Thursday, 8 November 2012

அதிபர் ஒபாமாவுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள்

முந்தைய எந்த தேர்தலை விடவும் இந்த தடவை போட்டி கடுமையாக இருந்தாலும் அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற வேண்டிய நிலை வராது என்று கருத்துக் கணிப்புகள் கூறியது பொய்க்கவில்லை. தோல்விக்குதான் காரணம் தேட வேண்டும். ஒபாமா வெற்றிக்கு குறிப்பிட்டு எந்த காரணமும் சொல்ல முடியாது. 2ம் உலக போருக்கு பிறகு அமெரிக்கர்கள் அதிபருக்கு 2வது வாய்ப்பு தர  தயங்கியதில்லை. உலகின் மிக அதிகாரம் மிகுந்த பதவியாக சொல்லப்பட்டாலும், முதல் முறையாக அந்த நாற்காலியில் அமர்பவர்கள் மிரண்டுதான் போகிறார்கள். 'தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்ற முடியாது போலிருக்கிறதே' என்று கவலைப்பட்டு தூக்கம் தொலைக்கின்றனர்.ஒரு ஜனநாயக நாட்டை ஆள்வது எவ்வளவு கடினமான விஷயம் என்பதும், சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிர்வாகத் தூணில் நகராமல் ஒட்டிக் கொண்டிருக்கவே அசாத்திய மனதிடம் தேவை என்பதும் அந்த நாற்காலியில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் உறைக்கிறது. உற்று கவனித்தால் எந்தவொரு முதன்மையான  பதவிக்கும் இது பொருந்தும். பிரச்னைகள் என்ன, அவற்றை தீர்ப்பது எப்படி என்பதை தீர்மானிப்பதற்குள் பதவிக் காலத்தில் பாதி கழிந்து விடும். அடுத்த தேர்தலில் பதவியை தக்கவைக்க யார் யாருடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வதில் மீதியுள்ள இரண்டு ஆண்டுகள் ஓடிவிடும். மூன்றாம் முறை போட்டியிட முடியாது என்பதால் இரண்டாவது பதவிக் காலத்தை தேர்தல் பயமின்றி அதிபர் முழுமனதுடன் எதிர்கொள்ளலாம். அனுபவ ரீதியில் மக்களும் இதை உணர்ந்துள்ளனர். சுமார் 70 ஆண்டுகளில் 3 பேருக்குதான் அவர்கள்  இந்த வாய்ப்பை வழங்கவில்லை. கடுமையான மின்வெட்டுக்காக ஃபோர்டு (1976), இரான் பணயக்கைதிகள் பிரச்னைக்காக கார்ட்டர் (1980), பொருளாதார சீர்குலைவுக்காக சீனியர் ஜார்ஜ் புஷ் (1992) ஆகியோரை தண்டித்தனர். 

முடிவு அறிவிக்கப்பட்ட உடனே ஒபாமாவும் ராம்னியும் பரஸ்பரம் பாராட்டும் நன்றியும் பகிர்ந்து கொண்டது அருமை. நாட்டின் முன்னேற்றத்துக்கும்  மக்களின் நல்வாழ்வுக்கும் பயன்படாத அரசியல் வெற்றிகள் அர்த்தமற்றவை என்ற ஒபாமாவின் வெற்றியுரை அதனிலும் நெகிழ்வானது.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment