Saturday, 3 November 2012

உணவு பழக்கம் மாறினால் நல்லது


உணவு பழக்கம்தான் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நகரங்களில் வசிப்பவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவார்கள். உடல்பயிற்சியும் செய்வதில்லை. உடல் உழைப்பும் இருப்பதில்லை. இதனால் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்போது இந்த நோய்கள் கிராமங்களில் இருப்பவர்களுக்கும் அதிகம் வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் 10,500 பேரிடையே மேற்கொண்ட ஆய்வில் 25 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் குறிப்பாக பெண்கள் மத்தியில் உடல் பருமன் நோய் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. பருமன் என்பது தோற்றத்தில் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திலும் பலவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடியது. நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலை செய்வது போன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் அனைத்தும் குறைந்துவிடும். இதனால் உடல் மேலும் குண்டாகும். அதோடு சர்க்கரை நோய், இதய நோயையும் கொண்டு வரும். இத்தனைக்கும் காரணமாக இருப்பது மாறிவரும் உணவுமுறை.
 கிராமத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள். சாதாரணமாக நோய் நொடி வராது என்பார்கள். காரணம், ஆரோக்கியமான, சத்தான சாப்பாடு. கம்பு, கேழ்வரகு போன்ற சத்தான, உணவுகளை சாப்பிட்டு வந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. நகரத்தில் கிடைக்கும் அத்தனையும் கிராமங்களில் கிடைக்கிறது.  போனில் ஆர்டர் செய்தால் பீட்சா வருகிறது. அதோடு சிக்கன், மட்டன் என கொழுப்பு அதிகமான உணவு, அதிகம் உள்ளேபோகிறது. அதேநேரம் உடல் உழைப்பு குறைந்துவிட்டது.  இதுபோதாதா? உடம்பு குண்டாகி விடுகிறது.   மேலை நாடுகளில் 60 வயதில் வரும் நோய்கள் எல்லாம் இங்கு, 20 வயதிலேயே வந்துவிடுகிறது. இதோடு சிகரெட், குடிப்பழக்கம் சேரும்போது ரிஸ்க் இன்னும் அதிகமாகிவிடுகிறது. நகரங்களை பார்த்து காப்பி அடித்ததற்கு கிடைத்த பரிசு இது. நோய் வந்தபிறகு வாயைக்கட்டுவதைவிட வரும் முன்பே சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தால் சம்பாதித்ததை எல்லாம் ஆஸ்பத்திரிக்கு செலவழிக்க வேண்டியிருக்காது. இதை கிராமத்தினரும் புரிந்துகெண்டால் நல்லது.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment