Saturday, 10 November 2012

ஊழல் எதிர்ப்பு என்பது உதட்டளவு ஆதரவாகத்தான் இருக்கும்!

தில்லியை அடுத்த குர்காவில் நடந்த உலகப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வினோத் ராய், நீண்ட நாளாக நாட்டுநலனில் அக்கறையுள்ளவர்களின் ஒரு கோரிக்கையை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு எதிர்பார்த்தது போலவே, காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அரசுத் தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

நீதித்துறை, தேர்தல் ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் போன்ற அமைப்புகளைப் போலவே மத்தியப் புலனாய்வுத் துறையும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் அரசியல் சட்ட அமைப்புகளாக்கப்பட வேண்டும் என்பதுதான் வினோத் ராய் முன் வைத்திருக்கும் யோசனை. அந்தப் பட்டியலில், அமைய இருக்கும் லோக் பால் அமைப்பையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.

""தகவல் பெறும் உரிமைச் சட்டம் வந்த பிறகு நிர்வாகமும், அரசியல் தலைமையும் மக்களின் பார்வையிலிருந்து தாங்கள் எதையும் நிரந்தரமாக மறைத்துவிட முடியாது என்பதை உணர்ந்துதான் இருக்கின்றன. ஆனாலும், தவறுகள் தொடர்ந்து நடப்பதற்குக் காரணம், மத்தியப் புலனாய்வுத் துறை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்றவை அரசியல் சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருப்பதுதான். இவை இரண்டுமே ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத்தான் செயல்பட வேண்டிய சூழ்நிலை. உண்மையாகவே ஊழலை ஒழிக்க வேண்டும், குறைந்தபட்சம் பெரிய முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வேண்டும் என்று விரும்பினால், லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு, லோக்பால், மத்தியப் புலனாய்வுத் துறை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதற்கு இந்த அமைப்புகளுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் தரப்பட வேண்டும்'' - இதுதான் வினோத் ராயுடைய உரையின் சாராம்சம்.

வினோத் ராயால் எழுப்பப்பட்டிருக்கும் பிரச்னை, கடந்த பல வருடங்களாகவே விவாதிக்கப்பட்டு வரும் ஒன்றுதான். மத்தியப் புலனாய்வுத் துறை என்பதே ஆளும் கட்சியால், தனது தவறுகளை மறைக்கவும், எதிர்க் கட்சிகளைப் பழிவாங்கவும் பயன்படும் அமைப்பாக மாறிவிட்டிருக்கிறது என்பதற்கு, கடந்த கால சரித்திரத்தில் எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். போஃபர்ஸ் ஊழல் பிரச்னையில் குவாத்ரோச்சியைத் தப்ப வைக்க அவரைவிட அதிகமான முனைப்பை மத்தியப் புலனாய்வுத் துறைதான் காட்டியது என்பதை அதன் செயல்பாடுகளே வெளிப்படுத்தின.

தேர்தல் ஆணையரும், தணிக்கை ஆணையரும் துணிந்து தவறுகளைத் தட்டிக் கேட்கவும், சுட்டிக்காட்டவும் முடிகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த அமைப்புகளுக்கு அரசியல் சட்ட அங்கீகாரமும் பாதுகாப்பும் இருப்பதால்தான். அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள்தான், தலைமைத் தேர்தல் ஆணையராகவும், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாகவும் நியமிக்கப்படுகிறார்கள் என்றாலும், அவர்களது நியமனத்திற்குப் பிறகு அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடிவதற்குக் காரணம், அந்த அமைப்புகளுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் தரப்பட்டிருப்பதால்தான்.

அரசியல் சட்ட அமைப்பாக இருப்பதால் அப்படி என்ன மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடும், அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள்தானே இந்த அமைப்புகளில் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள் என்று கேட்கலாம். அரசு அதிகாரியாக இருப்பது என்பது வேறு. அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத ஓர் அமைப்பில் பணியாற்றுவது என்பது வேறு. அரசு அதிகாரிகளாக இருந்த டி.என். சேஷன், டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, என். கோபால்சுவாமி, எஸ்.ஒய். குரேஷி போன்றவர்கள் தேர்தல் ஆணையர்களாகத் திறம்படச் செயல்பட்டதன் காரணம் அந்த அமைப்புக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் இருப்பதுதான். ஆட்சியில் இருப்பவர்கள் உத்தரவின் மூலம் அவர்களை இடமாற்றம் செய்யவோ, பதவியிலிருந்து அகற்றவோ முடியாது என்பதால், துணிவாகவும் தன்னிச்சையாகவும் அவர்களால் செயல்பட முடியும்.

மத்தியப் புலனாய்வுத் துறையும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் முறையாகவும், துணிவுடனும் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட முடியாமலும் இருப்பதால்தான் அரசில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் வெளியில் தெரியாமலும், அப்படியே தெரிந்தாலும் நிரூபிக்க முடியாமலும் மூடி மறைக்கப்படுகின்றன.

அரசியல் சட்ட அங்கீகாரமுள்ள லோக்பால் அமைப்பும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்தியப் புலனாய்வுத் துறையும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பின்னணியில் பெரிய அளவில் ஊழல்களோ, முறைகேடுகளோ நடந்துவிடாமல் தடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால்தான் கட்சி வேறுபாடு இல்லாமல் நமது அரசியல்வாதிகள் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஊழலை ஒழிப்பதுதான் எங்கள் குறிக்கோள் என்று பிரதமர் சூளுரைக்கிறார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி "ஊழல் ஒழிக' என்று முழங்குகிறார். பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி ஊழல், முறைகேடுகள் போன்ற பிரச்னைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்துகிறது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குகிறது. எந்தவொரு அரசியல்வாதியையும், அரசியல் கட்சியையும் கேட்டாலும் அவர்கள் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிரானவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்.

இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையானால், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் குறிப்பிட்டிருப்பதுபோல, லோக்பால், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றை அரசியல் சட்ட அமைப்பாக்கி தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதைச் செய்யாதவரை இவர்களது ஊழல் எதிர்ப்பு என்பது உதட்டளவு ஆதரவாகத்தான் இருக்கும்!






நன்றி: Dinamani

No comments:

Post a Comment