பள்ளி படிப்பில் நன்றாக படிக்கவில்லை என காரணம் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது அந்த பொதுத்துறை வங்கி. ஏமாற்றமடைந்த அந்த மாணவி கோர்ட் படியேறி விட்டார்.

மாணவியின் மனுவை விசாரித்த நீதிபதி அரி பரந்தாமன், பின் தங்கிய வகுப்பில், மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவியின் கல்விக் கடனை வங்கி நிராகரித்ததை ஏற்க முடியாது. கல்விக் கடன் பெற பள்ளிப் படிப்பில் அதிக மார்க் வாங்கியிருக்க வேண்டும் என எந்த விதிமுறையும் இல்லை. இதையெல்லாம் காரணம் காட்டி கடன் தர மறுப்பது நியாயமில்லை எனக் கூறியிருக்கிறார். அதோடு, சட்ட மேதை அம்பேத்கர் எஸ்எஸ்எல்சி தேர்வில் 750க்கு 287 மதிப்பெண்தான் வாங்கியிருந்தார். ஆனால் பின்னாளில் அவர் சட்டம் படித்து நாட்டின் அரசியல் சாசனத்தை எழுதவில்லையா? பள்ளிப் படிப்பின்போது வாங்கும் மதிப்பெண்ணுக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி, மாணவி கேட்ட  4 லட்சம் கடனை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை, உதவிகளை பெறுவதற்குக் கூட ஏழைகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமை இருப்பது வேதனையானது. இந்த நிலை மாறினால்தான் ஏழைகளின் அறிவுக் கண்களை கல்விக் கடன்கள் மூலம் திறக்கமுடியும்.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment