தமிழ்நாடு நகர ஊரமைப்புச் சட்டம் 1971-ன் பிரிவு 113-சி-இன் கீழ், விதிமுறைகளை மீறி எழுப்பப்பட்டிருக்கும் கட்டடங்களுக்குப் பெயருக்கு ஓர் அபராதம் விதித்து, விதிவிலக்கு அளிக்கும் முடிவைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது. 2007 ஜூலை மாதத்துக்கு முன்னால் நடந்தேறி இருக்கும் விதிமுறை மீறல்கள் அனைத்தும் இதன் மூலம் மன்னிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழக அரசின் அறிவிப்புப்படி, தெரு அல்லது சாலை தொடர்பான நிபந்தனைகளில் 20% மிகாமலும், கட்டடத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டிய இடைவெளி மீறல்களில் 50% மிகாமலும், தரைத் தளத்துக்கும் ஒட்டுமொத்தக் கட்டுமானத் தளத்தின் பரப்புக்கும் அனுமதிக்கப்பட்ட அளவில் 50% அதிகபட்சமாகவும், விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், அந்தத் தவறுகளை ஒரு கட்டணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள இந்த அரசாணை அனுமதிக்கிறது.
கட்டடங்களுக்கு விதிமுறைகளை ஏற்படுத்தி இருப்பதன் நோக்கம் பாதுகாப்பும், சீரான திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சியும்தான். வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் விதிமுறைகளை மீறிக் கட்டப்படும்போது, ஒரு சிறிய நில அதிர்ச்சியோ, கட்டுமானத்தில் உள்ள குறைபாடோ மிகப்பெரிய விபத்தில்போய் முடிந்து, உயிர்ச் சேதத்துக்கும் பொருள் சேதத்துக்கும் வழிகோலும் என்பதால்தான் இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளை ஏற்படுத்திய அரசே, இப்போது விதிமுறைகளை மீறியவர்களுக்குக் கட்டணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று சலுகை தந்தால் அந்தக் கட்டடங்களில் விபத்து ஏற்பட்டால், அதற்கு யாரைப் பொறுப்பாக்கப் போகிறது?
ஒரு சாலையின் அகலத்தைக் கணக்கில்கொண்டுதானே அதில் அமையும் கட்டடத்தின் அளவைத் தீர்மானிக்க முடியும்! குறுகலான சென்னை ரங்கநாதன் தெருவில் பல வணிக வளாகங்களை அனுமதித்ததால்தானே சரவணா ஸ்டோரில் தீ விபத்து நேர்ந்தபோது அந்தத் தெருவில் தீயணைப்புப் படையினரால் சுலபமாக உள்ளே நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டது? தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் கூட்ட நெரிசலில் மரணங்கள் ஏற்பட வாய்ப்பாகிறது? இதெல்லாம் அரசுக்குத் தெரிந்திருந்தும் அந்தத் தெருவிலிருந்து வணிக வளாகங்களை அப்புறப்படுத்தவோ, விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருக்கும் பகுதிகளை இடிக்கவோ முன் வரவில்லை.
இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அரசு ஆணையொன்றும் புதியதல்ல. கடந்த திமுக ஆட்சியிலேயே ஜூலை 27, 2007-க்கு முன்னால் கட்டப்பட்ட விதிமுறை மீறல் கட்டடங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, விதிமுறை மீறல் கட்டடங்களை இடித்துத் தள்ள நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்ட முடிவெடுத்தது. இப்போது அதிமுக அரசு ஒரு படி மேலேபோய், விதிவிலக்குக்கான காலக்கெடுவை ஜூலை 1, 2007 வரை என்று அதிகரித்திருக்கிறது, அவ்வளவே. இதனால் மேலும் சில கட்டடங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கக்கூடும்.
கடந்த திமுக ஆட்சியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளில் 9,816 குடியிருப்புகள், 698 வணிக வளாகங்கள், 20 நிறுவனங்கள், 66 தொழிற்சாலைகள் விதிமீறல் செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. இன்றைய நிலையில் இந்தப் புள்ளிவிவரம் இரட்டிப்பாகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விதிமுறை மீறல்கள் மன்னிக்கப்படும், காலப்போக்கில் அபராதம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம் என்கிற துணிவை அரசு தருமானால், யார்தான் விதிமுறைமீறலில் ஈடுபட மாட்டார்கள்? அரசினால் தண்டிக்கப்படுவோம், விதிகளை மீறினால் கட்டடம் இடிக்கப்படும் என்கிற அச்சம் இல்லாமல் போனால், எதற்காகச் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு நகர ஊரமைப்பு இயக்ககம், மாநகராட்சி எல்லாம்? அவரவர் இஷ்டத்துக்குக் கட்டடம் கட்டிக் கொள்ளட்டுமே?
அரசாணைப்படி, 2012-இல் வெளியான வழிகாட்டி விதிப்படி அந்தப் பகுதிக்கு என்ன மதிப்போ அந்தத் தொகையில் 1.25% யை விதிமுறை மீறிய பகுதியின் அளவுக்கேற்ப அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் செலுத்த வேண்டும். அந்தக் குடியிருப்பை வாங்கும்போது, இத்தகைய முறைகேடுகள் குறித்த விவரங்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்காது. வீட்டுமனை வியாபாரி தெரிந்தே ஏமாற்றிய துரோகத்துக்கு அப்பாவிகள் பணத்தைக் கொட்டியழுது முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வழிகாட்டு நெறிமுறை மதிப்பு சென்னையில் 300 மடங்கு உயர்ந்துள்ளதால், தவணையில் வீடு வாங்கி அல்லல்படும் அந்த அப்பாவிகள், பணத்துக்கு எங்கே போவார்கள் என்பதை அரசு ஏன் சிந்திக்கவில்லை? வணிக வளாகத்தினர் தெரிந்தே விதிமுறைகளை மீறியிருக்கிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நபருக்குமே அரசு அபராதம் விதிக்கிறது. அதாவது, ஏமாற்றியவனுக்கும், ஏமாந்தவனுக்கும் ஒரே தண்டனையா? நன்றாக இருக்கிறது அரசின் முடிவு.
முறைப்படுத்துதலுக்காக விண்ணப்பங்களைப் பெறுவது இருக்கட்டும். எந்தக் கட்டடம் எந்த வீட்டு மனை வியாபாரியால் விற்கப்பட்டது என்று பார்த்து, அவர்களிடம் அபராதத்தை வசூலிப்பது அல்லவா நியாயம்? அப்போதுதானே இத்தகைய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்? அவர்கள் புதிய நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பார்களே என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கு ஓர் அரசும் நிர்வாகமும் தேவைதானா? இந்த முறைகேடுகளுக்கெல்லாம் துணைபோன அதிகாரிகளுக்குத் தண்டனையே கிடையாதா?
பண பலம், அதிகார பலம், அரசியல் பலம் எல்லாம் இருக்கிறது என்பதால், வணிக வளாகங்களில் கட்டட விதிமுறைகள் தெரிந்தே மீறப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாகக் கட்டடம் கட்டப்படுவதை அதிகாரிகள் தெரிந்தும் வாளாவிருக்கிறார்கள் என்பதால் வீட்டு மனை வியாபாரிகள் தெரிந்தே விதிமுறைகளை மீறி, அனுமதிக்கு அதிகமாகக் குடியிருப்புகளைக் கட்டி விற்கிறார்கள். இதனால் எல்லாம் பாதிக்கப்படப் போவது வாக்களித்த அப்பாவி மக்கள்தானே, ஆட்சியாளர்களுக்கு என்ன கவலை?
No comments:
Post a Comment