Sunday, 25 November 2012

தர்மபுரி கலவரம் ஒரு காதல் நாடகம்

தர்மபுரி கலவரம் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மகள் ஒரு தலித் வாலிபனை காதலித்து மணம் செய்ததால் மனம் உடைந்த தந்தை தூக்கில் தொங்கினார் என்றும்; அதனால் ஆவேசம் அடைந்த அவரது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஊரை ஒட்டியுள்ள தலித் காலனிகளை சூறையாடியதாகவும் முதலில் கூறப்பட்டது. கலப்பு திருமணத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி உறுதியான நிலை எடுத்துள்ளதன் தொடர்ச்சியாக இச்சம்பவம் சித்தரிக்கப்பட்டது. சிறிய தாமதத்துக்கு பின்னர் அக்கட்சியின் நிறுவனர் அளித்த பேட்டியில் தர்மபுரி கலவரத்துக்கும் தனது கட்சியினருக்கும் தொடர்பில்லை என மறுத்துள்ளார். 'தற்கொலை செய்தவர் விஜயகாந்தின் தேமுதிகவை சேர்ந்தவர். தலித் வீடுகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் வன்னியர்கள் அல்ல. நாங்கள் காதலுக்கு விரோதியும் அல்ல' என விளக்கம் தந்தவர், எந்தெந்த ஜாதிகளை சேர்ந்த எத்தனை பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் வெளியிட்டு இருக்கிறார். தான் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அமைப்பு விரிவாக திட்டமிட்டு தமிழகம் முழுவதும் உள்நோக்கத்துடன் காதல் நாடகத்தையும் கட்டாய திருமணத்தையும் அரங்கேற்றி வருவதாக அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். முதலில் கடைக்கண் பார்வை வீசுவது, அடுத்து கடிதம் கொடுப்பது, அதன் பலனாக வாய்க்கும் முதல் ரகசிய சந்திப்பில் கைபேசி பரிசளிப்பது, அதன் மூலம் நெருக்கத்தை வளர்ப்பது, ஏமாற்றி உறவு கொள்வது, நிர்பந்த சூழலில் தாலி கட்டுவது, சொத்து அல்லது பணம் பறிப்பது, முழுமையாக  கழற்றிவிடுவது ஆகியவை இந்த காதல் நாடகத்தின் காட்சிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் விவரிக்கிறார். 

இவ்வாறான மோசடி ஏனைய மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகம் நடப்பதாக சொல்வதை உறுதிப்படுத்த புள்ளிவிவரங்கள் இல்லை. பேராசையில் மனிதன் செய்யும் பல தில்லுமுல்லு நடவடிக்கைகளில் கபடக் காதலும் அடங்கும். ஆனால் ஜாதி வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க சுலபமான வழி இதுதான் என்று தீர்மானித்து அதற்காக யாரோ திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது உண்மையானால் அரசு உடனே தலையிட்டு தடுக்க வேண்டும். தவறினால் மிகப்பெரிய சமூக சீரழிவு நிகழ்வதை தவிர்க்க இயலாது.






நன்றி: Dinakaran

No comments:

Post a Comment