Sunday, 4 November 2012

தகவல் பெறும் உரிமை-நீங்கியது தடை!

 சமூகப் பிரச்னைகள், வளர்ச்சிப் பணிகள் தொடர்பான பிரச்னைகளில் மட்டும்தான் ஆவணக் குறிப்புகளைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியும் என்று, அந்தச் சட்டத்தின் வரம்புகளுக்குச் சில வரைமுறைகளை ஏற்படுத்தும் அரசின் திட்டம் பொதுநல ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்து கைவிடப்பட்டிருக்கிறது.

 இனிமேல் தேசியப் பாதுகாப்பு, தனிநபர் உரிமை, வர்த்தக முக்கியத்துவம் உள்ள பிரச்னைகள் தவிர, வேறு எல்லா பிரச்னைகளிலும் கோப்புகளில் அதிகாரிகளும், அமைச்சர்களும் எழுதும் குறிப்புகளை நாம் கேட்டுப் பெற முடியும். அரசின் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் ஆணையர், ஊழல் கண்காணிப்பு ஆணையர் போன்ற முக்கியமான பதவிகளுக்கான நியமனங்கள் பற்றிய குறிப்புகளைப் பொதுமக்கள் பார்வையிடவும், கேட்டுப் பெறவும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு விடும்.

 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தும் முடிவை 2006-இல் அமைச்சரவை எடுத்தாலும், அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அனுப்பப்படவில்லை. அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்ததன் விளைவாக, இப்போது அரசு தனது முடிவை மாற்றிச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது.

 ராஜஸ்தானில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் முதன்முதலில் மக்களால் எழுப்பப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்ட கோரிக்கை, சமூக ஆர்வலர்களால் ஆங்காங்கே எழுப்பப்பட்டு, அதன் விளைவாக 2005 ஜூன் 15-ஆம் தேதி நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டு, அக்டோபர் 12-ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் பயனாகத்தான், இன்று ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் மக்கள் மன்றத்தின் பார்வைக்கு வந்திருக்கின்றன.

 பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தின்போது 1889-இல் கொண்டுவரப்பட்ட ரகசியக் காப்புச் சட்டம், 1923-இல் திருத்தப்பட்டு இன்றுவரை சட்டமாகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2000-த்தில் பிறப்பிக்கப்பட்ட தகவல் சுதந்திர மசோதாவும், அதன் தொடர்ச்சியாக 2002-இல் கொண்டு வரப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டமும் பயனளிக்காமல் போனதற்குக் காரணம், எந்தவிதச் சட்டதிட்டங்களும், முறையான ஷரத்துக்களுடன் கூடிய அறிவிப்பும் இல்லாமல் போனதுதான்.

 2005-இல் நடைமுறைக்கு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தக் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெறும் முயற்சிகள் பல. பிரதமரே பல தடவை, இந்தச் சட்டம் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும், தேவையற்ற தகவல்கள் கோரப்படுவதால் அரசு அதிகாரிகள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறி இந்தச் சட்டத்தில் தனக்கு முழு உடன்பாடு இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 ஒருபுறம் காங்கிரஸ் கட்சி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதைத் தனது மிகப்பெரிய சாதனையாகத் தேர்தல் அறிக்கையிலும், பொதுக் கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டாலும், பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த கதையாக இந்தச் சட்டம் தங்களது ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்தும் சட்டமாக மாறிவிட்டதாகவே கருதுகிறார்கள். இல்லாவிட்டால், இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய சில மாதங்களிலேயே, கோப்புகளில் உள்ள குறிப்புகளைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிப்பதற்குக் கட்டுப்பாடு விதிப்பானேன்?

 அரசுதான் இந்தச் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் முயற்சியில் இறங்கியது என்றால், நீதிமன்றமும் தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு தீர்ப்பை அளித்து சமூக ஆர்வலர்களின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. தகவல் ஆணையர்களாக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்களோ, இருப்பவர்களோதான் நியமிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய, மாநில தகவல் ஆணையர்கள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகவோ, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவோதான் இருக்க வேண்டும் என்றும் ஒரு விசித்திரமான தீர்ப்பை வழங்கிப் பல ஆணையங்கள் செயல்படாமல் முடங்கும் நிலைமைக்கு வழிகோலிவிட்டது.

 தகவல் ஆணையர்களின் நியமனத்தில் பல தவறுகள் நடக்கின்றன என்பதும், நீதிமன்ற அனுபவம் தகவல் ஆணையர்கள் தங்கள் கடமையைச் செய்யப் பெரும் துணையாக இருக்கும் என்பதும் உண்மை. அதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வேலை கொடுக்கும் மையங்களாகத் தகவல் ஆணையங்கள் மாற்றப்படுவது என்ன நியாயம் என்று புரியவில்லை. பல மாநிலங்களில் தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் முடங்கிக் கிடப்பதுதான் மிச்சம்!

 தகவல் பெறும் உரிமைச் சட்டம் இந்தியாவின் சராசரிக் குடிமகனுக்கு மக்களாட்சியில் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை அளிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு அதிகாரிகளும் நிர்வாக ரீதியாக எடுத்த முடிவுகளையும், அவர்களது செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு வாக்காளருக்கும் தரப்படுவதுதானே நியாயம்?

 இன்னும் சொல்லப்போனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வரம்பு அதிகரிக்கப்பட்டு, அரசு நிர்வாகம் மட்டுமல்லாமல், அரசு நிறுவனங்களும், மக்கள் பணத்தில் செயல்படும் தன்னார்வ அமைப்புகளும், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள், மக்களின் முதலீட்டில் செயல்படும் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள், அரசு வங்கிகள் போன்றவையும் தகவல் பெறும் உரிமைச் சட்ட வரம்பில் சேர்க்கப்பட வேண்டும்.

  கோப்புகளில் உள்ள குறிப்புகளைப் பரிசீலிக்கும் உரிமை தரப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய முடிவு. தகவல் பெறும் உரிமையை முழுமையாகச் செயல்பட வைப்பது இந்தியாவின் வருங்காலத்தில் அக்கறையுள்ள அனைவரின் கடமை. அந்த இலக்கை நோக்கி எடுத்து வைக்கப்படும் இன்னொரு அடிதான் இது!




நன்றி: Dinamani

No comments:

Post a Comment