சி.ஏ.ஜி. பதவிக்கு பொருத்தமானவரை பிரதமரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி நியமிக்கிறார். தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி பதவி என்பது சாதாரணமானது அல்ல. அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பதவி. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் அந்தஸ்திற்கு இணையானது. சி.ஏ.ஜி. அறிக்கையை பாராளுமன்றத்தில் உள்ள பொது கணக்கு குழு ஆராய்ந்து, நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யும். தற்போது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக இருப்பவர் வினோத் ராய். இவர், பதவி பொறுப்பை ஏற்றதில் இருந்து பல ஊழல்களை வெளியே கொண்டு வந்திருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் என்று பல ஊழல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். அந்த ஊழல்கள், பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன. ஊழல்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது, நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடக்கின்றன.
சி.ஏ.ஜி. அறிக்கை என்றாலே, இனிமேல் ஊழல்வாதிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். மக்களுக்கும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி மீது பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல், ஊழல்கள் நடந்தால், நிச்சயமாக சி.ஏ.ஜி. அதிகாரியின் கழுகு பார்வையில் இருந்து தப்பவே முடியாது என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால், சி.ஏ.ஜி. அறிக்கைகளால் அரசுகளுக்கு சங்கடம்தான். சி.ஏ.ஜி. அறிக்கையில் இனிமேல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் எந்த ஊழலும் வராமல், தூய்மையான அரசாங்கத்தை நடத்துவோம், ஊழலுக்கு விடைகொடுப்போம், நாட்டில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதி அளித்துக்கொண்டு, பணியாற்றவேண்டிய அரசியல்வாதிகள், சி.ஏ.ஜி. அமைப்பையே குறைகூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஊழல் இல்லையென்றால், சி.ஏ.ஜி.க்கு ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கேள்வி.
சி.ஏ.ஜி. அமைப்பை இன்னும் அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றுவதற்கு பதிலாக, இதை பலவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபடுகிறதோ? என்ற சந்தேகத்தை பிரதமர் அலுவலக இணை மந்திரி நாராயணசாமி உருவாக்கி உள்ளார். சி.ஏ.ஜி. அமைப்பில் இப்போது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி என்ற ஒரேயரு பதவி இருக்கிறது. இதை, பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக மாற்றுவது குறித்து மத்திய அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசின் முடிவுகளை, சி.ஏ.ஜி. அமைப்பு விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது. தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அரசியல் அமைப்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் எல்லைக்குள் இருந்து பணியாற்ற வேண்டும் என்று கூறிவிட்டு, நாடு முழுவதிலும் இருந்து வந்த எதிர்ப்பு அலைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்போது, தான் அவ்வாறு பேசவில்லை, குறிப்பிட்டு சி.ஏ.ஜி.யை சொல்லவில்லை. தன் பேச்சு திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று சமாளிக்கிறார்.
அரசியல்வாதிகளே எப்போதும் எதையாவது கூறிவிட்டு, அது பாதகமான விளைவை ஏற்படுத்தினால், பத்திரிகையாளர்கள் திரித்து எழுதிவிட்டார்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால், மத்திய மந்திரி நாராயணசாமி சொன்ன கருத்தை, பி.டி.ஐ. செய்தி நிறுவனம் டேப் எடுத்தே வைத்திருக்கிறது. சி.ஏ.ஜி. அமைப்பை பலவீனப்படுத்த முயற்சி செய்யவில்லை என்றால், நல்லதுதான். ஆனால், இனிமேலும் ஒருபோதும் அதை பலவீனப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையே வரக்கூடாது என்பதுதான் பொது மக்களின் வேண்டுகோள்.
No comments:
Post a Comment