Saturday, 17 November 2012

இந்தியாவைச் சுரண்ட இப்படியும் ஒரு வழியா?

ஓரு புறம் ஊழல், முறைகேடுகள் என்று நடந்து கொண்டிருந்தாலும், மத்திய அமைச்சரவையில் சில அமைச்சர்கள் நாட்டு நலனையும், அடித்தட்டு மக்களின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்படுவது சற்று ஆறுதலாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடாவடிக் கோரிக்கையை நிராகரித்ததால் இலாகா மாற்றம் செய்யப்பட்ட ஜெய்பால் ரெட்டியைப் போலவே, சில தனியார் சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களின் முறையற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற விடாமல் தடுத்திருக்கிறார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களின் தேவைதான் என்ன என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவர்களது தலையீடு பல ஏழை விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டுமளவுக்கு கிராமப்புற நிதி நிலைமையைப் பாதித்திருக்கிறது. அது போதாதென்று, சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களைப் பாதுகாக்க மத்திய அரசு ஒரு மசோதாவை நிறைவேற்ற இருந்ததை நல்லவேளை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலையிட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்.

1992-இல் தேசிய ஊரக மற்றும் விவசாய வளர்ச்சி வங்கி (நபார்டு) கிராமப்புற விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும், கிராமப்புற மகளிரின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் முன்வைத்த யோசனைதான் சுயநிதிக் குழு அமைப்புகள். வங்கிகள் மூலம் இந்த சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர்கள் சிறு தொழில்கள், வியாபாரங்களில் ஈடுபட்டு ஒட்டுமொத்த கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பார்கள் என்பதுதான் அந்தத் திட்டத்தின் உள்நோக்கம்.

எந்தவிதப் பிணையுமில்லாமல் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்குவதில் முதலில் வங்கிகள் தயக்கம் காட்டியதென்னவோ உண்மை. ஆனால், ஏறத்தாழ 100% கடன் திருப்பி அடைக்கப்படுவது கண்டு வங்கிகளும் ஆர்வமாக சுயஉதவிக் குழுக்களுக்கு உதவ முன்வந்தன. 1992-இல் வெறும் 255 அமைப்புகள் மட்டுமே இயங்கி வந்தது போய், 2010-க்குள் ஏறத்தாழ 69.53 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் இந்தியா முழுவதும் செயல்படத் தொடங்கின. ஏறத்தாழ 28,038.28 கோடி ரூபாய் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பற்றுவரவு செய்யப்பட்டது.

சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு இரட்டிப்பு லாபம். வங்கிகள் எவ்வளவு கடன் அளிக்கின்றனவோ அதில் சரிபாதித் தொகை குறைந்த வட்டியில் நபார்டால் தரப்பட்டுவிடுகிறது. மேலும், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளை அந்த வங்கிகளில் வைத்திருக்கிறார்கள். கடனாகத் தரப்பட்ட பணம் வங்கிகளில் தொடர்ந்து புழங்குகிறது. அதனால் மொத்தக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வங்கிகளின் பங்களிப்பு.

அப்படி இருக்கும்போது, இடைத்தரகர்களாக எதற்காக சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்கள் என்கிற கேள்விக்குப் பதிலில்லை. காளான்களாக முளைத்துவிட்ட இந்த நிறுவனங்கள் வங்கிகளிலிருந்து சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் கொடுப்பதற்குக் குறைந்த வட்டியில் கடன் பெற்று 24% முதல் 60% வட்டிக்கு அவர்களுக்குக் கடன் கொடுப்பது மட்டுமல்ல, மிரட்டி உதைத்துக் கடனைத் திருப்பிப் பெறவும் தொடங்கின. ஆந்திரத்திலுள்ள ஒரு சிறுநிதி கடனுதவி நிறுவனம் 2011-12 நிதியாண்டில் மட்டும் 112 கோடி ரூபாய் லாபம் காட்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இடைத்தரகு நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஏராளம்.

தொடர்ந்து நடந்த விவசாயிகள் தற்கொலைகள் ஆந்திர அரசை இந்த சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களை முறைப்படுத்தும் சட்டமொன்றை இயற்ற வைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்த நிறுவனங்களின் லாபம் குறைந்தது. மாநில அரசின் சட்டத்தை முடக்கி, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அவர்கள் கொண்டுவர முயன்ற மசோதாவைத்தான் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

எங்களால் எல்லா கிராமங்களையும் சென்றடைய முடியாததாலும், சுயஉதவிக் குழுக்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் ஈடுகொடுக்க முடியாததாலும் சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களின் மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம் என்று அரசோ, வங்கிகளோ சொல்வதில் உண்மையில்லை. இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை சென்றடையும் அமைப்பு ரீதியிலான இணைப்பு அரசுக்கும், வங்கிகளுக்கும் இல்லாமல் இல்லை.

அரசு மற்றும் பட்டியல் வங்கிகளுக்கு இந்தியாவில் 83,000-க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இதில் 15,400 கிராம வங்கிகளின் கிளைகளும் அடக்கம். லட்சத்துக்கும் மேற்பட்ட அடிப்படை விவசாயக் கடன் குழுமங்களும், 12,000 கூட்டுறவு வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. சுயஉதவிக் குழுக்களை தபால் நிலையங்களுடன் இணைத்து சேமிப்புக் கணக்குகளை இயக்க முடியும். இந்தியாவிலுள்ள 1.55 லட்சம் தபால் நிலையங்களில் 1.39 லட்சம் தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில்தான் இயங்குகின்றன.

கிராம வங்கிகளை நிறுவியதே கிராமப்புற ஏழைகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதற்காகத்தான். அப்படி இருக்கும்போது, எதற்காக இடைத்தரகர்களாக சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்கள்? "நபார்டு' தரும் புள்ளிவிவரப்படி பார்த்தால், பட்டியல் மற்றும் அரசு வங்கிகள், 1,407 சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கும் குறைந்த வட்டிக் கடன் மார்ச் 2010 வரை 10,095 கோடி ரூபாய்! வேடிக்கை என்னவென்றால் கிராம வங்கிகள்கூட 103 தனியார் கடனுதவி நிறுவனங்களுக்கு 52.22 கோடி ரூபாய் வழங்கி இருக்கின்றன.

இந்தத் தனியார் சிறுநிதிக் கடனுதவி நிறுவனங்கள், மக்கள் பணத்தில் இயங்கும் வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டிக்குப் பணம் பெற்று அதிக வட்டிக்கு ஏழை விவசாயிகளுக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும் கொடுத்துப் பிழைக்கின்றன. இந்த நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டிய அரசு, அவர்களைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் சட்டம் இயற்ற முற்படுகிறது. அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மட்டும் தலையிடாமல் இருந்தால் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகி இருக்கும்.

இந்தியாவைச் சுரண்ட இப்படியும் ஒரு வழியா?





நன்றி: Dinamani

No comments:

Post a Comment