இங்கிதம் என்ற சொல் இங்கிலாந்தில் தோன்றியதோ என்று வியக்கும் அளவுக்கு நாகரிகமானவர்கள் அந்த நாட்டு மக்கள். அப்படித்தான் நினைத்தோம். இன்று அந்த மாதிரி இல்லையாம். சராசரி பிரிட்டிஷ்காரனுக்கு தினம் ஒரு தடவையாவது பயங்கர கோபம் வருகிறது. 60 சதவீதம் பேர் அற்ப விஷயத்துக்காக கொந்தளிக்கிறார்கள். மருத்துவ நிறுவன ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. கோபத்துக்கு 5 முக்கியமான காரணங்கள்: பணம் தட்டுப்பாடு, தூக்கம் குறைவு, பசி, செல்போனில் தொந்தரவு, அடுத்தவரின் முரட்டுத்தனம். கோபம் தலைக்கேறி தன்னிலை மறப்பது, கொட்டும் வார்த்தைகளால் அடுத்தவர் கண்ணீர் விடவைப்பது, உறவை நட்பை இழப்பது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பதை பார்த்து அரசாங்கம் மிரண்டு போயிருக்கிறது. இது மொத்த சமூகத்தையும் பாதிக்கக் கூடிய ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனினும், கோபப்படாதீர்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்த அரசு தயாரில்லை. கோபத்தை அடக்குவதும் உடலுக்கு ஆபத்தாகலாம் என்பதால் இந்த தயக்கம். நகைச்சுவை உணர்வை தூண்டி மக்களை அடிக்கடி சிரிக்க வைத்தால் கோபம் குறையும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். இங்கிலாந்தில் அது சாத்தியமா தெரியவில்லை. அவர்களுக்கு காமெடியின் உச்சமே மற்றவர்களுக்கு சிரிப்பு வராத மிஸ்டர் பீன் சீரியல்தான். ஏனைய நாடுகளிலும் மக்கள் ரொம்ப கோபப்படுகிறார்கள். தமிழகத்தில் தினமும் விதவிதமான கொலைகள் நடக்கின்றன. குடும்பத்தலைவி, ஆசிரியை, நர்ஸ் போன்ற புனிதமான பொறுப்பிலுள்ள பெண்களையே கொலைகாரர்களாக்கும் அளவுக்கு கோபம் பீறிடுகிறது. வேலை கொடுத்து சம்பளம் தந்த முதலாளியின் குழந்தையை கடத்த தூண்டுகிறது ஆத்திரம். அன்றாட வாழ்க்கை அந்த அளவுக்கு கடினமானதாக , தொல்லைகள் நிறைந்ததாக , ஒழுங்குபடுத்த முடியாததாக மாறிவிட்டது. தடைகளை எதிர்த்து போராடுவதற்கான மன வலிமை குறைந்துவிட்டது. ஆதித்யா பார்த்து விழுந்து புரண்டு சிரிப்பவர்கள்கூட மின்சாரம் தடைபட்டதும் இருட்டில் வசைமாரி பொழிவதை என்னவென்று சொல்வது? யோசித்து பார்த்தால் எல்லா வகையான கோபத்துக்கும் காரணம் எதிர்பார்த்தது நடக்காமல் போவதுதான் என்பது புரியும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் ஏற்படாது. அதுவே மகிழ்ச்சிக்கு சமம்.
No comments:
Post a Comment