Tuesday, 6 November 2012

ஆர்வமில்லாத அமெரிக்க அதிபர் தேர்தல்

வில்லன் இல்லை என்றால் கதாநாயகனுக்கு வேலை இல்லை. செல்வாக்கு மங்கி மக்கள் மறந்து விடுவார்கள். சோவியத் யூனியன் உடைந்தபின் அமெரிக்காவின் நிலைமை அப்படி ஆகிவிட்டது. அதனால்தான் அங்கே இன்று நடக்கும் அதிபர் தேர்தல் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. யார் அதிபரானாலும் பெரிய தாக்கம் ஏற்படாது என்று உலகம் புரிந்து கொண்டது. முடிவு எப்படி ஆனாலும் அமெரிக்க தேர்தல் பல சுவாரசியங்களை கொண்டது என்பதை மறுக்க முடியாது.  'நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை அடுத்துவரும் செவ்வாயன்று அதிபர் தேர்தல் நடக்க வேண்டும்' என்பது 1845ம் ஆண்டு முடிவான விஷயம். பலர் நினைப்பதுபோல் அதிபரை நேரடியாக மக்கள் தேர்ந்து எடுப்பதில்லை. மக்கள் தொகையை பொருத்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் இத்தனை ஓட்டு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எலக்டொரல் ஓட்டு என்பார்கள். 50 மாநிலங்கள் + தலைநகர் வாஷிங்டன்.  மொத்த ஓட்டு 538 இவற்றுக்கு பங்கிட்டு தரப்பட்டுள்ளது. 270 ஓட்டு பெற்றால் வெற்றி. ஒரு மாநிலத்தில் மக்களின் ஓட்டுகளை அதிகமாக பெறும் கட்சி அம்மாநிலத்தின் மொத்த எலக்டொரல் ஓட்டுகளையும் அள்ளிக் கொள்ளலாம். சிக்கல் என்னவென்றால் சிறிய மாநிலத்துக்கு நாலைந்து ஓட்டுதான் இருக்கும். பெரிய மாநிலத்துக்கு அதிகம். உதாரணமாக கலிபோர்னியாவுக்கு 55. இதனால், மக்களிடம் அதிக ஓட்டு பெற்ற கட்சி அல்லது வேட்பாளருக்கு எலக்டொரல் ஓட்டு குறைவாக கிடைத்து அதனால் அதிபர் பதவியை கோட்டைவிட வாய்ப்பு இருக்கிறது. 2000ம் ஆண்டு தேர்தலில் அல் கோர் 50 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்றும்கூட, 271 எலக்டொரல் ஓட்டுகளை பெற முடிந்ததால் புஷ் அதிபரானார். ஒருவேளை ஆளுக்கு 269 கிடைத்து  'டை' ஆனால், நாடாளுமன்றம் அதிபரை தேர்வு செய்யும். அங்கு மக்களவையில் குடியரசு கட்சிக்கு மெஜாரிடி. அது மிட் ரோம்னியை அதிபராக தேர்ந்து எடுக்கும். மேலவையில் மெஜாரிடி உள்ள ஜனநாயக கட்சி, ஜோ பிடனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கும். 
அப்படியொரு விசித்திரம் இம்முறை நடக்கலாம் என்கிறார்கள். அதை தெரிந்து கொள்ள ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். 40 மாநிலங்களில் எந்த கட்சி ஜெயிக்கும் என்பது தெளிவாக தெரிவதால் மீதி 10 மாநிலங்களில்தான் பிரசாரமே நடக்கிறது என்பதும் வேடிக்கையான உண்மை.





நன்றி: Dinakaran

No comments:

Post a Comment