Sunday, 4 November 2012

தீவிரமாகும் தீவிரவாதம்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் செயல்பாடுகள், இப்போது இந்தியாவில் உள்ள 659 மாவட்டங்களில், 203 மாவட்டங்களில் தீவிரமடைந்திருப்பதாக உள்துறை அமைச்சகமே ஒத்துக் கொள்கிறது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை!
 இந்தியாவிலுள்ள 12 மாநிலங்களில் உள்ள 84 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். வெளியில் தெரியாமல், தமிழகத்திலேயேகூட சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், வேலூர் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் தங்கள் செல்வாக்கை வளர்த்து வருகிறார்கள் என்று உள்துறை அமைச்சகத்தின் ரகசியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
 கடந்த மாதம் ஹைதராபாதில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது பிரதமர் மன்மோகன் சிங் ஏழு மாநிலங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், உள்துறை இணையமைச்சராக இருந்த ஜிதேந்திர சிங் கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்கள் அவையில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் 12 மாநிலங்களில் உள்ள 84 மாவட்டங்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதுதவிர 20 மாநிலங்களில் உள்ள 119 மாவட்டங்களில் அவர்கள் வெளியில் தெரியாமல் செயல்படுவதாகவும் தெரிவித்தார். யார் சொல்வது சரியான புள்ளிவிவரம் என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.
 இந்தியாவில், இடதுசாரித் தீவிரவாதம் தீவிரமடைந்திருக்கும் ஒன்பது மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் அலைபேசி கோபுரங்கள் அமைக்க நிதியுதவியும், அனுமதியும் கோரியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோதே முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை, அன்றைய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியால் நிராகரிக்கப்பட்டது. இப்போது ப. சிதம்பரமே நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
 மாவோயிஸ்ட் தீவிரவாதம் வலுப்பெற்றிருக்கும் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் ஒருவருக்கொருவர் சுலபமாகத் தொடர்புகொண்டு செயல்பட முடிவதில்லை என்றும், அலைபேசி வசதி இருந்தால் தீவிரவாதிகளை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது. இதற்காக தொலைத்தொடர்புத் துறையை அணுகியபோது, ஒன்பது மாநிலங்களில் சுமார் 2,200 அலைபேசி கோபுரங்கள் அமைக்க 5,800 கோடி ரூபாய் தேவைப்படும் என்று திட்டமதிப்பீடு ஒன்றை பாரத் சஞ்சார் நிகம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் அளித்தது.
 உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிராகரித்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலில், அலைபேசி வசதியை ஏற்படுத்தினால், அது பாதுகாப்புப் படைகளைவிடத் தீவிரவாதிகளுக்கு உதவியாக மாறாது என்பது என்ன நிச்சயம் என்கிற கேள்வியை எழுப்பினார் அவர். அடுத்ததாக, இவ்வளவு பெரிய முதலீட்டை அரசு அளித்து பி.எஸ்.என்.எல். அலைபேசி கோபுரங்களை அமைப்பதைவிட, அதை ஏன் ஒப்பந்தப்புள்ளி கோரி, தனியார் நிறுவனங்களை முதலீடு செய்யச் சொல்லக்கூடாது என்று கேட்டார் பிரணாப் முகர்ஜி.
 ஏறத்தாழ 2,200 அலைபேசி கோபுரங்களைப் பல கோடி ரூபாய் செலவில் அமைத்து அதற்கேற்ற வருவாய் கிடைக்காது என்பதால் தனியார் நிறுவனங்கள் இதில் அக்கறை காட்டாமல் ஒதுங்கியே இருக்கின்றன. இப்போது பி.எஸ்.என்.எல். பெரும் முதலீட்டைப் போட்டு அலைபேசி கோபுரங்களை ஏற்படுத்தினால், பிறகு பி.எஸ்.என்.எல். தனியார் மயமாக்கப்படும்போது, செலவில்லாமல் அதைப் பெற்றுக் கொள்ளலாமே என்கிற எதிர்பார்ப்பும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
 அலைபேசி கோபுரங்களை அமைப்பதா, வேண்டாமா என்று உள்துறை அமைச்சகமும், நிதியமைச்சகமும், தொலைத்தொடர்புத் துறையில் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு சில வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பிருக்கக் கூடும் என்றாலும், அது மட்டுமே அவர்களது வளர்ச்சிக்குக் காரணமாக இருக்க முடியாது.
 மாவோயிஸ்டுகள் என்று இந்தத் தீவிரவாத அமைப்புகள் தங்களை அழைத்துக் கொண்டாலும், இவர்களுக்கும் சீனாவுக்கும் தொடர்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், வெவ்வேறு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் தனித்தனியாகத்தான் செயல்படுவதாகவும், இவர்களுக்குள் எந்தவிதமான தகவல் பரிமாற்றமோ, கூட்டுத் தலைமையோ, திட்டமிடலோ இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 இந்தத் தீவிரவாத இயக்கங்களின் அசுர வளர்ச்சிக்குக் காரணம், மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்திசெய்யாமல் இருப்பதும், மக்களின் உணர்வுகளை நமது அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கத் தவறுவதும்தான். உதாரணமாக, "வேதாந்தா' நிறுவனத்துக்கு எதிராக ஆதிவாசி மக்களும், கிராமத்தவர்களும் நடத்தும் போராட்டத்தை ஒரிசாவிலுள்ள ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளமும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸýம், பாஜகவும் ஓரணியில் நின்று எதிர்க்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் "வேதாந்தா' நிறுவனத்தின் நலம் விரும்பிகளாக மாறிவிட்ட நிலையில், அந்த ஆதிவாசிகளின் போராட்டத்தைத் தீவிரவாத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் வியப்பென்ன இருக்கிறது.
 அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் இப்படியே தொழில் நிறுவனங்களின் பாதுகாவலர்களாகத் தொடருமானால், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே காணப்படும் இடதுசாரித் தீவிரவாதம் விரைவிலேயே மூன்றில் இரண்டு மடங்காக வளரக் கூடும். அலைபேசி கோபுரங்கள் அமைப்பதால் எல்லாம் தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியாது என்பதுகூட நமது ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லையே!



நன்றி: Dinamani

No comments:

Post a Comment