Saturday, 3 November 2012

மோடியின் சாமர்த்தியம் போதவில்லை


வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாதவர்கள் என்று மனிதர்களில் ஒரு ரகம் உண்டு. எப்போதும் ஏதாவது மென்று கொண்டிருப்பவர்கள் அதில் ஒரு பிரிவு. இவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு வராது. பொதுவாக யாரும் வெளிப்படையாக சொல்ல விரும்பாத விஷயத்தை பேசிவிடும் நபர்களால் பெரிய பிரச்னைகள் உருவாகும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் அப்படியொரு விவகாரம் வெடித்திருக்கிறது. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்ந்துள்ள சசி தரூரை வம்புக்கு இழுத்திருக்கிறார் மோடி. 'ஒரு காங்கிரஸ் தலைவர் இருந்தார். அவர் கிரிக்கெட் மூலம் நிறைய சம்பாதித்து விட்டதாக சொல்கிறார்கள். கேர்ள் ஃபிரண்டுக்கு 50 கோடி கொடுத்தாராம். அவ்வளவு மதிப்புள்ள கேர்ள் ஃபிரண்ட் யாருக்காவது உண்டா? அப்புறம் ஒரு நாள் அந்த கேர்ள் ஃபிரண்ட் இவருக்கு மனைவியாகி விட்டாராம்' என்று மோடி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். இன்னும் தீர்க்கப்படாத விவகாரம் என்று மோடி குறிப்பிடுவது, அகாலமாக முடிந்த கொச்சி ஐபிஎல் அணி அத்தியாயம். அந்த அணியை சொந்தமாக்கிய கம்பெனியில் ஸ்வெட் ஈக்விட்டி என்ற பெயரில் 50 கோடி மதிப்புள்ள பங்குகள் வைத்திருந்ததாக சுனந்தா என்ற பெண் தொடர்பாக பிரச்னை எழுந்து அவரும் சசி தரூரும் பின்வாங்க நேரிட்டது. பின்னர் சுனந்தாவை சசி திருமணம் செய்தார். அதோடு விவகாரம் முடியவில்லையே என்று மோடி கேட்கிறார். லலித் மோடி ஐபிஎல் தலைவராக இருந்தபோது அவர் கைகாட்டிய தென்னாப்ரிக்க சியர்கேர்ள் ஒருவருக்கு சீக்கிரம் விசா கிடைக்க அப்போது வெளியுறவு துறையில் இருந்த சசி தரூர் உதவவில்லை. அந்த கோபத்தில் சுனந்தா விவகாரத்தை லலித் மோடிதான் போட்டுக்கொடுத்ததாக பேசப்பட்டது. அந்த மோடி விட்டதை இந்த மோடி தொடர்கிறார். 'என் மனைவி விலை மதிப்பற்றவர். காதலையோ கல்யாணத்தையோ அனுபவித்திராத நரேந்திர மோடிக்கு காதலின் மதிப்பு எப்படி புரியும்?' என்று சசி பதிலடி கொடுக்கிறார். காதலி, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தையே அரசியல் விமர்சனத்துக்குள் கொண்டுவரும் மோடியின் சாமர்த்தியம் தேசிய அரசியலுக்கு பொருத்தமானவராக அவரை உயர்த்திக்காட்டவில்லை.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment