மருந்து விலை நிர்ணயக் கொள்கையைப் புதிதாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 2003-ம் ஆண்டிலிருந்து எழுப்பப்பட்டு வந்தாலும், தற்போதுதான் இது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் நல்லன யாவும் நீதிமன்றத்தின் நெருக்கடியால்தான் நடந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசின் மருந்து விலைக் கொள்கையும் இதில் அடங்கும். மருந்துகள் தற்போதைய சந்தை நிலவரத்தின்படி மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் புதிய மருந்து விலைக் கொள்கையை நவம்பர் 27-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு இணங்க, இப்போது இந்த கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 74 மருந்து மாத்திரைகள் மட்டுமே உள்ளன. தற்போதைய புதிய கொள்கைப்படி, 348 மருந்து, மாத்திரைகள் அதில் இடம்பெறுகின்றன. அதனால், பெருவாரியான மருந்துகளின் விலை குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. இந்தப் புதிய கொள்கையின் அம்சங்களை மத்திய அரசு முழுமையாக வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் ஒரேயொரு அம்சத்தை மட்டும் - அதாவது மருந்து விலை நிர்ணயம் தொடர்பான விவரத்தை மட்டும் - தெரிவித்துள்ளது. வெவ்வேறு பெயர்களில் மருந்தின் பல்வேறு நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் ஒரே மருந்தின் பல்வேறு விலைகளைக் கூட்டி, வகுத்து சராசரி விலை தீர்மானிக்கப்படும் என்பதுதான் அது.
ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்திச் செலவு மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையைத் தீர்மானிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருந்தை 50 நிறுவனங்கள் தயாரிக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். மருந்தின் விலை குறைந்தபட்சமாக ரூ. 20-லிருந்து ரூ. 200 வரை விற்கப்படுகிறது என்றால், இந்த 50 நிறுவனங்களில் 1 விழுக்காட்டுக்கு அதிகமான சந்தை பெற்றுள்ள நிறுவனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அத்தனை நிறுவனங்களின் விலையையும் கூட்டி, நிறுவனங்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் விலைதான் அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்படும்.
இதனால், மக்களுக்கு எந்த வகையில் லாபம் என்று பார்த்தால், பெரிய நன்மை விளையாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய விலை நிர்ணயத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மருந்துச் சந்தையில் கோலோச்சும் உள்நாட்டின் பெரிய நிறுவனங்கள் மட்டுமே சிறிது பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால், அவர்கள் தற்போது விற்கும் விலையைவிடக் குறைவாக விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இவர்கள் "கூட்டணி' அமைத்துக்கொண்டு, சிறு நிறுவனங்களை வற்புறுத்தி, தொல்லை கொடுத்து, கூடுதல் விலைக்கு விற்கும்படி செய்தால், மருந்து விலை இந்த கம்பெனிகள் விரும்பும் சராசரி விலையிலேயே நிற்கும். இதைச் செய்வது அவர்களுக்கு எளிது.
ரூ. 200க்கு விற்கப்படும் மருந்தின் விலை, இந்த கூட்டிக் கழிக்கும் நடைமுறையால் ரூ. 100 ஆகக் குறையும். ஆனால், ரூ. 20க்கு கிடைத்து வந்த மாத்திரையின் விலை உயரும்போது, இந்த சராசரி விலையும் உயரும்.
ஒரு நிறுவனத்தால் ஒரு மாத்திரையை ரூ. 20க்குத் தயாரிக்க முடியும் என்கின்றபோது, வெறும் தரம், பிராண்டு என்ற பெயரில் விலையை உயர்த்துவதை அரசு எப்படி அனுமதிக்கலாம்? உண்மையாகவே, மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால், ஒரு மருந்துக்கான மூலப்பொருள்கள் யாவை, அதற்கான விலை என்ன என்பதைத் தீர்மானித்து, அதைத் தரமான முறையில் தயாரிக்க ஆகும் செலவையும் அரசே தீர்மானித்து, அதற்கு மேலாக எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை விழுக்காடு லாபம் வைத்து விற்கலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். லாபத்தின் அளவை நிறுவனத்தின் விற்றுமுதல், தொழிற்கூடம், தொழிலாளர் எண்ணிக்கை, செலுத்தும் வரியை வைத்து வரிசைப்படுத்தவும் செய்யலாம். ஆனால், எதையும் செய்யாமல், சந்தையில் உள்ள ஒரே வகை மருந்துகளின் விலையை கூட்டி, வகுத்து சராசரி விலையைத் தீர்மானிக்க, பல்வேறு மருத்துவப் பட்டம் பெற்ற பலரைக் கொண்டிருக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தேவையா?
புதிய மருந்து விலைக் கொள்கை குறித்து அரசு வெளிப்படையாகத் தெரிவித்துள்ள இந்த ஒரு அம்சத்துக்கே மருந்துக் கம்பெனிகள் அனைத்தும் முதலைக் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டன. இதனால் ஆண்டுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4,200 கோடி வருவாய் குறையும் என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். உலக மருத்துவச் சந்தையில் அதிக மருந்து விற்பனையாகும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தினமும் ஏதாவதொரு மாத்திரையை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார். டாக்டர்களும் சாதாரண காய்ச்சலுக்குப் போனாலும், மளிகைச் சாமான் பட்டியல் போல மருந்துகளை எழுதித் தருகிறார்கள். இந்நிலையில், ஒரு அரசு எத்தனை பொறுப்புடன் இந்த விலை நிர்ணயத்தில் ஈடுபட வேண்டும் என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.
உச்ச நீதிமன்றத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மருந்து விலைக் கொள்கை, மக்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய நாடாளுமன்றம் அமளியில் முடங்கிக் கிடக்கிறது. அந்த "முடக்குவாதத்துக்கு' மருந்து கண்டுபிடிக்கப்படாத வரையில் இது போன்ற கண்துடைப்பு நிவாரணங்கள் வழங்குவதைத் தடுப்பது இருக்கட்டும், கேள்வி கேட்கக் கூட வழியில்லை.
No comments:
Post a Comment