நிதின் கட்கரியின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிகிறது. இன்னொரு முறை அவரே தலைவராக நீடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அடுத்த வாரம் வரையில் அவர் தாக்கு பிடித்தாலே பெரிய விஷயம் என்று இப்போது தோன்றுகிறது. 'ஊழலில் ஊறிப்போன கட்சி காங்கிரஸ்; அதற்கு சரியான மாற்று எங்கள் கட்சிதான்' என்று பாரதிய ஜனதா தலைவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கட்கரி பலரும் நினைத்தது போல சாதாரண ஆள் கிடையாது; பல கம்பெனிகளுக்கு சொந்தக்காரர்; சட்டத்துக்கு புறம்பான வழியில் சொத்து சேர்த்தவர் என்று பூதம் கிளம்பியதும் பா.ஜ தலைவர்களின் உதடுகள் ஒட்டிக் கொண்டன. ஊழலை ஒரு ஆயுதமாக்கி காங்கிரசை குத்திக் கொண்டிருந்தபோது அது திடீரென திரும்பி குத்தினால் எங்கிருந்து பேச்சு வரும்? கட்கரிக்கு மட்டும் வந்தது. 'சுவாமி விவேகானந்தருக்கும் தீவிரவாதி தாவுத் இப்ராகிமுக்கும் மூளை ஒரே மாதிரிதான். ஆனால் விவேகானந்தர் நல்லதுக்கு பயன்படுத்தியதை தாவூத் கெட்டதுக்கு பயன்படுத்தினான்' என்று சொல்லி நாக்கில் என்ன இருக்கிறது என்பதை காட்டிவிட்டார். கட்கரியின் வளர்ப்புத் தந்தையான ஆர்.எஸ்.எஸ் அமைப்பே ஆடித்தான் போனது. 'கசாபுக்கும் கட்கரிக்கும் ஒரே மாதிரியான மூளைதான் என்று பா.ஜ ஒப்புக் கொள்கிறதா' என காங்கிரஸ் கொக்கி போட்டதற்கு மவுனமே பதிலானது. இதற்கு மேலும் கட்கரி நீடித்தால் பா.ஜ கதி அவ்வளவுதான் என்று ராம் ஜெத்மலானி கொந்தளிக்க, அவரது மகன் மகேஷ் பா.ஜ தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை பகிரங்கமாக தூக்கி எறிகிறார். இங்குதான் இடிக்கிறது. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் மத்தியில் பா.ஜ ஆட்சியை பிடிக்கும் என்று நம்பும் கோஷ்டியை சேர்ந்தவர் ஜெத்மலானி. கலவரத்தின் களங்கம் நீடிக்கும் வரையில் என்னதான் உயர உயர பறந்தாலும் மோடி வெறும் குஜராத் குருவிதான் என்று கருதும் அத்வானி, சுஷ்மா போன்றவர்கள் அவரது டெல்லி வருகையை தடுக்க கட்கரிக்கு அரணாக நிற்கின்றனர். ஜஸ்வந்த், யஷ்வந்த், சத்ருக்கன் என்று கட்கரிக்கு எதிரான படையின் பலம் பெருகுவதை பார்க்கும்போது பாரதிய ஜனதாவுக்கு சீக்கிரமே புதிய தலைவர் நியமிக்கப்படலாம். அதிகம் சொத்து குவிக்காதவர் தலைவரானால் இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்கும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment