Tuesday, 13 November 2012

நாயக்கன் கொட்டாய் - நடந்தது என்ன?

காலாகாலமாக இருந்துவரும் ஜாதியக் கட்டமைப்பு என்பது சட்டென மாற்றிவிடக் கூடியதல்ல. சமுதாய அமைப்புகளின் மாற்றங்கள் எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. மாற்றங்கள் ஏற்படும்போது, அதற்கு எதிர்ப்பும், எதிர்வினைகளும் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அதுவே உயிரிழப்பு, வன்முறை, கலவரம் என்று மாறும்போது அரசு தலையிட்டு சட்ட ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்.

÷தருமபுரி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற ஒரு காதல் திருமணம் இப்போது ஜாதிக் கலவரமாக மாறும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது. பட்டியல் ஜாதியினர் குடியிருக்கும் மூன்று காலனிகளைச் சேர்ந்த 268 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பட்டியல் ஜாதியினருக்கு எதிராகப் பெண் சார்ந்த ஜாதியினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் காவல் துறையாலோ, தீயணைப்புத் துறையாலோ பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு பிரச்னை கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

÷நத்தம் காலனியைச் சேர்ந்த பட்டியல் ஜாதியினரான இளவரசன் என்கிற இளைஞர், திவ்யா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், ஒரு மாதம் முன்பு நடந்த சம்பவம் இப்போது கலவரமாக வெடிப்பானேன்?

÷காதல் ஜோடி காவல் துறையிடம் தஞ்சம் அடைந்து பாதுகாப்புக் கோரியது. காவல் துறையும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. அதுவரை சரி. ஆனால், இது தொடர்பாக சமூக நெருக்கடி காரணமாகப் பெண்ணின் பெற்றோர் தங்களது பெண்ணை இளவரசன் என்கிற பட்டியல் ஜாதி இளைஞன் கடத்திக்கொண்டு போய்விட்டதாகப் புகார் கொடுக்கும்போது காவல் துறை என்ன செய்திருக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி, அந்தக் காதல் ஜோடியைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, நடந்தது கடத்தல் அல்ல, காதல் திருமணம் என்பதைப் பெற்றோர் முன்னிலையில் தெளிவுபடுத்தி இருந்தால், பிரச்னை அப்போதே முடிந்திருக்கும்.

காதல் ஜோடிக்குப் பாதுகாப்பளித்த காவல் துறை, இந்தப் பிரச்னை இரு குடும்பங்களில் மட்டுமன்றி, சுற்றியுள்ள கிராமங்களிலும் சமூகப் பிரச்னையாக மாறிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பெண்ணின் தாய் கொடுத்தப் புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இந்த விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத சில அமைப்புகள் நுழைந்து கட்டப் பஞ்சாயத்து நடத்த அனுமதித்திருக்கிறது. அந்தக் கட்டப் பஞ்சாயத்தில் ஏற்பட்ட அவமானம்தான் அந்தப் பெண்ணின் தந்தையைத் தற்கொலை முடிவுக்கு உந்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெற்றோர் அவமானப்படுத்தப்பட்டனர் என்பதுதான் பட்டியல் ஜாதியினருக்கு எதிராக பெண்ணின் ஜாதியினரை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. எல்லோரும் ஒன்று திரண்டு மூன்று காலனிகளையும் தீயிட்டுக் கொளுத்தும் அளவுக்குப் பிரச்னையை வளர விட்டதற்குக் காவல் துறைதான் பொறுப்பேற்க வேண்டும்.

வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உடனடி நிவாரணமாக வழங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கை இந்தப் பிரச்னையின் தீவிரத்தைச் சற்று தணிக்க உதவுமே தவிர, நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பட்டியல் ஜாதி மற்றும் பட்டியல் ஜாதி அல்லாத மக்களிடையே ஏற்பட்டுள்ள பகை உணர்வைத் தணிக்க உதவாது. நாய்க்கன்கொட்டாய் கிராமத்தில் நடந்துள்ள இந்தத் துன்பநிகழ்வு குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே இதில் எங்கே தவறு என்பதைக் கண்டறிய முடியும்.

÷நீதிவிசாரணையின் வரம்புகளாக, காவல்துறை அதிகாரிகளுக்குள் இருக்கும் ஜாதி உணர்வுதான் சிறு பிரச்னையை, சில ஊர்களின் பிரச்னையாக மாறச் செய்ததா; கட்டப்பஞ்சாயத்து நடந்து, அதில் பெண்ணின் தந்தை அவமானப்பட்டதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டாரா; அப்படியானால் அவரை அவமானப்படுத்தி, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் யார்; இந்த ஒரு காதல் ஜோடிக்காக மட்டும்தான் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தினார்களா அல்லது இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்நிகழ்வாக இருந்ததுதான் இவர்களது இப்போதைய ஆத்திரத்துக்குக் காரணமா; சில ஆயிரம்பேர் ஒரு தாக்குதலை நடத்தக் கிளம்பும்போது, அது குறித்து எந்தத் தகவலும் காவல் துறைக்குக் கிடைக்கவில்லையா; கிடைத்திருப்பின், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, விடை கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே உண்மை வெளிவரும்.

இது ஏதோ நாய்க்கன்கொட்டாய் கிராமத்தில் மட்டும் காணப்படும் ஜாதியப் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். நீறு பூத்த நெருப்பாய் தமிழக கிராமங்கள் அனைத்திலுமே இந்த நிலைமைதான் காணப்படுகிறது.

÷காலாகாலமாக இருந்துவரும் சமுதாயக் கட்டமைப்பால் பாதிக்கப்பட்ட பட்டியல் ஜாதியினர், சுய மரியாதை உணர்வு பெற்றிருக்கிறார்கள். சில பட்டியல் ஜாதி இளைஞர்கள் மத்தியில், தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தித் தங்கள் இனத்தவர்களை எல்லா வகையிலும் சமுதாய நீரோட்டத்தில் சமமானவர்களாக நிரூபிக்கும் ஆர்வத்தைவிட, ஆண்டாண்டு காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பழி வாங்க வேண்டும் என்பதில்தான் முனைப்புக் காட்டுகிறார்கள். அது விரோதத்தை வளர்த்து வன்முறைக்கு வழிகோலுமே தவிர, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

பட்டியல் ஜாதியரல்லாத ஏனையோரும் சரி, அடித்தட்டு மக்களின் உணர்வுகளையும், எழுச்சியையும் புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறார்கள். பட்டியல் ஜாதியினர் திட்டமிட்டு பிற ஜாதிப் பெண்களைக் காதலிக்கிறார்கள், சீண்டி வேடிக்கை பார்க்கிறார்கள், வன்கொடுமைச் சட்டம் இருக்கும் தைரியத்தில் செயல்படுகிறார்கள் என்பது ஏனைய ஜாதியினரின் பரவலான குற்றச்சாட்டு.






நன்றி: Dinamani

No comments:

Post a Comment