Sunday, 4 November 2012

தரையிறங்கும் விமானங்கள்

 கிங்ஃபிஷர்' விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவும்கூட நிரந்தரமானது அல்ல. விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககத்தின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்தால் போதும், மீண்டும் உரிமம் வழங்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த உரிமத்தை "டி.ஜி.சி.ஏ.' ரத்து செய்துள்ளதால் "கிங்ஃபிஷர்' நிறுவனத்துக்கு எந்த நட்டமும் இல்லை. ஏற்கெனவே கடந்த 20 நாள்களாக நடைபெறும் அந்த நிறுவனத்தின் தொழிலாளர் வேலைநிறுத்தத்தால் அதன் போக்குவரத்து முற்றிலுமாக நடைபெறாமல்தான் இருக்கிறது. இவ்வளவு பரபரப்பு சூழ்நிலையிலும், "கிங்ஃபிஷர்' நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, பத்து நாள்களுக்கு முன்பு வெளிநாடு சென்றவர் இந்தியா திரும்பவில்லை. அவர் வெளிநாட்டில் நடைபெறும் "ஃபார்முலா-1' கார் பந்தய நிகழ்ச்சிக்காகச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

விமானப் போக்குவரத்துத்துறை செய்திருக்க வேண்டிய முதன்மைப்பணி என்னவெனில், "கிங்ஃபிஷர்' விமானத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்க ஏற்பாடு செய்வதுதான். அதுதான் அத்தொழிலாளர்களின் குடும்பப் பராமரிப்புக்கு முதல்தேவை. அதை மத்திய அரசு உறுதிப்படுத்துவதை விட்டுவிட்டு, உரிமத்தை ரத்து செய்துள்ளது. நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மீண்டும் உரிமம் தரப்படும் என்கிறது.

ஓர் ஆண்டுக்கு முன்பு வரையிலும் 66 விமானங்களைக் கொண்டிருந்த ஒரு நிறுவனம் தற்போது வெறும் 10 விமானங்களை மட்டுமே கொண்டிருக்கும் எனில் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? கடந்த நான்கு ஆண்டுகளாக, அதாவது 2008-09-இல் ரூ.1,608 கோடி நட்டம், 2009-10-ஆம் ஆண்டில் ரூ.1,647 கோடி நட்டம், 2011-12-ஆம் ஆண்டில் ரூ.1,027 கோடி நட்டம், 2011-12-இல் ஜூன் வரை 732 கோடி நட்டம் என்று தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் நிறுவனத்துக்குக் கடனுதவி அளித்தவை அனைத்தும் வெளிநாட்டு வங்கிகள் அல்ல. இந்தியாவின் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள்!

இந்த வங்கிக் கடன் ரூ.7,524 கோடி வாராக் கடனாக மாறும் என்றால், அது யாருக்கான நட்டம்?

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் பணமும் அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் பணமும் மக்கள் பணம் கிடையாதா?

அந்த நிறுவனத்தில் உள்ள 10 விமானங்களையும் பறிமுதல் செய்தாலும்கூட இந்தக் கடன் தொகையில் பாதியை மீட்கக்கூட உதவாது. அப்படியானால், இந்த நிறுவனத்துக்கு ஏன் தொடர்ந்து கடன் தந்தார்கள்? இது உண்மையாகவே நட்டமா? அல்லது வேறு காரணங்களினால் நட்டம் காட்டப்படுகிறதா? டிஜிசிஏ சொல்லும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால்போதும் என்று சொல்லும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் விஜய் மல்லையா தனக்கென தனி உரிமத்துடன் இரண்டு விமானங்களை வைத்துள்ளார். இதற்கான விமானிகள், பணிப்பெண்களுக்கு சம்பளம் முறையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தினக் கைச்செலவுக்கு 250 டாலர் பணமும் வழங்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு தன் விமானத்தில் பறந்துகொண்டிருக்க முடியும்.

அது அவரது தனி விமானத்துக்கான உரிமமாக இருக்கலாம். ஆனால், இப்படியான இக்கட்டான சூழலில் அவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்காதது ஏன்? அதுவரை அவரது தனிவிமானத்துக்கான உரிமத்தையும் ரத்து செய்யாதது ஏன்?

விமானப் போக்குவரத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவுகளைத் திறந்திருக்கும் இந்த வேளையில், விமானப் போக்குவரத்து உரிமக் கட்டணத்தை உயர்த்துதல், சேவையில் குறைபாடு இருந்தால் அபராதம் விதித்தல், பயணிகள் பாதிக்கப்பட்டால் இழப்பீடு அளித்தல், நட்டத்தில் இயங்கத் தொடங்கினால், அந்த நட்டத்தை ஈடுகட்டும் சொத்துகளைப் பிணையாகக் காட்டுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

புதிய விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைத்தல், பயணிகள் பயன்பாட்டுக் கட்டணத்தை அவர்கள் விருப்பப்படி நிர்ணயிக்க விட்டுவிடுதல் போன்ற எல்லா விவகாரங்களிலும் பயணிகளுக்குச் சாதகமாக அரசு செயல்படுவதேயில்லை. இதற்கு உதாரணம் அபுதாபி-கொச்சி ஏர்இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு நேரிட்ட இடையூறு.

பனிமூட்டம் காரணமாக இந்த விமானம் திருவனந்தபுரத்தில் இறக்கப்பட்டது. அதில் தவறில்லை. ஆனால், பயணிகள் விமானத்தைவிட்டுக் கீழே செல்ல அனுமதிக்காமலும், உணவு வழங்காமலும் பல மணிநேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர்.

இதனால் சில பயணிகள் விமானப் பணியாளர்கள் மற்றும் விமானிகளுடன் தகராறு செய்தபோது கடத்தல் சமிக்ஞையை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினார் விமானி.

விமானியின் அறையில் மூன்றுவிதமான பொத்தான்கள் உள்ளன. விமானக் கோளாறு சமிக்ஞை, அவசர உதவி கோரும் சமிக்ஞை, கடத்தல் சமிக்ஞை. பயணிகள் தகராறு செய்தது நியாயமான காரணங்களுக்காகதான்! தாமதம் ஏன் என்பதை விமானப் பணியாளர்கள் விளக்கியிருந்தால், அவர்களுக்கு உணவு அளித்திருந்தால் பயணிகள் ஆத்திரமடைந்திருக்க மாட்டார்கள். இதில் நியாயமாக விசாரிக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் விமானியும் விமானப் பணியாளர்களும். ஆனால், விசாரிக்கப்பட்டவர்களோ பயணிகள்!

கடத்தல் சமிக்ஞை அளித்த விமானியை யாரும் ஒரு கேள்விகூட கேட்கவில்லை. இத்தனை அலட்சியமான விமானியின் நடவடிக்கைக்கு விமானப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டமா? பயணிகள் கேள்வி கேட்டாலே அவர்களைக் கடத்தல்காரனாக்கி விடுவார்களா என்ன?

தனியார்மயம்தான் திறமையான செயல்பாட்டுக்கு உறுதியளிக்கும் என்று வாதிடுபவர்கள், ஏன் இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் "கிங்ஃபிஷர்' போன்ற செயல்பாடுகள் காணப்படுகின்றன என்பதற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்கள்? அது அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ எதுவாக இருந்தாலும் முறையாகச் செயல்படுகின்றனவா என்று கண்காணிக்கவும் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியாவிட்டால், பாதிக்கப்படுவது சராசரி இந்தியன்தான். நமது வரிப்பணமல்லவா வீணாகிறது!





நன்றி: Dinamani

No comments:

Post a Comment