Saturday, 3 November 2012

மலாலா எனும் மந்திரம்


பெண் குழந்தை என்றால் எதிர்கால இல்லத்தரசியாக மட்டுமே பார்க்கப்படுவதும்  வளர்க்கப்படுவதும் ஆசிய கலாசாரம். படித்தவர் நிறைந்த குடும்பங்களும் விதிவிலக்கு இல்லை. இந்த சூழலில் பாகிஸ்தானில் தன் பெண்ணை  வீராங்கனையாக, எதிர்கால பிரதமராக உருவாக்க ஊக்கம் கொடுக்கிறார் ஒரு அப்பா என்பது வியப்பு. அந்த 14 வயது சிறுமி பெயர் இன்று உலகம் முழுவதும் ஒலிக்கிறது. 'நான்தான் மலாலா', 'என் பெயர் மலாலா' என்ற வாசகங்கள் அச்சிட்ட மேலாடை அணிவது அங்கு பிரபலமாகி வருகிறது. அதுதான் சிறுமியின் பெயர். தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஸ்வாட் வேலி பகுதியில் தந்தை நடத்தும் பள்ளியில் அவள் படிக்கிறாள். பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு போகக்கூடாது, ஆண்களுடன் பேசக்கூடாது என்பது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளில் முக்கியமானவை. அதற்கு எதிராக குரல் கொடுக்க மகளுக்கு ஊக்கமளித்தார் தந்தை ஜியாவுதின். டாக்டராக ஆசைப்பட்ட மகளின் மனதை மாற்றி, அரசியலில் ஈடுபட்டால் நாட்டுக்கே நல்லது செய்யக்கூடிய அதிகாரத்தை பெறலாம் என  சொல்லிக் கொடுத்தார். கொந்தளித்த தலிபான்கள்  பள்ளியின் பேருந்தை மறித்து 'யார்  இங்கே மலாலா?' என்று துப்பாக்கி முனையில் கேட்டபோது மற்ற சிறுமிகள் அவளை அடையாளம் காட்ட மறுத்துவிட்டனர். சில அடையாளங்களை வைத்து மலாலாவை கண்டுபிடித்த தீவிரவாதிகள் அவளையும் காட்டிக்கொடுக்க மறுத்த மாணவிகளையும் சுட்டுவிட்டு இறங்கிச் சென்றனர். கவலைக்கிடமான நிலையில் மலாலா இப்போது லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். இந்தியாவுக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் படைகளுக்கு எதிராகவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தீவிரவாதிகளை உருவாக்கியது பாகிஸ்தான் அரசு. பெரும்பாலான மக்களும் அதை ஆதரித்தனர். இன்று அதே தீவிரவாதம் அந்த நாட்டை நிர்மூலமாக்க முயன்று வருகிறது. அதற்கு எதிராக மக்களையும் அரசையும் ஒருங்கிணைக்கும் மந்திர சொல்லாக மலாலாவின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. ஆனாலும் மலாலா ஆதரவுக்கு நிகராக தலிபான்களுக்கு எதிரான கோப அலையை பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக தீவிரவாதத்துக்கு எதிராக பொங்கியெழும் சந்தர்ப்பம் மலாலா மூலமாகவும் பாகிஸ்தானுக்கு கிடைக்காது போலிருக்கிறது.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment