அசோக் கெம்கா நேர்மையான அதிகாரி. அதனால்தான் ஆண்டுக்கு இரண்டு மாறுதல் உத்தரவாக 20 வருடமாக வாங்கி வந்திருக்கிறார். நேர்மையாக நடப்பவர்களை சுற்று வட்டாரத்தில் விரும்புவது இல்லை. துணிச்சலும் சேர்ந்துகொண்டால் வெறுக்கவே தொடங்கிவிடுவார்கள். கெம்கா அந்த ரகம். ஆனால் இம்மாதிரி அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டுவார்கள். அவர்கள் அப்பாவிகள் என்பது ஒரு காரணம். அரசுப் பணி என்ற சுற்றுவட்டாரத்தில் இல்லாமல் அதன் பயன்கள் தொடும் எல்லைக்கு அப்பால் வசிப்பவர்கள் என்பது முக்கிய காரணம். தமிழகத்திலும் கெம்கா மாதிரியான நேர்மை + துணிச்சல் அதிகாரிகள் பலரை பார்த்திருக்கிறோம். முன்பெல்லாம் அப்படி பிரபலம் ஆகிறவர்கள் வட இந்திய அல்லது பஞ்சாபி பெயர் சூட்டியவர்களாக இருப்பார்கள். சமீபகாலமாக தமிழ் பெயர்களும் அடிபடுகின்றன. ஆக்கிரமிப்பை அகற்றினால் போதும் நமது மக்கள் கைதட்டி பாராட்டி கோஷம் போடுவார்கள். அந்த அளவுக்கு செயலற்று போன பல அதிகாரிகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள். இப்படி இருக்கையில், செல்வாக்குடன் இருப்பவர்களின் அத்துமீறலை எதிர்த்து நிற்கும் அதிகாரிகளை சும்மா விடுவார்களா? பொன்னாடை போர்த்தி போஸ்டர் ஒட்டி அவரது மாறுதல் உத்தரவை அரசு வாபஸ் வாங்க உண்ணாவிரதம் இருப்பார்கள். வார பத்திரிகைகள் அட்டகாசமான படத்துடன் கவர் ஸ்டோரி போட்டு பட்டமெல்லாம் சூட்டும். பாராட்டு மழையில் நனையும் அதிகாரிகளின் அஸ்தமனம் அங்கே ஆரம்பிக்கிறது. அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் இந்திய அரசியல் சாசனம் வெவ்வேறு பாத்திரங்களை வகுத்து தந்திருக்கிறது. ஒருவர் அடுத்தவரின் எல்லைக்குள் பிரவேசிக்க முயன்றால் விளைவுகள் கசப்பாக முடியும். இருவரும் கூட்டணி போட்டு லாபம் பார்த்தாலும் சட்டம் சும்மா விடாது. விதிமீறலை அனுமதிக்க மறுத்தால் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள். ஆட்சி மாறும்போது காட்சியும் மாறுவது அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது.
சராசரி மனிதனின் சந்தேகம், இந்த கெம்காக்கள் இருபதாண்டுகள் காத்திராமல் ஆரம்பத்தில் இருந்தே அத்துமீறல்களை அம்பலப்படுத்த முன்வராதது ஏன் என்பதுதான். நீதிமன்றங்கள் நிழல் தரும் இன்றைய சூழலில் அரசியல் ஆதாய வெயிலுக்கு அதிகார வர்க்கம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
No comments:
Post a Comment