சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா அரசின் கவுரவ விருது வழங்கப்படும் என்ற பிரதமர் ஜூலியாவின் அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஜூலியா டெல்லியில் எல்லா நாட்டு தலைவர்களும் சம்பிரதாயமாக சென்று வரும் இடங்களை பார்த்துவிட்டு, ஏழைக் குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது சச்சினுக்கு விருது கொடுக்கபோவதாக அறிவித்தார். கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ள சச்சின், ஆஸ்திரேலியாவில் இளைஞர்கள் பெருமளவில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட காரணமாக இருக்கிறார் என பாராட்டினார். 'ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா' என்பது விருதின் பெயர். ஆஸ்திரேலியாவுக்கு அல்லது ஒட்டுமொத்த மனித இனத்துக்கு அரும்பணி ஆற்றியவர்களுக்கு வழங்குவதற்கானது. 'சச்சின் அப்படியென்ன ஆஸ்திரேலியாவுக்காக செய்துவிட்டார், அந்த விருதை வழங்கும் அளவுக்கு?' என்று பல ஆஸ்திரேலியர்கள் ஆத்திரத்துடன் கேட்கிறார்கள். 'எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். சச்சினையும் பிடிக்கும். அதற்காக ஆஸ்திரேலியர்கள் மட்டுமே பெற தகுதியான விருதை சச்சினுக்கு கொடுத்தால் எப்படி?' என அங்குள்ள எம்.பி ஒருத்தரும் கடுப்படிக்கிறார். அதை கேட்டு நமது இணையமைச்சர் ராஜிவ் சுக்லா கொதிக்கிறார். இவர் பிசிசிஐ துணைத்தலைவராகவும் இருப்பவர். ஆஸி அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், 'சச்சின் நம்மூர் ஆளாக இருந்தால் அவரை கவுரவ பிரதமராக்கி இருந்தாலும் பாராட்டி இருப்பேன்' என்கிறார். 1975ல் நிறுவப்பட்ட ஆஸ்திரேலிய அரசின் கவுரவ விருதுகள் இதுவரை 27,400 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 333 பேர் வெளிநாட்டு பிரஜைகள். 2009ல் பிரையன் லாராவுக்கு இதே விருது வழங்கப்பட்டது. 1985ல் கிளைவ் லாய்டு பெற்றார். சோபர்சுக்கு 2003ல் அளித்தனர். எல்லோரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். அப்போதெல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்? இந்தியாவிலும் பலர் இந்த விருதை எதிர்ப்பது ஆச்சரியம். பொதுவாக இது சச்சினுக்கு போதாத காலம். சாதனைகள் மூலம் புகழின் சிகரத்தை தொட்டவர்கள் தாமதிக்காமல் ஓய்வை அறிவித்தால் பிரச்னைகள் எழுவதில்லை. இல்லையேல் இறங்குமுகமாகி பல சோதனைகளை சந்திக்க நேர்கிறது. உச்சிக்கு ஏறியபின் இறங்கித்தானே தீரவேண்டும்?
No comments:
Post a Comment