ஏழ்மையை குறைக்கும் திட்டங்களுக்காக இந்தியாவுக்கு அளித்துவரும் உதவியை நிறுத்த இங்கிலாந்து அரசு எடுத்துள்ள முடிவு அந்நாட்டில் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.நீண்ட காலமாக இங்கிலாந்து நமக்கு உதவி வருகிறது. இந்தியா இப்போது ஏழை நாடு அல்ல; நடுத்தர வருமான நாடு என்று உலக வங்கி 2009ம் ஆண்டு தகுதி உயர்வு அளித்தபோது, அப்படியானால் உதவியை நிறுத்திவிடலாமா என்று இங்கிலாந்து அரசில் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆதரவு இல்லாததால் உதவி தொடர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரி6,000 கோடி வந்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, நாம் ராக்கெட், அணு ஆயுத ஏவுகணை, அறிவியல் செயற்கை கோள்கள் செலுத்தும் காட்சிகள் அங்கும் ஒளிபரப்பாவதால் மக்களிடம் சலசலப்பு. அங்குள்ள கம்பெனிகள் பல வேலைகளை இந்தியாவுக்கு மாற்றியபோது சலசலப்பு அதிகமானது. இந்திய தொழிலதிபர்கள் இங்கிலாந்து கம்பெனிகளையும் அரண்மனைகளையும் வாங்க தொடங்கியதும் குரல்கள் சத்தமாக ஒலித்தன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று இங்கிலாந்து அமைச்சர்கள் விசாரித்தபோது, 'நாங்களா உதவி கேட்டோம்? நீங்களாக தருகிறீர்கள். நிறுத்துவதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை' என்றது இந்திய அரசு. இந்தியாவே எழை நாடுகளுக்கு ரி8,000, ரி10,000 கோடி அள்ளி வழங்கும்போது நமது உதவியை எதிர்பார்க்காதுதான் என்று இங்கிலாந்து அரசும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அங்குள்ள மக்கள் இதை எதிர்ப்பது ஒரு ஆச்சரியம். 'இந்திய அரசு ஏழைகளை மேம்படுத்த எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் லஞ்ச ஊழலால் அந்த திட்டங்களின் பலன்கள் ஏழைகளை அடைவதில்லை. அதனால் நமது உதவியை நிறுத்தக்கூடாது' என பலர் கூறியுள்ளனர். 'இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை பெருகினாலும், ஏழைகளுக்கு எந்த நன்மையும் இல்லை. சம்பாதிப்பதில் குறிப்பிட்ட சதவீதமாவது ஏழைகளுக்காக செலவிடும் நல்ல பழக்கம் இந்தியர்களிடம் பரவவில்லை' என சுட்டிக் காட்டுகின்றனர்.'வரி செலுத்துவது என்றாலே இந்தியர்களுக்கு பிடிக்காது. பிறகெப்படி அரசு செலவு செய்ய முடியும். ஆகவே நம் உதவியை நிறுத்தக்கூடாது' என்று பலர் வாதிடுகின்றனர். இந்த வாதங்களால் இங்கிலாந்து அரசின் முடிவு மாறப்போவதில்லை. நாம்தான் மாற வேண்டும்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment