நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மன்மோகன் சிங் அரசை கவிழ்க்கப்போவதாக அறிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கை வெத்து வேட்டாக முடிந்திருக்கிறது. அவருடைய திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் 18 உறுப்பினர்களும் மற்றொரு கட்சியின் 3 உறுப்பினர்களும் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மக்களவையில் குறைந்த பட்சம் 50 உறுப்பினர்களாவது கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கொடுத்தால் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை எதிர்த்து இந்த தீர்மானம் கொண்டுவர மம்தா திட்டமிட்டு இருந்தார். பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா அன்னிய முதலீட்டை எதிர்க்கிறது. இடதுசாரி கட்சிகளும் எதிர்க்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக போன்ற கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இந்த சூழ்நிலையில் மன்மோகன் அரசை வீழ்த்த தனக்கு எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும் என மம்தா தப்புக் கணக்கு போட்டார். இதற்காக மேற்கு வங்கத்தில் இன்னமும் செல்வாக்குடன் இருக்கும் தனது பரம விரோதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் ஏற்க அவர் தயாராக இருந்தார். வேண்டுகோள் விடுத்தார். அதற்கும் மேலே ஒரு படி சென்று, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி கொண்டு வந்தால் அதை ஆதரிக்க தனது கட்சி தயார் என்றும் அறிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு வரையில் மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலை நாடு வேடிக்கை பார்த்தது.
ஆனால் மம்தாவின் தந்திர வலையில் பாரதிய ஜனதாவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் விழவில்லை. மம்தாவுடன் நட்புறவு கொண்டுள்ள அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூட, நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டுதான் ஆதரிப்பது பற்றி முடிவு செய்வோம் என எச்சரிக்கையுடன் கூறியிருந்தார். மம்தாவின் முயற்சி தோல்வியில் முடிந்திருப்பது, எதிர்க்கட்சி அரசியலுக்கு பழகிப்போன அவர் ஆளும் அரசியலுக்கு இன்னும் பக்குவப்படவில்லை என்பதையே காட்டுகிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment