Saturday, 3 November 2012

இது ஒரு மழைக்காலம்


ஐந்து பேர் பலியுடன் ஆரம்பமாகி இருக்கிறது வடகிழக்கு பருவ மழை. முதல் நாள் மழைக்கே சென்னை நகர சாலைகள் வெள்ளக்காடாகி போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.  குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் நீரில் மூழ்கியதால் எங்கே பள்ளம் எங்கே மேடு என்பதும் தெரியாமல் போனது. ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குப்பைகள் அகற்றப்படாமலும் கால்வாய் தூர் வாரப்படாமலும் கழிவுநீர் தேங்கி பல பகுதிகளில் மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது. மழை தொடங்கிவிட்டதால் கழிவுநீர் இனி தன் அடையாளத்தை இழந்துவிடும்.சாலைகளை எதற்கு தோண்டுகிறார்கள், யார் தோண்டுகிறார்கள் என்பது பொதுமக்களுக்கு எப்போதுமே புதிராக இருந்து வருகிறது. குடிநீருக்கா, வடிகாலுக்கா, டெலிபோனுக்கா, மின்சாரத்துக்கா, மெட்ரோவுக்கா, கேபிளுக்கா என்று யாரும் சொல்வதில்லை. ஒவ்வொரு துறையும் இது மற்ற துறைகளின் வேலையாக இருக்கும் என்று ஊகித்துக் கொண்டு அவரவர் அமைதியாகி விடுகின்றனர். தினம் தவறாமல் நாளேடுகள் படம் பிடித்து நகரின் பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாலும் நடவடிக்கை என்பது சுட்டிக்காட்டப்படும் அந்த இடங்களோடு முடிந்துவிடுவதால், பிரச்னை தீர்வதற்கு பதிலாக நகரை சுற்றிச் சுற்றி வருகிறது. மரம் சரிந்து மரணம், தோண்டிய பள்ளம் மூடப்படாததால் அதில் விழுந்து பலி, தேங்கியிருந்த நீரில் மின்சாரம் கசிந்து அதில் கால் வைத்தவர்கள் சாவு போன்ற எந்த செய்தியும் சென்னை வாசிகளுக்கு புதிதல்ல. நீதிமன்றங்கள் தலையிட்டு கண்டித்த பிறகும் அந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண பொறுப்பிலுள்ளவர்கள் முன்வரவில்லை.

ஊரே வெள்ளத்தில் மிதந்தாலும் பள்ளிக்கு விடுமுறை இல்லை. குழந்தைகளை வழியனுப்பும் பெற்றோர் அனுதினமும் மரண வேதனை அனுபவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசலில் இப்போதெல்லாம் யாரும் ஆரன் அடிப்பதில்லை. மற்ற நெருக்கடிகளையும் மக்கள் அதே போல் சகித்துக் கொள்ள பழகுவார்கள் என அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. தமிழகத்தின் ஏனைய நகரங்களும் சென்னையின் நிலையை நோக்கி விரைகின்றன. பிரச்னைகள் டைம் பாம்களாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment