உடன் பணியாற்றும் பெண்ணை பற்றி இணையத்தில் அவதூறு பரப்பிய சாஃப்ட்வேர் இன்ஜினியர் புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார் என்பது இன்டர்நெட்டில் மேயும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய செய்தி. காதலனுடன் தனது தோழி பழகுவதை சகிக்க முடியாமல் அவரை பாலியல் தொழிலாளியாக சித்தரித்து இணையத்தில் அவரது செல்போன் நம்பரையும் போட்டிருக்கிறார். இந்த மாதிரி நம்பர்களுக்காகவே இணையத்தில் மேயும் ஆசாமிகள் அதன் மூலம் தொல்லை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை விசாரித்ததில் விஷயம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு இளம் பொறியாளரின் வாழ்க்கை இடரில் சிக்கியிருக்கிறது. சில நாட்கள் முன்புதான் ஒரு பிரபலமான பாடகியின் புகாரை தொடர்ந்து அரசு ஊழியர் கைதாகி சிறையில் கிடக்கிறார். ஜனாதிபதிக்கும் விமானத்துக்கும் மிரட்டல் விடுத்தால்தான் போலீஸ் துப்பறிந்து கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தரும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. நிறைய படித்தவர்கள் மத்தியிலும் 'உண்மையான பெயர், முகவரியை மறைத்து போலி பெயர்களில் இணையத்தில் என்ன செய்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது' என்ற எண்ணம் நிலவுகிறது. இது முற்றிலும் தவறானது. கைரேகை, கால் தடங்கள், வாகன டயர் தடங்கள் போன்ற தடயங்களைக்கூட அழித்துவிடலாம். செல்போன், இன்டர்நெட் வழியிலான மின்னணு தடயங்களை ஒருபோதும் அழிக்க முடியாது. மறைந்திருந்தாலும் வெளியே கொண்டுவந்து விடக்கூடிய ஆதாரங்கள் அவை. எனவே இந்த தகவல் தொடர்பு சாதனங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம்.
இந்தியாவில் செல்போன் அறிமுகமானபோது மிகப்பெரிய சமூக புரட்சிக்கு விதை போடப்படுவதாக ஒரு தொலைத்தொடர்பு நிறுவன அதிபர் குறிப்பிட்டார். எப்படி சொல்கிறீர்கள் என கேட்டதற்கு, 'ஆணுடன் பெண் பேச முடியுமே' என்றார் அவர் நெற்றியடியாக. தொலைநோக்கு பார்வைக்கு இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும். அவர் வாக்கு அப்படியே பலித்தது. நல்ல காதலோ கள்ள காதலோ ஆண் , பெண் உறவில் பிரதான இடத்தை பிடித்தது செல்போன். பாட்டிலை விட்டு வெளியே வந்த பூதத்தை மறுபடி பிடித்து அடைக்க முடியுமா? எந்த புரட்சியிலும் சில சேதாரங்களை தவிர்க்க முடியாது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment