பாரதிய ஜனதா கட்சியின் தலைமை குழப்பத்தில் இருப்பது நன்றாக தெரிகிறது. ஊழல் புகார்களால் மத்திய அரசை திணறடித்த காலகட்டம் இத்தனை சீக்கிரம் மறையும் என்றோ, அரசு மீது ஏவிய அம்புகள் ஒவ்வொன்றாக பூமராங் போல் திரும்பி வந்து தாக்கும் என்றோ அதன் தலைவர்களில் எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. டூஜி, நிலக்கரி போன்ற வார்த்தைகளை அவர்கள் உச்சரிப்பது நின்றுவிட்டது. புகார்களுக்கு இலக்கான தலைவர் நிதின் கட்கரியை காப்பாற்றுவதா கைவிடுவதா என்பதில் இரு அணிகளாக பிரிந்து நிழல் யுத்தம் நடத்துகின்றனர். அக்கட்சியின் கையிலிருந்த ஆயுதங்களில் அநேகம் உடைந்துவிட்டதால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்பதை மட்டும் வலுவாக பிடித்துக் கொண்டு அரசின் நெற்றியில் ஒரு கோடாவது கிழிக்கலாம் என்று காத்திருந்தது. அந்த நேரத்தில்தான் திடீரென்று சி.பி.ஐ இயக்குனர் நியமன விவகாரத்தில் மூக்கை நுழைத்து காயம்பட்டிருக்கிறது பிஜேபி தலைமை. தற்போதைய சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங்கின் பதவிக்காலம் இம்மாதம் 30ம் தேதி முடிகிறது. அந்த இடத்துக்கு ரஞ்சித் சர்மாவை அரசு நியமித்துள்ளது. அதை பிஜேபி எதிர்க்கிறது. நிறுத்தி வைக்குமாறு பிரதமருக்கு அருண் ஜேட்லியும் சுஷ்மா ஸ்வராஜும் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய குழுதான் சிபிஐ இயக்குனரை நியமிக்க வேண்டும் என்று கேட்கின்றனர். மத்திய கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) -பரிசீலித்து பரிந்துரைக்கும் 3 பெயர்களில் ஒன்றை பிரதமர் தலைமையிலான நியமனங்கள் குழு தேர்வு செய்வது இப்போதுள்ள நடைமுறை. பிஜேபி சொல்லும் நடைமுறை ஒரு யோசனை என்ற அளவில் மட்டுமே நாடாளுமன்ற மேலவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது சட்டமாகுமா எப்போது ஆகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. அதுவரை சிபிஐ இயக்குனர் நாற்காலியை காலியாக வைத்திருக்க முடியுமா என்று காங்கிரஸ் கேட்கிறது. ராம் ஜெத்மலானியும் அதையே கேட்பது பிஜேபியின் நேரம் சரியில்லை என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சி என்பதால் அரசு செய்யும் எல்லாவற்றையும் எதிர்ப்பதா என்கிறார். இந்த குழப்பத்தை பார்த்தால், அன்னிய முதலீட்டை ஆதரித்து அக்கட்சியில் கோஷம் எழுந்தாலும் ஆச்சரியமில்லை.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment