Tuesday, 13 November 2012

சீனாவின் புதிய அதிபர் தேர்வு - மூங்கில் திரை மாற்றங்கள்!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18-வது தேசிய மாநாடு பெய்ஜிங்கில் கூடியிருக்கிறது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது தலைமை மாற்றம் நிகழ இருக்கிறது. ஹூ ஜிண்டாவோவைத் தொடர்ந்து ஜீ ஜின்பிங்க், இப்போது கட்சித் தலைவராகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சீன அதிபராகவும் பதவி ஏற்க இருக்கிறார்.

சீன சரித்திரத்தில் ஒரு முக்கியமான கால கட்டத்தில் அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜீ ஜின்பிங்கிற்கு முதலில் வாழ்த்துகள். மாறிவிட்ட சூழலில் ஒரு புறம் கம்யூனிஸத்தையும், மற்றொருபுறம் தவிர்க்க முடியாத சந்தைப் பொருளாதாரத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு அவர் எப்படி சீனாவை வழி நடத்தப் போகிறார் என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. காளையையும் குதிரையையும் ஒரே வண்டியில் கட்டி ஓட்டும் அசாதாரண சாமர்த்தியம் இல்லாமல் போனால், சீனா இன்னொரு புரட்சிக்குத் தயாராகி விடும் என்கிற எதார்த்தம்தான் அந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம்.

எல்லாமே அரசுடைமையாக இருந்த கம்யூனிஸப் பொருளாதாரத்தை, மேலைநாட்டு சந்தைப் பொருளாதார சித்தாந்தத்துடன் ஒருங்கிணைக்கும் சீர்திருத்த முயற்சியை 1992இல் மேற்கொண்டவர் டெங் ஜியாபிங்க். 2002இல் ஹூ ஜிண்டாவோ அதிபரானார். உலகின் ஆறாவது பொருளாதார சக்தியாக இருந்த சீனாவை, இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாற்றிய பெருமை ஹூ ஜிண்டாவோவுக்கு உண்டு.

2000த்தில் வெறும் 15% மக்களுக்கு மட்டுமே இருந்த காப்பீடு இப்போது ஏறத்தாழ 95% மக்களுக்கும் தரப்பட்டிருக்கிறது. அபரிமிதமான வளர்ச்சியின் விளைவாக, சீன மக்களில் கணிசமானவர்கள் பணக்காரர்களாக மாற முடிந்தது. ஆனால் அதுவே ஆட்சியாளர்களுக்குப் பிரச்னையாக முடிந்திருக்கிறது.

சமச்சீரான வளர்ச்சி மக்கள் மத்தியிலும், பிராந்தியங்களுக்கு இடையிலும் இல்லாமல் போய்விட்டதால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. கிராமப்புறங்களில் வறுமையும், நகர்ப்புறங்களில் திடீர் வளர்ச்சியும் ஏற்பட்டிருப்பது அடித்தட்டு மக்கள் மத்தியில் ஆட்சியைப் பற்றிய அவநம்பிக்கையை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த அரசு சார்ந்த கருத்தரங்கம் ஒன்றில் ஒரு அறிஞர் இன்றைய சீனாவில் "அடித்தளத்தில் ஆட்டம், நடுத்தர மக்கள் மத்தியில் விரக்தி, மேல்தட்டில் கட்டுப்பாடில்லாத நிலைமை' காணப்படுவதாகத் தெரிவித்தார்.

20 ஆண்டு காலப் பொருளாதாரச் சீர்திருத்தம் மக்களின் எதிர்பார்ப்பை அளவுக்கதிகமாக அதிகரித்துவிட்டிருக்கிறது. சீனர்கள் வெளிநாடுகளில் தங்கள் பணத்தைச் சேமித்து வைக்கும் அளவுக்கு அவர்களிடம் நம்பிக்கை இன்மை காணப்படுகிறது. போதாக்குறைக்கு, மேற்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கம் சீனாவை வெகுவாக பாதித்திருக்கிறது. உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தும் ஹூ ஜிண்டாவோவின் முயற்சிகள் எடுபடவில்லை. இனி ஜீ ஜின்பிங்க் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் கேள்வி.

சீனாவை எதிர்நோக்கும் இன்னொரு பிரச்னை புரையோடிப் போயிருக்கும் லஞ்சப் புகார்கள். கம்யூனிஸம் இருந்தவரை இல்லாத இந்தப் புற்றுநோய் இப்போது சந்தைப் பொருளாதாரத்தாலும், பொருளாதார சீர்திருத்தத்தாலும் சீனாவைத் தொற்றிக் கொண்டுள்ளது. பதவி விலக இருக்கும் பிரதமர் வென் ஜியாபோவின் உறவினர்கள் பல கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்திருப்பதாக ஆதாரபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

நியாயமாக, அதிபராகவோ, பிரதமராகவோ குறைந்தபட்சம் பொலிட்பீரோவின் நிலைக்குழு உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய போ சிலாய் கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது கடுமையான லஞ்ச ஊழல் புகார்களும், ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபரின் கொலையை மூடி மறைக்க முயன்ற குற்றச்சாட்டும் சீனாவில் பரபரப்பாகப் பேசப்பட்டன. கட்சியிலிருந்து சமீபத்தில் விலக்கப்பட்ட லி ஜிஜுன், ரயில்வே அமைச்சராக இருந்தபோது விரைவு ரயில் திட்டத்தில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முறைகேடுகள் செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு.

""நாம் லஞ்ச ஊழல் பிரச்னையை சரியாகக் கையாண்டு முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், கட்சி மட்டுமல்ல, நமது தேசமே மிகப்பெரிய வீழ்ச்சியையும், குழப்பத்தையும் சந்திக்க நேரிடும்'' என்று அதிபர் ஹூ ஜிண்டாவோ, கட்சியின் 8வது தேசிய மாநாட்டின் துவக்க உரையில் குறிப்பிட்டிருப்பது எந்த அளவுக்கு உலகமயமாக்கலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களும் சீனாவைப் பாதித்திருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அரசியல் சீர்திருத்தம் என்கிற பெயரில் பேச்சு, எழுத்து சுதந்திரத்தையும், மக்கள் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அளிப்பது மக்களின் மனக் கொந்தளிப்பை தாற்காலிகமாக அடக்க உதவுமே தவிர நிரந்தரத் தீர்வாக இருக்குமா என்பது தெரியவில்லை.

நியாயமாகப் பார்த்தால் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கும் லீ கெகியாங்தான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். கட்சியின் பல்வேறு பிரிவினர்களைச் சமாதானப்படுத்துவதற்காக ஜீ ஜின்பிங், ஹூ ஜிண்டாவைத் தொடர்ந்து அதிபராக்கப்பட்டிருக்கிறார். ஜீ ஜின்பிங், லீ கெகியாங் இடையிலான உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியில் அதிபர் ஹூவைவிட, பிரதமராக இருந்த வென் ஜியாபோதான் பரவலாக அறியப்பட்ட முகமாகவும், நிர்வாகத் தலைவராகவும் இருந்தார். இனி எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

இக்கட்டான காலகட்டத்தில் அதிபராகிறார் ஜீ ஜின்பிங். இவரது பதவிக் காலத்தில் சீனா தனது கம்யூனிஸச் சட்டையைக் கழற்றிவிட்டு, ஜனநாயகச் சட்டையை அணிந்து கொண்டால் ஆச்சரியப்படாதீர்கள். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன!





நன்றி: Dinamani

No comments:

Post a Comment